வரலாற்றில் சிதைவாக்கமும் முரண் இயக்கமும் - புனைபாவை நாவலை முன்வைத்து (கட்டுரை)

              


மனித இனம் சமூகப் படிமலர்ச்சியில் செயற்படுகாரணியாக இருந்து சமூக மாற்றத்திற்கு முக்கியமான மூல ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இப்படிமலர்ச்சியில் உழைப்பு என்பது மனித இனம் கைக்கொண்ட பிரதான செயல்முறையாக அமைகிறது. உழைப்பினடிப்படையில் சமூகப் படிமலர்ச்சி நிலைகளைப் புராதனப் பொதுவுடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் என்று மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் வகை பிரிப்பர். இவ் ஒவ்வொரு சமூக நிலையிலும் உற்பத்திச் சக்திகளும் அதனால் மக்களிடையே உற்பத்தி உறவுகளும் வித்தியாசப்படுகின்றன. டி.டி.கோசாம்பி வரலாறு குறித்துத் தனது விளக்கத்தைத் தரும் போது இந்த உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களைக் கால வரிசைக் கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு என்று குறிப்பிடுகிறார். வரலாற்றுப் போக்கில் இந்த உற்பத்திச் சக்திகள் மக்களில் எந்தப் பிரிவினர் வசம் உள்ளதோ அவர்களே ஆளும் வர்க்கம் அல்லது சுரண்டும் வர்க்கம் எனவும் உற்பத்திச் சக்திகளின் மீது எந்த வித உரிமையுமற்று இருக்கிற உழைக்கும் மக்கள் பிரிவினர் அடிமை வர்க்கம் அல்லது சுரண்டப்படும் வர்க்கம் எனவும் கொள்ள முடியும். இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடே வர்க்கப் போராட்டங்களாக உருவெடுக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் பல வர்க்கங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டே இரண்டு வர்க்கங்கள் மட்டும்தான் சமூகப் படிமலர்ச்சியில் தொழிற்படுகின்றன என்பதை ந.முத்துமோகனின் பின்வரும் கூற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும்: ஒவ்வொரு சமூகத்திலும் பல வர்க்கங்கள் இருக்கலாம். இருப்பினும் ஒரு சமூகம் குறிப்பான இரண்டு எதிரெதிர் வர்க்கங்களையே தனது வர்க்கங்களாகக் கொள்ளுகிறது: ஒன்று ஆளும் வர்க்கம், மற்றது ஒடுக்கப்படும் வர்க்கம். ஒன்று சுரண்டும் வர்க்கம், மற்றது  சுரண்டப்படும் வர்க்கம். அச்சமூகம் உருவெடுக்கும்போது கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் அந்த இரண்டு வர்க்கங்களும் உருவாகின்றன. அச்சமூகம் இயல்பாகத் தொழில்பட வர்க்கங்களும் அவசியமானவை என்ற தோற்றத்தை வழங்குகின்றன. படிப்படியாக அவற்றுக்கு இடையில் வர்க்க நலன்கள் வேறுபடுகின்றன, அவை எதிரெதிரானவையாக பரிணமிக்கின்றன. ஒரு கட்டத்தில் தீவிர முரண்களாக மாறுகின்றன. அம்முரண்பாடுகளின் தீர்வே சமூக அமைப்பின் மாற்றம் அல்லது சமூகப் புரட்சி எனப்படுகிறது. (2018, பக். 176-177)

ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்கிற இவ்விரண்டு சமூக வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டை விரோதமான முரண்பாடுகள் என்று வரையறுப்பார் நா. வானமாமலை. மேலும், அவர் வர்க்க சமுதாயத்தில் அடிமைகள் - ஆண்டைகள், உழவர்கள் - நிலக்கிழார்கள், முதலாளிகள் - தொழிலாளர்கள்  ஆகிய ஜோடிகளை விரோத முரண்பாடுடைய வர்க்கங்களாக அடையாளப்படுத்துகிறார். (2017, பக். 179-180). ஆனால் இச்சமூகப் படிமலர்ச்சி நிலைகளில் தோன்றும் மாற்றங்கள் ஒரே நேர்க்கோட்டில் நிகழாது என்பதும் அது திருகல் வளர்ச்சியுடையது என்பதையும் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் கோடிட்டுக் காட்டியிருக்கின்றனர். ஆக, வரலாறு முழுக்கவும் இத்தகைய திருகல் வளர்ச்சியுடைய மாறுதல்களையும் அவற்றில் தொழிற்படும் முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டுதான் ஒவ்வொரு சமூகமும் தன் இயக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் பல இனக்குழுச் சமூகங்கள் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் இனக்குழுத் தன்மையிலிருந்து மாறி வந்திருக்கின்றன. தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இம்மாறுதல்கள் நடந்திருக்கின்றன என்பது ஆய்வாளர்கள் அனைவரின் ஒருமித்த முடிவு. புனைபாவை நாவலில் பிற்காலச் சோழர் காலத்தில், குறிப்பாகக்  கொங்குப்பகுதியில் ஏற்பட்ட சமூகப் படிமலர்ச்சிநிலையின் ஒரு கட்டமான இனக்குழுச் சமூக நிலையில் ஏற்படும் மாற்றங்களும் அவற்றில் தொழிற்படும் முரண்பாடுகளும், அவற்றின் தனித்துவமான விளைவுகளும்  இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாக அமைகிறது.

புனைபாவை அறிமுகம்   

      தமிழின் சமகால எழுத்தாளரான  இரா. முருகவேள் கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராகப் பணிபுரியும் இவர் தொடக்கத்தில் மொழிபெயர்ப்பாளராகத் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். எரியும் பனிக்காடு, ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இவரின் முதல் நாவலான மிளிர்கல் சிலப்பதிகாரத்தின் கண்ணகி நடந்த பாதையை மையமாக வைத்து இரத்தினக்கற்களின் அரசியலைப் பேசியதன் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து செம்புலம், முகிலினி முதலிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். அந்த வரிசையில் இறுதியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் நாவலே ‘புனைபாவை’. இந்நாவல் கொங்குப் பகுதியில் வரலாற்றுக் காலம் தொட்டே செய்யப்பட்டு வந்திருக்கக்கூடிய கொடுமணல் உருக்குவாள் தொழில்நுட்பம் பிற்காலச் சோழர்களின் இறுதிக் காலத்தில் எப்படி இங்கு ஏற்பட்ட சமூக, அரசியல் குழப்பங்களால் மறக்கடிக்கப்பட்டது என்பதைக் குறித்துப் பேசுகிறது. அதே போல் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்களின் மூலம் அந்தத் தொழில்நுட்பம் முகலாய நாடுகளுக்குக் கைமாறியதையும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இங்கு ஏற்பட்ட முகலாயப் படையெடுப்பில் வலிமையான உருக்குவாள்களின் மூலம் முகலாயர்கள் தமிழகத்தை வென்ற வரலாற்றையும் இந்நாவல் பதிவு செய்கிறது. வெறுமனே ஆட்சியாளர்களின், அரசியல் குழப்பங்களின் வரலாற்றை மட்டும் பேசாமல் அவற்றின் காரணங்களையும்  அதற்கு இணையாக அவற்றின் விளைவுகள் வெகுசனமக்களைப் பாதித்த சமூகப் பண்பாட்டு வரலாற்றையும் வெளிப்படுத்தி வெகுசன மக்களின் வரலாறாக - ஒரு சமூக வரலாறாக இந்நாவல் பேசுகிறது.

 

நாவல் பேசும் சமூகப் பண்பாட்டு அரசியல்              

      நாவலின் தொடக்கத்தில் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழ நாட்டிற்கும் கருவூருக்கும் இடையே நடந்த போர் காட்டப்படுகிறது. சோழப் பேரரசின் கீழே சிற்றரசனாக இருந்த கொங்குச் சோழன் சோழப்பேரரசு வலிமை குன்றத் தொடங்கியதும் தன்னைச் சுதந்திர அரசனாக அறிவித்துக் கொண்டதே போருக்குக் காரணம். கொங்குச் சோழனுக்குப் பின்னிருந்து இயக்குபவர்கள் கொங்குப் பகுதியில் புதிதாக உருவாகியிருக்கக் கூடிய நிலக்கிழார்களான வேளாளர்கள். இவர்களின் தூண்டுகோலின் பேரில் தன்னைச் சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்ளும் கொங்குச் சோழன் மீது (மா. இராசமாணிக்கனாரின் கருத்துப்படி கி.பி. 1194 இல்) மூன்றாம் குலோத்துங்கன் படையெடுக்கிறான். போரில் கருவூரை வென்ற குலோத்துங்கன் குறுநில மன்னர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளாளர்களை அடக்க நினைக்கிறான்.

      கொங்குப் பகுதியில் ஆதிக்கத்தோடு இருக்கும் இவ்வேளாளர்கள் சோழப்பேரரசின் படையில் வீர்ர்களாக, தளபதிகளாக இருந்து அவர்களின் சேவைகளுக்காக பெரும் நிலப்பரப்புகளைக் கொடைகளாகப் பெற்றவர்கள். அந்நிலங்களில் தற்போது தனி மன்னர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் சோழப் பேரரசு வலிமை குன்றியிருக்கும்  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதன் கீழ் கட்டுப்பட்டு இருக்க மறுக்கின்றனர். எனவே, பெரும்நிலக்கிழார்களான வேளாளர்களின் சுதந்திரப் போக்கை அடக்க புதிதாக வேளாளர்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறான் குலோத்துங்கன். இதனால் போரில் தோல்வியடைந்த கொங்குச் சோழனிடம் நிபந்தனைகளுடன் கருவூரைத்  திரும்ப ஒப்படைக்கிறான். அதில் முக்கியமான நிபந்தனை கொங்குப் பகுதியில் புதிதாகப் பழங்குடிகளை நிலக்கிழார்களாக, வேளாளர்களாக உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். அந்தவகையில் புனைபாவை நாவலின் குறிப்பிட்ட ஒரு பகுதி இருளர் பழங்குடிகள் ’வேளாள’ சாதிகளாக உருமாறியதைக் காட்டுவதன் மூலம் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பழங்குடிகள் நிலவுடைமையாளர்களாக, ‘வேளாள’ சாதிகளாக உருமாற்றம் அடைந்த சமூகப் பண்பாட்டு வரலாற்றை கோடிட்டுக் காட்டுகிறது.

 

இனக்குழு முறைமை சிதைவடைதலுக்கான தொடக்கம்

கொங்குப் பகுதியில் உள்ள இருளர்பதி ஒன்றிற்கு சமண முனிவர்கள் சிலர்  சென்று இருளர்களைச் சோழப் பேரரசின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். அப்போது முனிவர்கள் இருளர்களுக்கு அது வரை அவர்கள் பார்த்தும் சுவைத்தும் அறியாத நெல்சோற்றைக் கொண்டுவந்து கொடுத்து அவர்களை உண்ணச் செய்தனர். நெல் சோற்றின் சுவையில் தன்னை மறந்து இருந்த  இருளர்களிடம் காட்டிற்குள் வேட்டையாடுவதை விட்டுவிட்டு நிலையாகத் தங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, சோழப் பேரரசனான ராஜராஜனை அரசனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினர். இங்கு வேட்டைச் சமூகமான இருளர் பழங்குடி ஒன்றை ஏன் தங்களின் வேட்டைத் தொழிலை விட்டு விட்டு நிலையாக ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யத் தூண்ட வேண்டும்? சோழப் பேரரசு போன்ற பெரிய பேரரசு ஒன்றிற்கு அதற்கான தேவை ஏன் ஏற்படுகிறது? வரலாற்றில்தான் இதற்கான பதில் இருக்கிறது.

பல்லவர்கள் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையே நடந்த போட்டிகள் அவற்றை ஆதரித்த வணிக-வேளாள வர்க்கப் போட்டியாகவும் இருந்தது. இதில் சைவம் வென்று சமணத்தை வீழ்த்தியது என்றால் அவற்றை ஆதரித்தவர்களிடையே நடந்த போட்டியில் வேளாண்மை வர்க்கம் வென்றது. வேளாண்மை வர்க்கம் தன் வெற்றியை நிலைநிறுத்துவதற்கான தேவை ஏற்பட்டது. அந்தத் தேவையை நிறைவு செய்வதற்காகத் தோன்றியதுதான் சோழப்பேரரசு. இதனைப் பேராசிரியர் கைலாசபதி சோழப்பேரரசு தோன்றிய காலத்தில் இருந்த அரசியல் சூழ்நிலைகளைப் பின்வருமாறு விளக்குகிறார்: முதலாவது வெற்றிபெற்ற நிலவுடைமை வர்க்கத்திற்கு உறுதியும் நிலைபேறுமுள்ள அரசியல் நிறுவனம் ஒன்று தேவையாக இருந்தது. முத்தரையர் போன்ற பழைய குறுநில மன்னரும், நிருபதுங்கன் போன்ற பலவீனமான பல்லவரும், சிறீமாற சிறீவல்லபன் போன்ற பாண்டியரும், விசயாலயன் போன்ற சோழச்சிற்றரசரும், கங்கமன்னரும் பிறரும் ஒயாமல் போரிட்டுக் கொண்டிருப்பது பாதகமான செயலாகப்பட்டது. உறுதியும் பலமும் கொண்ட நிலப்பரப்பு அவசியமாயிருந்தது. பண்டைப் புகழ்படைத்த பாண்டியரால் அதனைச் செய்ய முடியவில்லை. அன்றைய அரசியற் சதுரங்கத்தில் விசயாலயச் சோழனை அடுத்து வந்தவர்கள் அதனைச் செய்தனர். வடக்கிருந்து படையெடுத்துவந்த இராட்டிர கூடரைத் தடுத்து நிறுத்தி, வேங்கி இராச்சியத்தை இணைத்து, கங்கநாட்டை அடிபணியச் செய்து, வடக்கேயுள்ள துங்கபத்திரைக்குக் கீழே சோழர் தம் பலத்தைக் காட்டினர். கி.பி. 985-ம் ஆண்டில் அரசுக்கட்டில் ஏறிய அருள்மொழிவர்மன் எனப்பட்ட முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலே சோழப் பேரரசு சோழ ஏகாதிபத்தியமாக மாறத்தொடங்கிவிட்டது. தன்னை எதிர்த்த பாண்டிய-சேர-ஈழ-நாடுகளின் ஒருமித்த முயற்சியை அவன் முறியடித்தான்; இரண்டு படையெடுப்புகளின்போது அவன் பாண்டியரை வென்று, சேரமன்னர் கர்வத்தையடக்கினான். காந்தளூரிலும் சேரர் பெருந்தோல்வியுற்றனர். அடுத்துக் கடற்படையெடுப்பின் மூலம் வட இலங்கையைக் கைப்பற்றினான். தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்துப் புலத்தி நகரத்தை - பொலன்னறுவையை ஈழமண்டலத்தின் தலைநகராக்கினான். வடக்கே நுளம்பபாடி, கங்கபாடி, தடிகைபாடி முதலிய பிரதேசங்களையும், இன்றைய மைசூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினான். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மாலைத்தீவுகளையும் வென்றான். கி.பி. 1014-ல் கட்டி முடிக்கப் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புகழ்மணந்த புவிச்சக்கரவர்த்தியின் புகழ்ச்சின்னமாக விளங்கியது. (பேரரசும் பெருந்தத்துவமும் (கட்டுரை) http://www.project.jfn.ac.lk/tdp/book.php)

நிலவுடைமை வர்க்கத்தின் தேவையை நிறைவேற்றத் தோன்றிய சோழப் பேரரசின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாடு முழுக்க இனக்குழுச் சமூகங்கள் சிதைவடைந்து தனியுடைமை உருவாக்கப்பட்டது. தனியுடைமை உருவாக்கத்தில் சோழர்கள் காலத்தில் புகுத்தப்பட்ட புதிய வேளாண் உத்திகளும் பெரிய அளவில் கோவில்களுக்கும் மடங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் கொடுக்கப்பட்ட நிலக்கொடைகளும் முக்கியமான காரணமாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக இது முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்தில்தான் மிகப்பெரிய அளவில் நிலத்தில் தனியுடைமை எனும் முறை உருவாக்கப்பட்டது என்று வீ. மாணிக்கம் போன்ற ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

      சோழப்பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த ‘குறிஞ்சி விரவிய முல்லை நிலப்பகுதியைக் கொண்ட வன்புலமான’ கொங்குப்பகுதியும் இம்மாற்றத்திற்குத் தப்பவில்லை என்றே கூற வேண்டும். இங்குப் புதிதான வேளாண் நிலங்கள் ‘காடு கொன்று’ உருவாக்கப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக இனக்குழுக்கள் பல உழுகுடிகளாக, நிலக்கிழார்களாக மாற்றப்பட்டன. எனவே, ஒரு விரிந்த பேரரசு உருவாக்கத்தில் நிலவுடைமையாளர்களின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு அந்தப் பேரரசை நிலைநிறுத்துவதற்கும் நிலவுடைமையாளர்களின் பங்கும் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்குக் கருத்தியல் அடிப்படையில் துணை நிற்கக்கூடிய சமயங்களின் உதவியை சோழப் பேரரசு நாடியது தவிர்க்க இயலாதது என்பது இவற்றின் பின்புலத்தில் வைத்து ஆராய்கையில் நம்மால் அவதானிக்க முடிகிறது. மேலும், ஒரு பேரரசு தன் எல்லைப்பரப்பை விரிப்பதற்கு காட்டுக்குள் வாழும் இனக்குழுக்களை போர்கள் போன்று பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் முறைகளைத் தவிர்க்க விரும்பும். இத்தகைய உத்தி முறை வரலாற்று நெடுகிலும் பேரரசு உருவாக்கத்தில் தவிர்க்கமுடியாததாக அமைகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. புதிய நிலவுடைமையாளர்களை பழங்குடிகளிலிருந்து உருவாக்கும் முயற்சியின் ஒரு தொடர்ச்சியாகத்தான் சமண முனிவர்கள் காட்டிற்குள் வாழும் இருளர்களை உழுகுடிகளாக மாற்ற முயற்சிக்கின்றனர்.  சமண முனிவர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கிறான் அப்போதைய இருளர்பதியின் தலைவனான பெரிய மூப்பன். ஆனால் பெரிய மூப்பன் மறைவிற்குப் பிறகு தலைவனான குன்னிடுங்கன் மூப்பன் காலத்தில் நிலைமைத் தலைகீழாக மாற்றம் பெற்றது.

வர்க்கங்களின் தோற்றமும் முரண்பாடுகளும்

இருளர்பதியின் தலைவனான குன்னிடுங்கன் மூப்பன் அடிக்கடி அருகிலிருக்கும் வணிகர்களின் ஊரான ஐயப்பொழிலில் நடக்கும் சந்தைக்குச் செல்லத் தொடங்கியவன் அங்கிருந்த மண்டபங்களும், செங்கல் கட்டடங்களும், வண்ண வண்ண ஆடைகளும், குதிரைகள், மாடுகள், எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகளையும் பார்த்து ஒரு வித ஈர்ப்புக்குள்ளாகிறான். இந்தச் சமயத்தில் ஒரு நாள் வணிகர்களில் ஒருவனான விடங்கச் செட்டி என்பவனை மூப்பன் சந்திக்கிறான்.  செட்டி அப்போது சோழராட்சிக் காலத்தில் செல்வாக்கோடு இருந்த வணிகக் குழுவான  ’திசைஆயிரத்து ஐந்நூற்றுவரில்முக்கியமானவன் ஆவான். இவன் வெளிநாடுகளுக்கு மற்ற பொருட்களுடன் இரும்பையும் முக்கியமாக பழைய கொடுமணல் தொழில்நுட்பத்துடன் செய்யப்படுகிற உருக்கு வாள்களையும் ஏற்றுமதி செய்கின்றவன். அதனால் இரும்பு மண் கிடைக்கும் இடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறான். இந்தச் சமயத்தில் மூப்பனைச் சந்திக்கும் செட்டி காட்டிலிருந்து கொண்டு வந்திருக்கிற கல்லை விலைக்கு வாங்கிக் கொண்டு தாராளமாகவே அவனுக்குத் தேவையான இரும்புகளையும் கத்திகளையும் கொடுக்கிறான். மற்ற வணிகர்களைப் போலில்லாமல் விடங்கச்செட்டி மூப்பனிடம் இயல்பாகப் பழகியது அவனுக்கு வியப்பாய் இருந்தது. மேலும், இரும்பு செய்வதற்குத் தேவையான மண்ணை காட்டிற்குள் தனக்காகத் தேடிக் கொடுக்கும்படி செட்டி அவனிடம் கேட்டுக் கொள்கிறான். செட்டியின் வீட்டில் உண்ட உணவும் அவனுடைய மனதிற்கு நெருக்கமான பேச்சும் மூப்பனையும் அவனுடன் வந்தவர்களையும்  செட்டியின்பால் ஈர்ப்பை ஏற்படுத்தி அவன் பேச்சைக் கேட்கும்படி செய்கிறது.

விடங்கச்செட்டி சொன்ன இரும்பு உள்ள மண்ணைக் காடு முழுவதும் தேடி ஒரு நாள் கண்டறிந்து மூப்பனும் அவன் நண்பர்களும் அவனிடம் சொல்லினர். அதற்குப் பிறகு இருளர்பதியினரைக் கொண்டு இரும்பு மண் உள்ள இடத்தைக்  காடெரித்து விவசாயம் செய்ய வைத்து, அங்கிருந்த மண்ணை செட்டிக்கு இரும்பு தயாரிக்க அனுப்பி வைக்கிறான் மூப்பன். இப்படியாக செட்டியுடன் சேர்ந்த மூப்பனின் நடவடிக்கைகளும் நாளடைவில் படிப்படியாக மாற்றம் பெற்றன.

      பின்பு ஒரு நாள் தன் பதியினரில் இளைஞர்களை மட்டும் தனியே அழைத்து அவர்களுக்குக் கச்சையுடன் வாள்களைக் கொடுத்தான் மூப்பன். கட்டையைப் போலவே இருக்கும் இரும்புக் கருவிகளையும் கற்கருவிகளையும் பயன்படுத்தியவர்களுக்கு நேர்த்தியான கைப்பிடியுடனும், உறையுடனும் கூடிய குறுவாள் கிடைத்தற்கரிய ஒரு பொருளாகத் தோன்றியது. மேலும், அவர்களை இரும்புமண் எடுக்கும் பகுதிக்கு காவல் வீரர்களாக மூப்பன் நிறுத்துகிறான். இது போன்ற சிறப்புச் சலுகைகள் காட்டுவது இருளர்பதியின் வழக்கமில்லையாதலால் ஓர் இனக்குழு வாழ்வியலைக் கொண்டிருந்த  அந்த  இருளர்களுக்கு இது  இனம் புரியாத ஒரு விலகலுணர்வை ஏற்படுத்துகிறது.

      இனக்குழுச் சமூகங்கள் தங்களின் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருட்களைத் தேடுவதோ அதை சேமித்து வைப்பதையோ பழக்கமாகக் கொள்வதில்லை. எனவே, அதற்குத் தகுந்தாற்போல்தான் அவர்களின் ஆயுதங்களும் மற்றக் கருவிகளும் இருக்கும். அதே போல் அவர்களுக்குள் தொழிலடிப்படையில் எந்த விதப் பிரிவினையும் இருக்காது. அவரவர்க்கு எந்த ஆயுதத்தை உபயோகிக்கத் திறமை இருக்கிறதோ அதை உபயோகிப்பர். ஆனால் இங்கு மூப்பனும் அவன் நண்பர்களும் தங்கள் உறவினர்களுக்கும் மகன்களுக்கும் வாள்களைக் கொடுத்துக் காவல் வீரர்களாக நிறுத்துகின்றனர். இதனால் அவர்களுக்குள் அதுவரையில் இல்லாத ஏற்றத்தாழ்வு உணர்வு ஏற்படுவதை நாவலாசிரியர் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: குறுவாள் கிடைத்தவர்களின் கால்கள் தரையில் பாவவில்லை. அதைக் கையில் எடுத்துப் பார்ப்பதும், உறையில் போடுவதும், உறையையும் இடைக்கச்சையையும் தடவிப் பார்ப்பதுமாகத் தீரவில்லை அவர்களுக்கு. அவர்களது குரல் உற்சாகத்துடன் உரத்து ஒலித்தது. நடையில்  முன்னெப்போதுமிராத கம்பீரம் தோன்றிவிட்டது. குறுவாள் கிடைக்காதவர்கள் மீது கிடைத்தவர்கள் சற்றே வருத்தமும், அதே நேரம் தங்கள் அதிர்ஷ்டம் குறித்த பெருமையும் கலந்த பார்வையை வீசியபடி நடமாடினர். மேலும், கத்தி கிடைக்காதவர்களின் கண்களில் பொறாமைக் கனல் வீசிக்கொண்டிருந்தது. வழக்கமாக இனம் இது போன்ற போட்டி பொறாமைகளைத் தவிர்க்க முயலும். ஆனால் மூப்பனும் அவன் குழுவும் இதைப் பற்றிக் கவலையே கொள்ளவில்லை. சொல்லப்போனால் இந்தக் கச்சை கட்டியவர்களை அவர்கள் சிறப்புச் சலுகை பெற்றவர்களாகவே நடத்தினர். (முருகவேள். இரா, 2020, ப.82)

      இந்தப் பாரபட்சமான அணுகுமுறை மேலும் மேலும் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக ஒருநாள் மூப்பனும் அவன் நண்பர்களும் தன் பதியினரை பழைய இடத்தை விட்டுப் புது இடத்திற்கு வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்கின்றனர். புது இடத்தில் செட்டியின் ஆட்கள் ஏற்கனவே அடிமைகளாக இருந்த பறையர்களை அங்கு அழைத்து வந்து இருளர்களுடன் சேர்த்து வேலை செய்ய வைக்கின்றனர். இப்படியாக இருளர்களும் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இங்கு முதல்முதலாக பெரிய அளவில் வேலைப்பிரிவினை தோன்றுகின்றது. பெரிதும் வளர்ச்சியுற்றிராத உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் உள்ள இனக்குழுச் சமூக முறை இப்படியான வேலைப்பிரிவினை தோன்றுகிறபோது சிதைவடையத் தொடங்குகிறது என்பதை மேற்கண்ட செய்திகளின் மூலம் உணர முடிகிறது.

      இந்த ஏற்றத்தாழ்வை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களில் மூப்பனுக்கு ‘நெடுமுடிவேளான்’  என்கிற சிறப்புப் பட்டம் கொடுக்கப்பட்டு நிலக்கிழானாக அரசால் அங்கீகரிக்கப்படுகிறான். மூப்பனின் நண்பர்கள் ஒரு சிலருக்கு மட்டும் காடுகளை அழித்து வேளாண் நிலங்களாக மாற்றும் உரிமை வழங்கப்படுகிறது.  இனக்குழுச் சமூக முறைமை சிதைவடைந்து ஒரு சிலர் நிலவுடைமை வர்க்கத்தினராக  உருவாகுவதையும், அவ்வர்க்கத்திற்கு உழைக்க பழங்குடிகளில் இருக்கும் மீதிப் பேர் அடிமைகளாக மாற்றமடைவதும் நாவலாசிரியரின் மேற்கண்ட செய்திகள் மூலம் உறுதிப்படுகிறது.

     இது முந்தைய இனக்குழு முறைமையில் இருக்கும்போது இருந்த ‘பொதுவுடைமை முறை’ இப்போது அழிந்துத் தனியுடைமை தோன்றுகிற நிலையைக் காட்டுகிறது. தனியுடைமையின் ஆகப்பெரும் பிரதிநிதியாக, தனக்கென நிலங்களையும் சொத்துக்களையும் அளப்பரிய அதிகாரங்களையும் கொண்டவனாக மூப்பன் அங்கீகரிக்கப்படுவதிலிருந்து இது மேலும் உறுதிப்படுகிறது. இதனை மூவுலகையும் ஆளும் குலோத்துங்கச் சக்கரவர்த்தியின் பெயரால் கொங்கு மண்டலத்தில் செங்கோல் செலுத்தி வரும் புகழ் சோழ மன்னனின் வழி வந்த விக்கிரம சோழ மன்னரின் அதிகாரியான ஆனூர் தலைவர் நெடுமுடி வேளான் சொல்லானது சக்ரவர்த்தியின் உத்தரவாகக் கருதப்பட்டு மதிக்கப்பட வேண்டும். வேளானுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள், அவர் சொல்லுக்கு எதிர் சொல்பேசுபவர்கள் ஒறுக்கப்படுவார்கள். இது மண்டலாதிகாரி உத்தரவு. (முருகவேள். இரா, 2020, ப.88) என்ற மண்டலாதிகாரியின் ஆணையிலிருந்து அறிந்துகொள்ள முடியும். எனவே, இங்கு ஆளும் வர்க்கம் என்ற புதிய வர்க்கம் இனக்குழுச் சிதைவைத் தொடர்ந்து உருவாகி  விடுகிறது என்பது புலப்படுகிறது.     

அடிமை வர்க்க முரண்பாடுகள்

     இந்தியாவிலும் தமிழகத்திலும் அடிமைமுறைகள் பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு வடிவங்களில் நடைமுறையில் இருந்திருக்கின்றன. ஆனால் இங்கு நிலவிய அடிமை முறை என்பது கிரேக்க, ரோமானிய அடிமை முறை போல் வெளிப்படையான அடிமை முறையாக இல்லாமல் ஒரு மறைமுகமான அடிமை முறையாக இருந்திருக்கிறது என்று  சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பண்டையக் காலத்தில் மேலை நாடுகளில் நிலவிய அடிமை முறைக்கும் இந்தியாவில் நிலவிய தீண்டாமை என்கிற அடிமை முறைக்கும் உள்ள வித்தியாசத்தை அம்பேத்கர் பின்வருமாறு ஒப்புநோக்குகிறார்: அடிமை முறை ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை, ஆனால் தீண்டாமை கட்டாயமானது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லையென்றால் அவர் மீது கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தீண்டாதவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தீண்டாதவராகப் பிறந்துவிட்டால் தீண்டாதவருக்கு உள்ள எல்லாத் துன்பங்களையும் அவர் அனுபவித்தேயாக வேண்டும். (சிவசுப்பிரமணியன். , 2021, ப.104).

     கடந்த காலத்தில் சாதியடிப்படையிலான ‘தீண்டாமை’ அடிமை முறை  தமிழகத்தில் மிகக் கடுமையாக நடைமுறையில் இருந்திருக்கிறது. இத்தகைய அடிமைகளை இடைக்காலத்தில் ‘தீண்டா அடிமைகள்என்றனர். இது தவிர்த்து கோவிலுக்கு ஊழியம் செய்வதற்கென்று இருந்த தேவரடியார்கள் ‘தெய்வீக அடிமைகள்’  எனப்பட்டனர்.

     இவர்களைத் தவிர்த்து பல்வேறு தொழில்நிலைச் சாதிகளும் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. வெள்ளாளர்களும்கூட அடிமைகள் ஆக்கப்பட்டு விற்கவும் வாங்கவும் பட்டனர் என்று கூறும் நொபுரு கராசிமாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ளும் ஆ. சிவசுப்பிரமணியன் (2021, ப.109) சாதியப் பிரமீட்டில் மேலடுக்கில் இருந்த பிராமணர்கள், வேளாளர்கள் என்போரிடம் இருந்தும் அடிமைகள் உருவாகியிருந்தனர் என்று கூற இடமுண்டு என்கிறார்.

     இவற்றிலிருந்து தமிழகத்தில் ‘அடிமை’ என்கிற நிலை தனித்துவமான முறையில் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது. அதே வேளையில் இங்கு அடிமைகள் இருந்தார்கள் என்பதும் அது மற்ற நாடுகளில் இருப்பதைப் போல அடிமைச்சமுதாயமாக இருக்கவில்லை என்பதும் புலனாகிறது (மேலது, ப. 111). இந்தப் பின்புலத்தில் இருளர்களில் பெரும்பகுதிப் பேர் அடிமைகளாக மாற்றப்பட்டதை இங்குப் பொருத்திப் பார்க்கவேண்டிய தேவை உள்ளது.

     மற்ற இருளர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு அந்த நிலத்திலேயே வேலை வாங்கப்படுவதன் மூலமும் இருளர்களில் ஒரு சிலர் மட்டும் நிலவுடமையாளர்களாக மாற்றப்படுவதும் வர்க்கப் பிரிவினைகள் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கின்றன. பொதுவாகத் தனியுடைமையின் தொடர்ச்சியாக வர்க்கப் பிரிவினைகள் உருவாவது தவிர்க்க இயலாததாகிறது.  இது சமூகப் படிமலர்ச்சியின் ஒரு நிலை. சமூகப் படிமலர்ச்சி முறைகளை ஆராயும் மார்க்சிய ஆய்வாளர்கள் உலகம் முழுதும் உள்ள எல்லாச் சமூகங்களின் வளர்ச்சியிலும் இந்நிலை தவிர்க்க இயலாதது என்கின்றனர். இந்தப் புராதனப் பொதுவுடைமைச் சமூக அமைப்பின் சிதைவே சமூகப் படிமலர்ச்சியின் தொடக்கம் என்பதை  வரலாற்றியலார் இர்பான் ஹபிப்பின் (2015, ப. 91) பின்வரும் கூற்றிலிருந்து புரிந்துகொள்ள முடியும்: புராதனப் பொதுவுடைமைக் காலத்தில் பொருள் உற்பத்தி என்பது மிகக் குறைவான அளவில் நடைபெற்றது. கூட்டுச்செயல்பாட்டு அமைப்பு முறையே நிலவி வந்ததால் அப்போது வர்க்கங்கள் உருவாகவில்லை. இந்தப் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயத்தின் அழிவிற்குப் பிறகுதான் முரண்பட்ட நலன்களைக் கொண்ட தனித்தனியான வர்க்கங்கள் உருவாகத் தொடங்கின. ஆக, புராதனப் பொதுவுடமைச் சமூகங்கள் அழிந்துபோனதற்கு மிக முக்கியமான காரணமாக தனியுடைமையின் தோற்றமே என்பதை  இங்கு உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தனியுடைமையின் விளைவாக உருவாகும் ஏற்றத்தாழ்வுள்ள  இரண்டு வர்க்கங்களுக்கிடையே முரண்பாடுகளும் தோன்றுவது இயல்பு என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

     அடிமைகளாக மாற்றப்பட்ட இருளர்பதியினர் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர்.  முக்கியமாகத் தங்களுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, கையில் சவுக்குடன் எந்நேரமும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கும் காவல் வீரர்களைக் கண்டால் அவர்களுக்குப் பயமும் எரிச்சலுமே தோன்றுகிறது. சுதந்திரமான பழங்குடிகளாக இருந்த இருளர்களுக்குத் தங்கள் உடல்கள் எந்நேரமும் கண்காணிக்கப்படும் உடல்களாக மாறியது தங்களின் சொந்த உடல்கள் கூட தங்களுக்குச் சொந்தமில்லை என்பதைப் புரிய வைக்கிறது.

     இருளர் பதியினரில் ரேசன் என்ற இளைஞனும் மூப்பனின் மகளான மல்லியும் காதல் கொண்டிருந்தனர். பதியில் எவராவது காதலித்தால் அதைத் தடை செய்வதோ ஏற்றுக்கொள்ள மறுப்பதோ இருந்தது கிடையாது. ஆனால் இப்போது மூப்பன் நெடுமுடி வேளானாக மாறிய பின் ரேசனும் மல்லியும் சந்தித்துக்கொள்ளத் தடை விதிக்கிறான். தனியுடைமை தோன்றியதற்குப் பின்பு ஆணின் அதிகாரம் அளப்பரியதாக மாறி ஆணாதிக்கம் தோன்றி விடுவதோடு மட்டுமில்லாமல் பெண் உடைமையாக மாற்றப்படுகிறாள். உடைமையாக மாற்றப்படுவது என்பது பெண்ணின் உடல் மீது செலுத்தப்படும் மேலாதிக்கமே என்பதை இங்கு விளக்கத் தேவையில்லை. மேலும், இங்கு பெண்ணின் உடலும் அடிமைகளின் உடல்கள் போலவே கண்காணிக்கப்படும் உடலாக மாறிவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருமணம் என்பது பெற்றவர்களின் கட்டுப்பாட்டுக்கு உரிய ஒன்றாக மாறிவிடுகிறது.

     அவர்களின் உடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட உடல்களாக மாற்றப்பட்டது மட்டுமில்லாமல் அவர்களின்  இனக்குழு விதிகள் புறக்கணிக்கப்படுவதையும் சகிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் பச்சை மரத்தை வெட்டச் சொல்கின்றனர். காய்ந்த மரத்தை வெட்டுவார்களேயொழிய பச்சை மரத்தை  அதற்குமுன் அவர்கள் வெட்டியது கிடையாது. எனவே, அதனைச் செய்ய மறுத்து ரேசனுடன் மற்ற எல்லா இளைஞர்களும் சேர்ந்துகொண்டு தங்களை வேலை வாங்கும் வீரர்களை எதிர்த்து நிற்கின்றனர். அடிமைகளாக மாற்றப்பட்டாலும் இனக்குழு மனநிலையிலிருந்து அவர்கள் இன்னும் வெளிவராதவர்களாகவே இருக்கும்போது இத்தகைய புறக்கணிப்புகள் அடிமைகளாக இருக்கும் இருளர்களை வெகுண்டெழச் செய்கிறது.  வீரர்களுக்கும் இருளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்களை அடித்துத் துரத்துகின்றனர்.

     பின்பு ரேசன் மல்லியை அழைத்துக்கொண்டு மற்ற இருளர்களுடன் காட்டுக்குள் ஓடி விடுகிறான். காட்டிற்குள் செல்லும் அவர்களைப் பின்தொடர்ந்து வரும் வணிகப்படை அவர்களைக் கண்டுபிடித்துச் சுற்றிவளைக்கிறது. பயிற்சி பெற்ற போர் வீரர்களைக் கொண்ட வணிகப் படைகளிடம் வேட்டையாடப் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்ட அவர்கள் எளிதாகத் தோற்கடிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் கொல்லப்பட மற்றும் சிலர் காட்டுக்குள் ஓடிவிடுகின்றனர். பிடிபட்ட இருளர் பெண்கள் வணிகப் படை வீரர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். காவல் வீரர்களுடன் ஏற்பட்ட மோதல் என்பது இனக்குழு வாழ்வில் சுதந்திரமான இயங்கு வெளியைக் கொண்டிருந்த இருளர்களுக்கு, முன்பு தாங்கள் கொண்டிருந்த இனக்குழு விதிகள் புறக்கணிக்கப்பட்டு தங்கள் உடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட, கண்காணிக்கப்படும் அடிமை உடல்களாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட உணர்ச்சிவெடிப்பாக மட்டும் தான் இருக்கிறது. இத்தகைய முரண்பாடு ஒரு அகமன எழுச்சி மட்டுமே என்பது இங்கு நோக்கத்தக்கது. பேராசிரியர் ந. முத்துமோகனின் வார்த்தைகளில் இதனை மேலும் விளக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்: வர்க்க உணர்வு தொடக்கத்தில் புறச்சூழல்களால் உருவாக்கப்பட்ட தனிநிலையாக, தன்னிலையாக, அகவய உணர்வாகத் தோன்றுகிறது. அந்நிலையில் அது இன்னொரு கூட்டத்தோடு போட்டி போடும் ஒன்றாகவே தொழில்படும் (2018, ப.182). துல்லியமற்ற மனநிலையில் உருவான இருளர்களின் போராட்டம் அடிமைநிலையை ஏற்றுக்கொள்ளாத  தங்களின்  இனக்குழு மனநிலையில் ஏற்பட்ட முரண்பாடுகளால் உருவானது என்பதை இதனால் இன்னும் துலக்கமாக  உணர்ந்துகொள்ள முடியும். 

      இங்கு ஒரு கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. வெறுமனே ஒரு தற்காலிகமான அகமன எழுச்சியாக மட்டுமே இருக்கிற, இருளர்களின் போராட்டத்தை ஒரு வர்க்கப் போராட்டமாக நாம் அடையாளப்படுத்திக் கொள்ள இயலுமா என்பதே அது. ஒடுக்கப்படும் வர்க்கம் ஒன்று தெளிவான திட்டமிட்டமிடுதலோடு செயல்படாமல் தன் மனப்போக்கிற்கு ஏற்பப் போராடித் தோல்வியைத் தழுவுவது என்பதை வர்க்கப் போராட்டமாக வரலாற்றில் அடையாளப்படுத்த முடியுமா என்றால் முடியும் என்று தான் பதிலிறுக்க முடியும். ஏனென்றால் வெற்றி பெற்ற ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக எழுதப்படும் வரலாற்றுக்கு மாறாக தோற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை எழுத வேண்டிய தேவை புதிய வரலாற்று எழுதியலில் அறிவுறுத்தப்படுகிறது. இதனை உணர்த்த விரும்பிய நாவலாசிரியர் மேற்கண்ட இருளர்களின் போராட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் இத்தகைய தோல்வியுற்ற வரலாறுகளிலிருந்து தான் நிகழ்காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது என்ற உண்மையை புலப்படுத்துகிறார்.

வேளாண் வர்க்க முரண்பாடுகள்   

      காட்டிற்குள் இருக்கும் பதியைவிட்டு  வெளியேறியதாலும் மற்ற இருளர்களை அடிமைகளாக மாற்றிக் கடுமையாக வேலை வாங்கிக் கொடுமைப்படுத்தியதாலும் இருளர்களின் குலதெய்வமான கரட்டியம்மே கடுங்கோபம் கொள்கிறாள். வேளாண் குடிகளாக அவர்கள் புதிதாக வந்து குடியேறிய ஆனூரில் காளியாக மாறி ஆங்காரம் கொண்டு சுற்றி அலைந்து அவ்வூர் மக்களைப் பழிவாங்குகிறாள். நெடுமுடி வேளானாக மாறிய மூப்பனையும் அவனுடன் இருப்பவர்களையும் கரட்டியம்மேவின் கோபம் அஞ்சி நடுநடுங்கச் செய்கிறது. அங்கிருக்கிற எல்லோரும் பதியினை விட்டு விட்டுத் தாங்கள் வந்தது மிகப்பெரிய தவறு என்று நினைத்துப் புலம்புகின்றனர். இதைப் பிரதிபலிக்கும் விதமாக மூப்பனின் மனைவி மூப்பத்தி பின்வருமாறு சொல்கிறாள்: ஊழிக்கோபம் கொண்டு ரத்தம் குடிக்க அலைந்து திரியும் அந்த பைசாச ரூபம் கொண்ட கரட்டியம்மேவை எத்தனை நாள் சமாளிக்க முடியும்? காட்டை அழித்ததும், பதிவனத்தைப் பாழடைந்துபோக வைத்ததும் மன்னிக்க முடியாத தவறு. அம்மே ஒருநாளும் நம்மை மன்னிக்க மாட்டாள். ஊரை விட்டு வெளியேறினால் மட்டுமே குழந்தை குட்டிகளைக் காப்பாற்ற முடியும் (முருகவேள். இரா, 2020, ப.81). ஏற்கனவே அரைகுறையான மனதுடன் புது இடத்தில் தங்கியிருக்கும் அவர்களுக்கு இது மேலும் பயத்தைக் கொடுக்கிறது.

      இனக்குழு வாழ்வியலை மேற்கொண்டிருந்த இருளர் பழங்குடிகள் வேளாண் குடிகளாக மாற்றப்பட்டிருப்பினும் இனக்குழு மனநிலையிலிருந்து இன்னும் மாற்றம் பெறாத அவர்களுக்குள் ஏற்படுகிற ஒரு தடுமாற்ற உணர்வாகத்தான் இதனைக் கொள்ளமுடியும். புறத்தே வர்க்க உடல்களையும் அகத்தே  இனக்குழு மனங்களையும் கொண்டிருக்கும் அவர்கள் ஒருவிதமான கலவையான மனநிலையில் பரிதவிக்கின்றனர். இவர்கள் கொண்டிருக்கிற தெய்வ அச்சத்தை உளவியலாளர் யூங்கின் கூட்டு நனவிலிக் கருத்தாக்கத்தைக் கொண்டு விளங்கிக்கொள்ள முடியும்: ஃப்ராய்டின் அகநிலை சுயமாகத் தோன்றுவது என்றால், யூங்கின் அகநிலை முன்னோர்களால் உருவாக்கப்பட்டதாகும். இரண்டிலும் கடந்தகாலமே அடிப்படை என்றாலும் யூங்கின் கடந்த காலம் மனித இனத் தொன்மையைக் குறிப்பதாகும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், படிமலர்ச்சித் தொடர்புடைய விலங்கினம் வழியில் உருவானதே கூட்டு நனவிலியாகும். (அன்பரசன். அ, 2019, ப. 5 அச்சிடப்படாத ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேடு,) யூங்கின் கருத்துப்படி மனித இனத் தொன்மையுடைய கூட்டு நனவிலியின் தொல்படிம உருக்கள் தெய்வ அச்சமாக இங்கு வெளிப்படுகிறது. தெய்வம் என்கிற ஆழ்படிமம் அவர்களின் முந்தைய இனக்குழு நம்பிக்கைகளிலிருந்து அவர்களுக்குள் உருவான புறத்தோற்றத்தின் கூட்டுநனவிலி வெளிப்பாடு. இந்நம்பிக்கைகளே தங்களின் தெய்வம் தங்களைத் தண்டிக்கிறது என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

      வாழ்நாளெல்லாம் சைவத்தைப் பரப்புவதே தன் பணியாகக் கொண்டிருக்கிற சிவனடியார் ஒருவர் காளியாக ரூபம் கொண்டு நிற்கும் கரட்டியம்மேவை சிவனுடைய பேரைச் சொல்லி அடக்குகிறார். காளியை ஈசனுடைய ஒரு அம்சமாக இருக்கிற உமையினுடைய வடிவம் என்றும்  சொல்கிறார்.  உங்கள் கரட்டியம்மா காளிதேவி ஆவாள். அவள் இந்தச் சிறு காட்டுக்கு மட்டும் அரசி. எம்பெருமான் ஈரேழு பதினான்கு உலகையும் ஆள்பவன். தில்லையில் நடமாடித் தோற்றவள் இந்தக் காளி. இவள் உமையின் வடிவம். எம்பெருமானின் மனைவி. இவள் போன்ற மூவாயிரம் சிறு தெய்வங்களை ஒடுக்கி வெற்றி கொண்டே எம்பெருமான் தில்லையில் கோவில் கொண்டுள்ளார். காளி கோபம் கொண்டிருக்கிறாள். ஆனால் ஈசனின் அருள் அவள் கோபத்தைத் தணிக்கும். விரைவில் அவள் சினம் தணிந்து ஈசனின் இடப்பக்கம் உமையாக அமர்வாள். எம்பெருமானின் ஆயிரமாயிரம் அடியார்களின் அடிப்பொடிக்கும் ஈடாகாத கடையனாகிய என் முன்னால்கூட வரமுடியாது இந்தக் காளிதேவியால். அப்படியானால் ஈசனின் சக்தி எத்தகையது எனத் தெரிந்துகொள்ளுங்கள் (முருகவேள். இரா, 2020, ப.175) என்றும் சொல்கிறார். பழங்குடியிலிருந்து வேளாண் குடிகளாக மாறிய மூப்பனையும் அவனுடன் இருந்த மற்றவர்களையும் கரட்டியம்மாவின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றும் சைவத்தின் பிரதிநிதியான சிவனடியார், அவர்களை முழுமையாக சைவத்திற்கு மாற்றி இனக்குழு மனநிலையில் தடுமாறிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு பண்பாட்டுச் சமரசத்தை ஏற்படுத்துகிறார். இங்கு நிறுவன சமயமான சைவம் இனக்குழுப் பண்பாடு ஒன்றை முழுமையாக உட்செரித்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

      இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஈசனின் அருளை வியந்து சைவத்தைத் தழுவிக்கொண்ட மூப்பன் முழுமையாக ‘நெடுமுடிவேளானாக’ மாறுகிறான். மேலும், புதிதாக சைவத்தைத் தழுவிக்கொண்ட அவர்கள் தங்களின் குலமுதல்வனாக கண்ணப்பநாயனாரை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் வழிபடுவதற்காக சங்கீஸ்வரமுடையார் என்ற சிவன் கோவிலும் கட்டித் தரப்படுகிறது. இவையெல்லாவற்றின் மூலம் வேளாண் குடிகளாக மாறி இனக்குழு மனநிலையில் ஏற்பட்ட தடுமாற்றத்தினின்று விடுபடத் தேவையான கருத்தியல் பலத்தை சைவ சமயம் அவர்களுக்கு அளித்து வர்க்க உடல்களை சமய உடல்களாக நிலைநிறுத்துகிறது.  

      மேலும், சோழர்களின் காலத்தில் உருவான நிலவுடைமை வர்க்கத்தை நிலைநிறுத்துவதற்குச் சைவ சமயத்தின் கருத்தியல் ரீதியிலான வரலாற்றுப் பாத்திரத்தைப் புனைவின் வழியே வெளிப்படுத்த நினைத்த நாவலாசிரியர் நெடுமுடிவேளானாக, நிலக்கிழாராக மாறி, புதிதாக உருவான நிலவுடைமையின் பிரதிநிதியாக இருக்கும் மூப்பனையும் அவனுடன் இருக்கிற மற்ற இருளர்களையும் சைவக் குடிகளாக மாற்றமடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

       பல தரப்பட்ட  மக்களையும்  பேரரசு உருவாக்கத்தில் நெறிப்படுத்தித் தன் அங்கமாகக் கொள்ள  சைவ சமயம் பல வகையில் சோழ மன்னர்களுக்குக் கருத்தியல் ரீதியிலான உதவியைச் செய்திருக்கிறது. சைவமும் நிலவுடைமைச் சமூகங்களும் பின்னிப்பிணைந்த ஒரு உறவை சோழர்கள் காலத்தை ஆராயப்புகும் எவரும் கண்டு கொள்ள முடியும்.

      பிற்காலச் சோழர்களின் காலத்தில் கொங்குப்பகுதியில் புகுத்தப்பட்ட புதிய வேளாண் உத்திகளும் நிலக்கொடைகளும் இங்கு வேளாண் சமுதாயங்கள் உருவாகிட வழிவகுத்தன என்ற ஸ்டைனின் கூற்றை ஏற்றுக்கொள்ளும் வீ.மாணிக்கம் (2014, ப. 311) இதன் விளைவாக இங்கு முகிழ்த்த புதிய உற்பத்தி உறவுகள், கொங்கின் பண்டைய இனக்குழு அமைப்பின் சிதைவைத் தொடங்கி வைத்தன என்றும் கூறுகிறார். இனக்குழு அமைப்பின் சிதைவில் உருவான  நிலவுடைமைச் சமூக அமைப்பு சோழப்பேரரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று என்பது ஈண்டு குறிப்பிடத்தகுந்தது. அதற்குத் தத்துவார்த்தத் தளம் அமைத்துத் தந்து, நிலவுடைமை வர்க்கத்தினரையும் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களையும் தன்னுள் ஈர்த்துச் சமூகத்தில் பரவலாக பேரரசு உருவாக்கத்திற்கான கருத்தியல் மேலாண்மையை உறுதி செய்தது சைவ சமயம். பல்லவர் காலத்திலேயே தொடங்கிவிட்ட  இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை பேராசிரியர் க. கைலாசபதியின் விளக்கத்தின் மூலம் மேலும் நன்றாகத் தெளியமுடியும்: தமிழரல்லாரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும், வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்டதாகவும் பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒரு விதமான “தேசிய” உணர்வு தோன்றக் காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம். சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கோனாடு, மழ நாடு முதலியவற்றிலிருந்தெல்லாம் சிவனடியார்கள் பல்லவர் காலப் பக்தி இயக்கத்திலே பங்கு பற்றினர் என்பதைப் பெரியபுராணம் வாயிலாக நாமறிவோம்; அந்தணர், குறுநில மன்னர், சைவர், இடையர், ஏகாலியர், குயவர், சாலியா், பாணர், புலையர், செக்கார், சான்றார், நுளையர், வேடர், மாத்திரப் பிராமணர், மற்றும் மரபறியாதவர் பலரும் ஒன்று சேர்ந்து கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி நின்றனர் என்றும் திருத்தொண்டர் புராணத்தின் மூலம் நாம் அறிகின்றோம். சுருங்கக் கூறின் தென்னகத்திலே வலுவுள்ள சோழராச்சியம் தோன்றுமுன்னரே அதற்கான தேவைகள் தோன்றிவிட்டன. அந்தத் தேவைகளின் காரணமாகவே சோழப் பேரரசு அமைந்தது எனலாம். விசயாலயன் அரசு கட்டிலேறிய காலத்திலே இது தொடங்கிவிட்டது. (பேரரசும் பெருந்தத்துவமும் (கட்டுரை), http://www.project.jfn.ac.lk/tdp/book.php) பல்வேறு சமூகங்களை ஒருங்கிணைத்த சைவ சமயம் பழங்குடிகளையும் தனக்குள் உள்ளிழுத்துக் கொண்டு சைவக்குடிகளாக மாற்றியது என்பதற்குக் கண்ணப்பநாயனார் ஓர் உதாரணம். இதனைப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் சைவ சமயத்தின் மேலாதிக்கம் உச்சம் பெற்றிருந்தது  என்பதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

       அனவரத விநாயகம் பிள்ளை சைவ சமயம் குறித்து எழுதுகையில் சைவ சித்தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும் என்கிறார். தமிழ்மரபில் தோன்றி தமிழ்நிலத்தில் உருவான ஒரு பேரரசு உருவாக்கத்தில் கருத்தியல் அடிப்படையில் தன் ஆதரவைக் கொடுத்த சைவ சித்தாந்தம் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கொங்குப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட  மாற்றத்திற்கும் பெருமளவில் துணை புரிந்தது என்பதில் ஐயமில்லை. அந்த விதத்தில் இதற்கு முன்னமே நிலக்கிழானாக மாறிய நெடுமுடிவேளான் சிவனடியாரால் தற்போது சைவக் குடியாக மாற்றப்பட்டதும் பழைய இனக்குழு முறைமைகளைத் துறந்ததும் இதன் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்.  

       ஒருவிதத்தில் இனக்குழுச் சமூகங்களின் சிதைவு என்பது பொருளாதார மாற்றங்களோடு மட்டுமே நின்றுவிடக்கூடியதில்லை; அது சமூகத்தின் மேற்கட்டுமானமான சமயம், பண்பாடு போன்றவற்றையும் குறிப்பிட்ட அளவில் பாதிக்கும் என்ற சமூகவியல் உண்மையை நாவலாசிரியர் தன் புனைவாக்கத்தின் வழியே இங்கு உணர்த்திச் செல்கிறார்.

       மற்ற நாடுகளில் ஏற்பட்டது போல் இங்கு இந்தியாவில் புதிதாக ஒரு வர்க்கம் உருவாகும்போது அது வர்க்க அடையாளங்களை மட்டுமே கொண்டிருக்குமா என்ற கேள்விக்கு, இல்லை என்றே வரலாறு பதில் சொல்கிறது. ஏனெனில் சோழப்பேரரசின் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முன்னாள் மலைப் பழங்குடிகள் கி.பி.11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நிலங்களை வாங்கியோ அல்லது கைப்பற்றியோ நிலவுடமையாளர்களாக மாறியிருக்கிறார்கள் (நொபொரு கராஷிமா, 2017, ப. 33) இவர்கள் நாளடைவில் புதிய சாதிகளாக மாறியிருக்கும் வாய்ப்புண்டு. ஏனெனில் இங்கு நிலவுடைமை வர்க்கம் தோன்றியபோது அவ்வர்க்கம் சாதியப் பண்புகளையும் தன்னுள் செரித்துக் கொண்டது என்பதே வரலாற்று உண்மை. அதனையே இந்நாவலும் பிரதிபலிக்கிறது. மூப்பனும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் நிலக்கொடைகள் அளிக்கப்பட்டு நிலவுடைமையாளர்ளாக மாற்றப்பட்ட பின்பு அவர்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள் நாளடைவில் புதிய சாதிகளாக மாறி விடுகின்றன. மூப்பனாக இருந்த நெடுமுடிக்கும் அவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் படைத்தலை வெள்ளாளர் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. படைத்தலை வெள்ளாளர் ஒரு சாதியாக உட்கார, கால் நடை மேய்க்கும் பிரிவு புள்ளி வெள்ளாளர்  என்று பெயர் பெற்றது. (முருகவேள். இரா, 2020, ப. 179)  இது ஏற்கனவே வர்க்க உடல்களாகவும் சமய உடல்களாகவும் மாற்றம்பெற்று நாளடைவில் சாதிய உடல்களாகவும் இந்திய, தமிழ்ச் சூழலில் மாற்றம் பெற்றுவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முக்கியமாகப் பிற்காலச் சோழர் காலத்தில் கொங்குப் பகுதியில் நிலக்கிழார்களாக பொருளாதாரத்தில் உயர்ந்த குழுக்கள் தங்களை ’வேளாளர்’ சாதியாக மாற்றிக் கொண்ட வரலாற்று நிகழ்வை நாவலாசிரியரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.  

       சாதிகளாக உருமாறிய இக்குழுக்கள் நாளடைவில் தம்முள் இறுகி மூடுண்ட குழுக்களாக மாறி சமூக அதிகாரத்தைக் கோருகின்றன. சாதியப் பண்புகளில் இம்மாதிரியான மாற்றம்பெற்ற குழுக்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் மேலாதிக்கம் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கின என்பதை கி.பி.1258 ஆம் ஆண்டின் செங்கமம் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது (நொபொரு கராஷிமா, 2017, ப. 34) இக்கல்வெட்டு ‘அனைத்துச் சாதிகள்என்ற தலைப்பிட்டு ஒவ்வொரு சாதிக் குழுக்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கொண்டு வரும்போது அதில் ‘இறு(ரு)ளர்கள்’ பற்றிய குறிப்பும் வருவது இக்கூற்றுக்கு வலுச்சேர்க்கும் விதமாக அமைகிறது.  அது மட்டுமல்லாமல் இந்திய, தமிழ்ச் சூழலில் சாதியும் வர்க்கமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து வரலாற்றுப் போக்கில் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் இங்கு நினைவுகூறல் தகும்.

’புனைபாவை’ என்னும் சமூக வரலாற்றுப் பனுவல்       

      புதிய வரலாற்று எழுதியலில் அனைத்துக் கலைப் படைப்புகளும் கலைப் படைப்புகள் அல்லாதனவும் ஒரே தன்மையிலேயே வைத்துப் பேசப்படுகின்றன. அனைத்தையும் ’பனுவல்’ என்பதாகவே புரிந்து கொள்கின்றனர் புதிய வரலாற்றியத் திறனாய்வாளர்கள். புதிய வரலாற்று எழுதியலுக்கான இப்பார்வை எழுத்திலக்கியங்கள், ஆய்வுகள் மட்டுமல்லாமல் வாய்மொழி வழக்காறுகள் மற்றும் இன்ன பிற ஆவணங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ‘பனுவல்’ என்பதாக எடுத்துக் கொண்டு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமூக வரலாற்று வரைவுக்கான சில அடிப்படைகளை நல்குகிறது.

       அந்த வகையில் வரலாற்று ஆய்வுகள், வாய்மொழி வழக்காறுகள்   ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூக வரலாற்றுப் பனுவலே ’புனைபாவை’ புதினம். ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வைத்துக் கொண்டு அவற்றில் உள்ள இடைவெளிகளைத் தன் புனைவின் மூலமாகவும் வழக்காறுகளின் மூலமாகவும் ஆய்வுப் பார்வையோடு இட்டு நிரப்பி கொங்குப் பகுதிக்கான ஒரு சமூக வரலாற்று வரைவைத் தன் நாவலின் மூலம் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் இரா. முருகவேள்.

      மேலும், இடைக்காலத் தமிழக வரலாற்றில் கொங்குப் பகுதியில் உருவான சமூகப் பண்பாட்டு அரசியல் மாற்றங்களினால் ஏற்பட்ட ‘வேளாளர்களின்’ சாதிய உருவாக்க வரலாற்றைத் தன் நாவலில் பேசுவதன் மூலம் நிகழ்கால ’வேளாளர்’ ஆதிக்க சாதி எதிர்ப்பு அரசியலுக்கான விவாதத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் ஆசிரியர்.  

முடிவுரை

உழைப்பினடிப்படையில் சமூகத்தின் படிமலர்ச்சி நிலைகளை புராதனப் பொதுவுடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் என்று மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் வகை பிரிப்பர். இப்படிமலர்ச்சி நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் நேர்கோட்டில் நிகழாமல் திருகல் வளர்ச்சியுடையதாக இருக்கிறது. இச்சமூகப் பிரிவுகளிடையே நிகழும் முரண்பாடுகளே வர்க்கப் போராட்டமாக அமைகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவில் வரலாற்றுப் போக்கில் பல இனக்குழுச்சமூகங்கள் தங்கள் நிலைகளிலிருந்து மாறி வந்திருக்கின்றன. அந்த வகையில் கொங்குப் பகுதியில் பிற்காலச் சோழர் காலத்தில் சமூகப் பண்பாட்டு அரசியல் மாற்றங்களினால் படிமலர்ச்சி நிலையின் ஒரு பகுதியாக இனக்குழுச் சமூகம் சிதைவடையத் தொடங்கிய பின்பு ஏற்பட்ட முரண்பாடுகளும் அவற்றின் விளைவுகளும் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசு வலிமை குன்றியதால் இதைப் பயன்படுத்திக் கொண்டு கொங்குப் பகுதியை ஆண்டு வந்த கொங்குச் சோழன் தன்னைச் சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கிறான். கொங்குச் சோழனைத் தூண்டிவிட்டவர்கள் அப்போது கொங்குப் பகுதியில் குடியேறிய பெரும் நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களான வேளாளர்களே ஆவர். கொங்குச் சோழன் மீது படையெடுத்து அவனை வெற்றி கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் கொங்குப் பகுதியின் வேளாளர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க புதிதாக வேளாளர்களை உருவாக்க நினைக்கிறான். கருவூரைத் திரும்பவும் கொங்குச் சோழனுக்கே கொடுத்த குலோத்துங்கன் பழங்குடிகளை ‘வேளாளர்’களாக மாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். அந்த வகையில் பழங்குடிகள் ‘வேளாளர்’களாக மாற்றப்படும் சமூகப் பண்பாட்டு வரலாற்றை வெளிப்படுத்தத் தன் புனைவாக்கத்தின் மூலம் இருளர் பழங்குடியொன்றை வேளாளர்களாக மாற்றப்படுவதைக் காட்டுகிறார் நாவலாசிரியர்.

கொங்குப் பகுதியில் உள்ள வேட்டைச் சமூகமான இருளர் பழங்குடி ஒன்றை வேளாண்மை செய்யச் சொல்லி சமண முனிவர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ராஜராஜ சோழனைத் தங்கள் பேரரசனாக ஏற்றுக் கொள்ளவும் சொல்கின்றனர். சோழப் பேரரசு உருவானதே நிலவுடைமையின் தேவையை நிறைவேற்றவே ஆகும். சோழப் பேரரசில் முக்கியமாக ராஜராஜ சோழன் காலத்தில் புகுத்தப்பட்ட புதிய வேளாண் உத்திகளின் மூலமும் நிலக்கொடைகள் மூலமும் மிகப் பெரிய அளவில் நிலத்தில் தனியுடைமை தோற்றம் பெற்றது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மாற்றத்திற்கு சோழரின் ஆட்சியின் கீழிருந்த கொங்குப் பகுதியும் தப்பவில்லை. நிலவுடைமையின் தேவையை நிறைவேற்றத் தோன்றிய சோழப் பேரரசிற்குத் தன் நிலைபேற்றுக்காக புதிது புதிதாக நிலவுடைமை வர்க்கத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் காடுகளுக்குள் வாழும் பழங்குடிகளை உழுகுடிகளாக மாற்றினர். இதற்குச் சமயங்களின் ஆதரவை நாடியதற்கு அடையாளமாகத்தான் இங்கு சமண முனிவர்களின் செயலைப் பார்க்க வேண்டும்.  

      விடங்கச்செட்டி என்கிற வணிகனின் பழக்கத்தால் காட்டிற்குள் இரும்பு மண் இருக்கும் இடத்தைக் கண்டு சொல்கிறான் இருளர்பதியின் தலைவனான குன்னிடுங்கன் மூப்பன். பின்பு மூப்பனுக்கும் அவனுடைய நெருங்கியவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு நாளடைவில் குன்னிடுங்கன் மூப்பனும் அவன் நண்பர்களுக்கும் காடுகளை அழித்து நிலங்களாக மாற்றி விவசாயம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. மேலும், மூப்பனுக்கு ’நெடுமுடிவேளான்’ என்கிற சிறப்புப் பட்டம் கொங்குச் சோழனின் அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது. இதனால் இருளர்ப் பதியினரிடையே பிரிவினை தோன்றுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியினர் அடிமைகளாக மாற்றப்பட்டும் மற்றவர்கள் நிலவுடைமையாளர்களாக மாற்றப்பட்டும் விடுவதால் அங்கு வர்க்கப் பிரிவினைகள் தோன்றி விடுகின்றன.

பழங்குடி மனநிலையில் உள்ளவர்கள் திடீரென்று நிலவுடைமை வர்க்கமாகவும் அடிமை வர்க்கமாகவும் மாறுகிற போது தடுமாற்ற உணர்வுகளை அடைகிறார்கள். தாங்கள் அடிமைகளாக மாற்றப்பட்ட பின்பு தங்களின் உடல்கள் கண்காணிக்கப்படும் உடல்களாக மாறி விட்டதைக் கண்டும், தங்களின் இனக்குழு விதிகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டும் பொறுக்க முடியாமல் காவல் வீரர்களை எதிர்த்துச் சண்டையிடுகின்றனர். வீரர்களை அடித்துத் துரத்தி விட்டு காட்டுக்குள் ஒடிவிடுகிற அவர்கள் வணிகப் படையால் துரத்தி வந்து பிடிக்கப்படுகின்றனர். அவர்களால் எளிதாகத் தோற்கடிக்கவும் படுகின்றனர். இவர்களின் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாலும் திட்டமிட்டு நடத்தப்படவில்லையென்பதும் அவர்களின் போராட்டம் வெறுமனே அகமன எழுச்சியினால் மட்டுமே உருவானது என்பதும் புலப்படுகிறது.

மற்றொரு பக்கம் நிலவுடைமை வர்க்கத்தினராக மாற்றப்பட்டவர்கள் வேறுவிதமான முரண்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இருளர்களின் குலதெய்வமான கரட்டியம்மே அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இருளர்ப் பதியினை விட்டுவிட்டு வந்ததால் கடுமையாகக் கோபம் கொண்டு அவர்களைப் பழிவாங்குகிறாள் என்று எண்ணுகின்றனர். இது தெய்வம் தொடர்பாக அவர்களின் கூட்டுநனவிலியில் பதிந்துள்ள படிம உருக்களே அப்போது வெளிப்பட்டு அவர்களை அச்சுறுத்துகின்றன. பழங்குடி மனநிலையிலிருந்து இன்னும் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கும் மூப்பனையும் அவனுடன் இருப்பவர்களையும் காப்பாற்றும் விதமாக சைவ அடியார் ஒருவர் வந்து அவர்களைக் கரட்டியம்மேவின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றி அவர்கள் அனைவரையும் சைவத்திற்கு மாற்றுகிறார். ஏற்கனவே வர்க்க உடல்களாக மாறியிருக்கும் அவர்களின் உடல்கள் இப்போது சமய உடல்களாகவும் மாற்றப்படுகின்றன. வர்க்க உடல்களில் ஏற்பட்ட தடுமாற்ற உணர்வைத் தடுப்பதற்காக சைவ சமயம் தன் கருத்தியல் பலத்தைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு பண்பாட்டுச் சமரசத்தை ஏற்படுத்துகிறது. இனக்குழுப் பண்பாடு ஒன்று நிறுவன சமயமான சைவத்தால் உட்செரிக்கப்படுவதனையும் இங்குக் காண முடிகிறது.

இந்திய, தமிழ் மரபில் தொழிலடிப்படையில் ஏற்பட்டிருந்த சாதியமைப்பு நாளடைவில் பிறப்பினடிப்படையிலானதாக மாற்றம் பெற்று விட்டது. பிற்காலச் சோழர்களின் காலத்தில் சில சாதிக்குழுக்கள் சோழர்களின் இராணுவத்தில் சேர்ந்ததன் மூலமும் நிலக்கொடைகள் பெற்றதன் மூலமும் சிறப்புச் சலுகைகள் பெற்று அதிகாரம் பெற முயற்சித்தன. மேலும், சில சாதிக்குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்புகளாகச் செயல்பட முயற்சித்தன. இதற்குச் சான்றாக இரண்டு கல்வெட்டுகள் குறித்து ஆதாரங்களோடு கட்டுரையில் பேசப்பட்டது. இக்கல்வெட்டுக்களில் மலைப்பழங்குடிகள், ‘இறு(ரு)ளர்கள்’ ஆகியோர்களைப் பற்றிய குறிப்புகள் இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைகிறது.  இந்த அடிப்படையில் நாவலில் சைவர்களாக மாறிவிட்ட இருளர்கள் இப்போது படைத்தலை வெள்ளாளர்கள், புள்ளி வெள்ளாளர்கள் என்று சாதிகளாக மாற்றம் பெற்று விட்டதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இதன் மூலம் பிற்காலச் சோழர் காலத்தில் கொங்குப் பகுதியில் நிலக்கிழார்களாக பொருளாதாரத்தில் உயர்ந்த குழுக்கள் தங்களை ’வேளாளர்’ சாதியாக மாற்றிக் கொண்ட வரலாற்று நிகழ்வை இக்கட்டுரையில் புலப்படுத்தப்பட்டது.  ஒரு பழங்குடியினம் வர்க்க உடல்களாக, சமய உடல்களாக இறுதியில் சாதியுடல்களாக மாற்றம் பெறுவதிலிருந்து இந்திய, தமிழ்ச் சூழலில் சாதியும் வர்க்கமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாக இருக்கிறது என்பதை இன்றைய பொருத்தப்பாட்டுடன் புரிந்துகொள்ள முடிகிறது.

புதிய வரலாற்று எழுதியலில் எழுத்திலக்கியங்கள், ஆய்வுகள் மட்டுமல்லாமல் வாய்மொழி வழக்காறுகள் மற்றும் இன்ன பிற ஆவணங்கள் ஒவ்வொன்றும் ஒரு ’பனுவலாக’ எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பார்வை ஒரு சமூக வரலாற்று வரைவுக்கான சில அடிப்படைகளைத் தருகிறது. அந்த வகையில் வரலாற்று ஆய்வுகள், வாய்மொழி வழக்காறுகள்   ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூக வரலாற்றுப் பனுவலே ’புனைபாவை’ புதினம் என்று கட்டுரையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 மேலும், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வைத்துக் கொண்டு அவற்றில் உள்ள இடைவெளிகளைத் தன் புனைவின் மூலமாகவும் வழக்காறுகளின் மூலமாகவும் ஆய்வுப் பார்வையோடு இட்டு நிரப்பி கொங்குப் பகுதிக்கான ஒரு சமூக வரலாற்று வரைவைக் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர்.

      இடைக்காலத் தமிழக வரலாற்றில் கொங்குப் பகுதியில் ஏற்பட்ட ’வேளாளர்’ சாதி உருவாக்கத்தின் மூலம் நிகழ்காலத்தில் உள்ள ‘வேளாளர்’ ஆதிக்க சாதி எதிர்ப்பு அரசியலுக்கான விவாதத்தை நாவலாசிரியர் தொடங்கி வைத்திருக்கிறார் என்பதும் கட்டுரையில் காட்டப்பட்டது.

                                                                   உசாத்துணை

1.     முருகவேள்,இரா. (2020). புனைபாவை. கோயமுத்தூர்: ஐம்பொழில் பதிப்பகம்.

2.     கைலாசபதி,க. பேரரசும் பெருந்தத்துவமும். பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலில் இடம்பெற்ற கட்டுரை. http://www.project.jfn.ac.lk/tdp/book.php என்கிற இணையதளத்தில் உள்ள மின்னூல்.

3.     மாணிக்கம்,வீ. (2014). கொங்கு நாடு (கி.பி.1400 வரை). கோவை: விடியல் பதிப்பகம்.

4.     ர்ஃபான் ஹபீப். (2015). கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது. வெல்வதற்கோர் பொன்னுலகம் – கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய விளக்கக் கட்டுரைகள் நூலிலுள்ள கட்டுரை. (தொ.ஆ.) பிரகாஷ் காரத். சென்னை: பாரதி புத்தகாலயம்.

5.     வானமாமலை, நா. (2017). இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும். சென்னை: அலைகள் வெளியீட்டகம்.

6.     முத்துமோகன், ந. (2018). மார்க்சியம் பயிலுவோம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,.

7.     சிவசுப்பிரமணியன், ஆ. (2021). தமிழகத்தில் அடிமை முறை. நாகர்கோவில்: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,.

8.     நொபுரு கராஷிமா. (2017). தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்(800-1500). சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,.

9.     அன்பரசன். அ, (2019). மிளிர்கல் நாவல் காட்டும் வரலாற்று மீட்டுருவாக்கமும் அரசியலும் (அச்சிடப்படாத ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான ஆய்வேடு). காந்திகிராமம்: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

 



(பெயல் ஆய்விதழ் அக்டோபர் 2021 - மார்ச் 2022 அன்று வெளிவந்த ஆய்வுக் கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர் அராத்துவின் “பவர் பேங்க்” நாவல் - வாசிப்புக் குறிப்பு

நெல்லை சு. முத்துவின் பாரதி காவியம் – பாக்களால் வரைந்த ஒரு வரலாறு (மதிப்புரை)

கதை கதையாய் (சிறுகதை)