எழுத்தாளர் அராத்துவின் “பவர் பேங்க்” நாவல் - வாசிப்புக் குறிப்பு
எழுத்தாளர் அராத்து Notion Press செயலியல் தொடர்கதையாக எழுதிய பவர் பேங்க் நாவலை வாசித்து முடித்தேன். இக்கதையில் வரும் நான்கு முக்கியமான பாத்திரங்கள் ஆற்றல், அமண்டா, அம்ருதா, கடம்பவேல். இதில் ஆற்றல் என்கிற பாத்திரம்தான் தலைமைப் பாத்திரம்.
இந்த நாவலில் அராத்துவின் படைப்பாக்கச் சிந்தனையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நம்முடைய இந்திய, தமிழ் மனம் நவீன சிந்தனையை, அதன் வசதி வாய்ப்புகளை புறவாழ்வுக்கானதாக மட்டுமே வரித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் புறமாற்றங்கள் அகத்திற்குச் செல்லாமலேயே தங்கிவிட்டன. அகம் சுதந்திரமற்றதாக பண்பாட்டின் இறுக்கத்திற்குள் நம் இந்திய, தமிழ் மனத்தால் ‘வசதி’யாகத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே நம் பண்பாடு நமக்குச் சுதந்திரத்தை அதாவது உண்மையான சுதந்திரத்தைத் தருவதாக இருக்கிறதா என்கிற கேள்வியை நாம் ஆழமாக எழுப்பிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இப்படியொரு கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ளாததினாலேயே நாம் நவீன மனம் கொண்ட மனிதர்களாக மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகப்படுகிறது. இந்த உண்மையை தனது படைப்பாக்கச் சிந்தனையாக மாற்றி நாவலின் முக்கியமான பாத்திரமான ஆற்றலின் வாயிலாக எழுத்தாளர் அராத்து வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆற்றல் என்பவன் தமிழ்ச் சமூகத்தின் சுதந்திரமற்ற மனதிற்கு சுதந்திரமான மனப்போக்கை அளிக்க வேண்டிய காலத் தேவையை உணர்த்தும் வகையில் படைக்கப்பட்டுள்ள பாத்திரம். சுதந்திரம் என்பது அடிப்படையில் சுயக்கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை. ஆனால் இந்தச் சுதந்திரமான மனதை வரித்துக்கொள்ள எவையெல்லாம் நமது பண்பாட்டு வாழ்க்கையில் தடையாக இருக்கின்றன என்பதில் நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நாம் சுதந்திரத்தை அடைவதில் எந்த தடையும் இருக்கப்போவதில்லை.
பவர் பேங்க் நாவலை ஒரு விடுதலை இலக்கியம் என்ற வகைமைக்குள் நாம் கொண்டுவர முடியும். ஏன் இதற்கு விடுதலை இலக்கியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டால் இந்நாவல் முழுக்கச் சுதந்திரமான சிந்தனை, அந்தச் சுதந்திரத்தை யாருக்கும், எவருக்கும் தொந்தரவளிக்காமல் பயன்படுத்தவேண்டும் என்கிற பொறுப்புணர்வு போன்ற மனித மனதிற்கான விடுதலைக் கருத்தாக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பவர் பேங்க் நாவலைப் பொறுத்தவரையில் ஆற்றலின் பாத்திரப்படைப்பை பின்வருமாறு வரையறுக்க முடிகிறது. இந்த வரையறுப்பின் வாயிலாக அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் எழுத்தாளர் நமக்குக் கடத்த விரும்பும் நவீன சுதந்திர மனதின் தேவைகளை உணர்த்துவதன் பின்னுள்ள பார்வைகளைத் தொகுத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
- இந்த ஆற்றல் பாத்திரம் பணக்காரப் பின்புலமுள்ள எழுத்தாளராகப் படைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் நவீன மனம் கொண்ட தமிழ் மனிதன் இவன்.
- குடி, பெண்கள், பயணம் என்று இந்தப் பாத்திரத்தின் வாழ்க்கைமுறையே சராசரி இந்திய, தமிழ் உளவியலுக்கு, ஒழுக்கவியல் பார்வை கொண்டவர்களுக்கு உவப்பாக இருக்காத பாத்திரம்.
- அதனாலேயே இந்தப் பாத்திரத்தின் சுதந்திரமான மனப்போக்கை நாம் நிராகரித்துவிட முடியாது. அதேநேரம் முழுமையான அங்கீகாரத்தினை அளிப்பதற்கான பரிசீலனையை நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதுவே இந்நாவலுக்கான நியாயமான ஒன்றாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
- இந்த ஆற்றல் பாத்திரம் அசந்தால் நாவலின் எந்த இடத்திலும் ஆண்மையவாதச் சிந்தனைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடிய ஆபத்து உள்ள பாத்திரம். எழுத்தாளர் அராத்து தமது விசாலமான பார்வையினால் மிகவும் லாவகமாக இந்தப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார். ஆற்றல் தன்னுடன் பழகும் எந்த ஒரு நபரையும் ஆணோ பெண்ணோ அவர் எவரோ அவரவரின் மனப்போக்கிற்குத் தகுந்தாற்போலக் கையாளத் தெரிந்திருக்கக் கூடிய முதிர்ச்சியான ஒரு பாத்திரம்.
- எனவே இந்திய, தமிழ் மனதிற்கான சுதந்திரமான கருத்தாக்கங்களுக்கான வரையறைகளை இதிலிருந்து வரையறுத்துக்கொள்ள முடியும்.
- நம்முடைய சராசரி மனப்போக்கிற்கு எதிராகச் சிந்திக்கக் கூடிய கதையம்சம் கொண்டிருக்ககூடிய இந்த பவர் பேங்க் நாவல் போன்று தமிழில் நவீன மனதைக் கொண்டாடும், அதன் எல்லைகளை விசாலப்படுத்தும் எழுத்துகள் வரவேண்டும் என்பதே என் அவா.
- அதனால்தான் நாம் வாழ்கிற வாழ்விலிருந்து முற்றிலும் எதிரான ஒரு வாழ்க்கையை இந்த இலக்கியங்கள் தருவதனாலேயே இவை மனித மனதிற்கான “விடுதலை இலக்கியங்கள்” என்று சொல்கிறேன்.
இந்த நாவலை படித்து முடித்ததும் நம்மையுமறியாமல் ஒரு துள்ளல் மனநிலைக்கு வந்துவிடுவது மட்டும் உறுதி. தமிழில் இது போன்ற இலக்கியங்களைக் குறிப்பாக நாவல், சிறுகதை மாதிரியான உரைநடை எழுத்துகள் அதிகமாக வெளிவரவேண்டும். இலக்கியத்திலும் பொதுவாழ்விலும் நாம் கடைப்பிடிக்கின்ற செயற்கையான நாகரிகங்களை, படிமம், குறியீடு என்று கவிதைகளுக்கான உத்திகளைப் பயன்படுத்தி நாம் கடந்துவிடுவது ஒரு வகையில் தப்பித்தலே அன்றி வேறில்லை. கவிதைகளை விட உரைநடை இலக்கியங்களே நம்மோடு உரையாடக்கூடியவை. விவாதிக்கத் தூண்டக்கூடியவை. கவிதைகளின் குறியீட்டு உத்திகள் பேச வேண்டிய விசயங்களை பேசாமல் காற்றில் படம் வரைந்து மனதை ஆன்மீகப்படுத்தி, ஞானநெறியூட்டி எனப் பல இத்யாதிகளைச் செய்து உரையாடல் என்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாது நைசாக நழுவிவிடும். (இதையே தீவிர இலக்கியம் என்கிற பெயரில் உரைநடையில் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பது தனிக்கதை). உரைநடையில் ஒருவர் புனையும் நாவலோ சிறுகதையோ இந்த நழுவலிலிருந்து தப்பிக்க வைக்காமல் எழுத்தாளரின் சிந்தனாமுறையை பட்டவர்த்தனமாகக் காட்டிவிடக்கூடியவை.
ஆற்றல் ஒரு பணக்காரப் பின்புலத்தைக் கொண்டவன் என்பது நாவலில் நமக்குச் சற்று உறுத்தலாகத் தோன்றினாலும் அத்தகைய சூழலில் இருந்துகொண்டே பழமைவாதியாக, பிற்போக்குத்தனமாக இருப்பவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதால் அது நியாயமான உறுத்தல் இல்லை என்று வாசிப்பின் போது நாம் கடந்துவிட வேண்டும்.
மற்றபடி இந்த நாவலில் குடியும் பெண்களும் மட்டும்தான் நவீன இந்திய, தமிழ் மனிதரின் சுதந்திரமான மனத்திற்குத் தீனிகளா என்ற எதிர்க்கேள்வியைக் கேட்டுக்கொண்டு வேறு வழிவகைகளை, நவீன மனதை அடையக்கூடிய வாய்ப்புகளைச் சுயமாகச் சிந்திக்கலாம். இந்தச் சிந்தனை எந்தவகையிலும் நாவல் அளிக்கக்கூடிய உற்சாகத்தைப் பெறுவதில் நமக்குத் தடையாக இருக்கக்கூடாது. ஆற்றலுடைய அந்த வாழ்க்கையை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் பின்னே உள்ள உற்சாகத்தை மட்டும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்பது எனது மேலான பரிந்துரைகளில் ஒன்று.
சிறப்பு 👏👏👏
பதிலளிநீக்குநன்றி
நீக்கு