காலவெளிப் பயணம் செய்யும் எம்.ஜி.சுரேஷின் நாவல் “அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்”
எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் (1953-2017) எழுதி 2000ஆம் ஆண்டு புதுப்புனல் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நாவல் “அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்”. இந்த நாவலின் பழைய பிரதியை பழையப் புத்தகக்கடையில் வாங்கி வைத்துப் பல வருடங்கள் ஆயிற்று. வாசிக்காமலே கிடந்தது. இப்போதுதான் வாசிக்க முடிந்தது.
இது பின்நவீன எழுத்து முறையில் எழுதப்பட்டிருக்கிற நாவல். நாவல் என்கிற பிரதியில் பல பிரதிகள் ஊடாடி கதையை நேர்கோடற்றத் தன்மையில் சொல்வதைப் பொதுவாகப் பின்நவீன எழுத்து என்று குறிப்பிடுவார்கள். தமிழ்ச் சூழலில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அமைப்பியம், பின்அமைப்பியம், பின்நவீனத்துவம் முதலான கோட்பாடுகளைக் குறித்த விவாதங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக இலக்கியத்தில் இந்தக் கோட்பாடுகளின் தாக்கத்தால் பல சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான நாவல்களில் ஒன்றுதான் எம்.ஜி.சுரேஷின் அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும். இந்த நாவல் வெளிவந்ததற்குப் பிறகான இந்த 25 ஆண்டு கால தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீன எழுத்து முறையில் பல முக்கியமான நாவல், சிறுகதைகள் வெளிவந்துவிட்டன. என்றாலும் 25 வருடத்திற்குப் பிறகு தற்போதும் இந்த நாவலின் உள்ளடக்கமும் கூறுமுறையும் படிப்பதற்கான சுவாரசியத்தன்மையைச் சற்றும் இழக்காமல் இருக்கிறது.
எம்.ஜி.சுரேஷ் பின்நவீன பாணியிலான எழுத்துகளை எழுதுபவர் என்று தமிழ் இலக்கியச் சூழலில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நாவல் முன்னர் சொன்னபடியே ஒரு நேர்கோடற்ற (non linear) வடிவத்தில் வரலாற்றின் மூன்று காலங்களையும் அதாவது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் கதைகளைச் சொல்கின்றது. வரலாறு என்பது நிகழ்காலத்தில் இருந்துகொண்டு கடந்தகாலத்தைப் படிப்பது மட்டுமில்லாமல் அந்தப் படிப்பினையைக் கொண்டு எதிர்காலத்தையும் ‘முறையாக’ வடிவமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். வரலாற்றில் கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி மனித குலத்தின் முக்கியமான எதிரி மனித குலம்தானே தவிர வேறு யாரும் இல்லை. இன்று உலகம் முழுக்க நடந்து வருகிற போர்கள், அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறவர்கள் எனக் கதை அதைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. என்றாலும் நடந்து முடிந்த வரலாற்றில் போர்கள் நிகழ்ந்தன; நிகழ்கின்ற வரலாற்றிலும் போர்கள் நிகழ்கின்றன; வரும் பல்வேறு எதிர்காலங்களிலும் போர்கள் நிகழும் என்று முக்காலங்களிலும் போர்கள்தான் மனிதகுலத்திற்கு பேராபத்தாக இருக்கிறது, இருக்கப்போகிறது என்பதை முக்கியமாகக் கோடிட்டுக் காட்டுகிறது இந்நாவல். இந்தக் கதை ஒற்றைப்படையான கதையாக, ஒரு குறிப்பிட்ட காலத்தின் கதையாக இல்லாமல் பலவிதமான காலங்களின் கதைகளாக, அடுக்கடுக்கான அமைப்பில் கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கிறது.
இந்தக் கதையின் பாத்திரங்கள் அலெக்ஸ், ரூக்ஸானா ஆகிய இருவரும். இதில் அலெக்ஸ் இலங்கைத் தமிழன். குறிப்பாக சிங்களப் பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் ஒருவன். ரூக்ஸானா குர்திஸ்தான் என்கிற நாட்டிற்காக நடக்கிற புரட்சியில் ஈடுபட்டிருக்கும் போராளிகளில் ஒருத்தி.
இந்த நாவலை நமது வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் பகுதியில் இந்த நாவல் நிகழ்கால அலெக்ஸையும் வரலாற்றில் புகழ்பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டரையும் மாறிமாறி புனைவின் வெளிக்குள் காட்சிப்படுத்துகிறது. இரண்டு பேருடைய கதையையும் மாறிமாறி சொல்லிச் செல்வதன் மூலம் வாசிப்பவருக்கு இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மாறிமாறி அலைக்கழிக்கப்படுவது போல் தோன்றும். இரண்டாவது பகுதியில் அலெக்ஸும் ரூக்ஸானாவும் காலப்பயணம் மேற்கொள்வது. கடந்தகாலத்திற்கும் இரண்டு விதமான எதிர்காலங்களுக்கும் பயணம் செய்து மனிதகுலத்தின் செல்திசையை அறிந்துகொள்கிறார்கள்.
நிகழ்கால அலெக்ஸ் இலங்கையின் சிங்களப் பேரினவாத இராணுவத்தால் குடும்பத்தை இழந்து புலம்பெயர்ந்து கனடாவுக்கும் எகிப்துக்கும் வருகிறான். இன்னொரு பக்கம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அலெக்ஸைத் தீவிரவாதி என்று கருதுகிற இலங்கை அரசு அவனைக் கண்காணிக்க ரனில் என்கிற சிங்கள ஒற்றனை அனுப்பிக் கண்காணிக்க வைக்கிறது. இதற்கிடையில் கார்லோஸ் என்கிற சர்வதேச நாடுகளால் தேடப்படுகிற புரட்சிக்காரனும் கதையில் வருகிறான். இவன் குர்திஸ்தான் போராளிகளுக்கு உதவுவது, அமெரிக்கா தனது யுரேனியத்தை இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளுக்கு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக விற்பனை செய்ய முயற்சிக்கையில் அதை கார்லோஸ் கடத்தி வைத்து புரட்சிக்காரர்களுக்கு விற்கிறான்.
நிகழ்கால அலெக்ஸ் கார்லோஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரு புராதான மம்மி ஒன்றை விற்றுப் பணமாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறான். ஒரு கட்டத்தில் கார்லோஸ் அலெக்ஸைப் பின்தொடரும் சிங்கள ஒற்றனைக் கண்டுபிடிப்பதுடன் தங்கள் வழியில் வர வேண்டாம் என்றும் அவனை எச்சரிக்கிறான். சிங்கள ஒற்றனும் கார்லோஸும் சந்தித்துக் கொண்டதை அமெரிக்க, இஸ்ரேலிய உளவாளிகள் கண்டறிந்து ரனிலைக் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி விசாரிக்கின்றனர். அந்த உளவாளிகளை குளோரோஃபார்ம் கொண்டு மயக்கமடையச் செய்து கார்லோஸின் நண்பன் ரனிலைக் காப்பாற்றுகிறான். இவையெல்லாம் துப்பறியும் கதைக்குரிய சுவாரசியத்தன்மையோடு புனையப்பட்டிருக்கிறது. இதனால் சாகச நாவலுக்குரிய கூறுகளையும் இந்த நாவல் உள்ளடக்கியிருக்கிறது.
அதேநேரம் இறந்தகாலத்தின் மாவீரன் அலெக்ஸாண்டர் உலகம் முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்று போர்வெறி கொண்டு படையெடுத்துச் செல்கிறான். அவன் எதிர்கொண்ட வெற்றிகள் யாவும் பல்லாயிரம் பேரின் இரத்தத்தினால் அவனுக்குத் தாரை வார்க்கப்பட்டதாக இருக்கிறது. ஈவு, இரக்கமின்றி வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மகா அலெக்ஸாண்டரின் வாழ்க்கை அற்ப பலவீனத்தினால் தன்னிலையை இழந்து மரணிப்பதன் மூலம் வெற்றிகரமாக முடிகிறது.
இது மட்டுமல்லாமல் நிகழ்கால அலெக்ஸ் எகிப்துக்குச் செல்லும் பொழுது அங்கு பிரமிட்டின் வாயிலில் ஸ்பிங்க்ஸ் எனப்படும் பழங்காலச் சிலை ஒன்று இருக்கிறது. அந்தச் சிலை திடீரென்று உயிர் பெற்று அலெக்ஸுடன் பேசத் தொடங்குகிறது. அந்தச் சிலையே பிரமிட்டில் உள்ள ராஜாவின் அறையின் வாயிலாகக் காலப்பயணம் செய்ய முடியும் என்று சொல்லி காலப்பயணம் செய்யச் சொல்லி அலெக்ஸை ஊக்குவிக்கிறது. இதனால் அலெக்ஸும் அவன் தோழி ரூக்ஸானாவும் காலப்பயணம் செய்து கடந்த காலத்திலும் இனிவரும் எதிர்காலங்களிலும் உலகம் எவ்வாறு உள்ளது என்று பார்க்கின்றனர். எதிர்காலத்திலும் போர்கள் உலகை அழிக்கின்றன. மற்றொரு பக்கம் அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்துவிட்ட மனிதர்கள் வழக்கம் போலச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கி அதனுள் உழன்றுகொண்டே இருக்கிறார்கள். இந்த இடத்தில் நாவல் மாயத்தன்மை கொண்டதாக உருப்பெற்று கதை மாய யதார்த்தத்தன்மையாக மாறிவிடுகிறது.
நிகழ்கால அலெக்ஸும் கடந்தகால மாவீரன் அலெக்ஸும் (அலெக்ஸாண்டர்) மாறிமாறி வருகிற கதையில் இணை ஒற்றுமையை வாசகரால் எளிதில் அடையாளம் காண முடியாதபடிக்கு தொடர்ச்சியின்மையும் இரண்டு பேருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பொருத்தமின்மையும் கலந்து வெளிப்படுகின்றன. அதேநேரம் இரண்டு பேரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழவில்லை என்பதோடு இரண்டு பேருடைய வாழ்க்கைகளும் தங்கள் காலத்தின் சமூக, அரசியல் போக்குகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
சராசரியான நேர்க்கோட்டு வாசிப்பைச் செய்து பழக்கமான வாசகர்களுக்கு இவ்வாறான நேர்கோடற்றத் தன்மை சற்றுத் தடுமாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்நாவலின் மிக முக்கியமான அம்சமாக நாம் பார்க்க வேண்டியது இந்த நாவல் இலக்கிய உலகினுள் பின்நவீனக் கோட்பாடு வலுப்பெற்று அதை இலக்கிய உருவ, உள்ளடக்கங்களில் பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டமாகும். இன்னொன்று நாவலில் அடிப்படையாகப் பேச விரும்புவது வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் அரசுகள் சாதாரண மக்களை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விடாமல் செய்து தன்னுடைய சுயநலத்திற்காகச் சுரண்டுகின்றன, அழிக்கின்றன. வாழ்க்கை முறைகள் மாறினாலும் அரசுகளின் சுரண்டல்களும் அழிவு வேலைகளும் மட்டும் ஓயவே இல்லை. வரலாற்றில் பெரும் புகழ்பெற்றிருக்கக் கூடிய மகா அலெக்ஸாண்டர் தன்னுடைய நாடு பிடிக்கும் வெறியினால் படைவீரர்களை பல்லாயிரம் மைல் தொலைவுக்கு அழைத்துச் செல்கிறான். அந்தச் சாதாரண படைவீரர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியையே அவனுக்காகச் செலவிட்டார்கள். அது யாருக்காக? மகா அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசைக்காக மட்டுமே. தன் வீரர்களை சுரண்டியதோடு எதிரிகளையும் எதிரி நாட்டு சாதாரணக் குடிமக்களையும் அழித்தொழிக்கிறான்.
அதேபோல் சிங்களப் பேரினவாதத்தினால் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு வாழ வழியற்று வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் நிகழ்காலத்தில் வாழும் அலெக்ஸும் ஒருவன். இவனுடைய வாழ்வும் அந்த மகா அலெக்ஸாண்டரின் படைவீரர்களுடைய வாழ்வைப் போலத்தான். இலங்கை அரசின் தமிழர் இன வெறுப்பால் தமிழர்களைக் கொன்று குவித்தனர். பல பெண்களை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கினர். பலர் தாய், தந்தைகளை இழந்தனர். பலர் குழந்தைகளை இழந்தனர். அந்தக் கொடிய வாழ்வு இலங்கை அரசால் கட்டவிழ்க்கப்பட்ட அரசப் பயங்கரவாதம் என்று எல்லோருக்கும், எல்லா நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியும். பல்லாயிரக்கணக்கானோர் உறவுகளை இழந்து, வீடுகளை இழந்து, இறுதியில் நாட்டைத் துறந்து இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்டரின் படைவீரர்களாயினும் சரி, நிகழ்கால ஈழத்தமிழர்களாயினும் சரி இவர்களுடைய வாழ்க்கையை இவர்கள் தீர்மானிக்கவில்லை; இந்தத் துயரம் அவர்களின் வினைகளினால் விளைந்தது அல்ல; இந்தப் புலம்பெயர்வு அவர்களாகத் தேடிக்கொண்டதில்லை. ஆனால் இந்த எல்லாவற்றுக்கும் காரணம் ‘அரசு’, அரசப் பயங்கரவாதம், வெறி, பேராசை.
இந்த நாவல் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் இனி வரவிருக்கும் காலங்களிலும் சர்வதேசங்களின் அரசுகள் சாதாரண குடிமக்களை இயல்பாக அவர்களின் போக்கில் வாழவிடாமல் செய்வதற்கான அத்தனைக் காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்நவீன எழுத்துமுறை வரலாற்றின் பல்வேறு குரல்களை வெளிப்படுத்த உறுதுணையான வடிவமாக எழுத்தாளருக்குப் பயன்பட்டிருக்கிறது.
இவ்வாறு இந்த நாவல் பலபிரதிகளை தனக்குள் கொண்டு ஒரு நேர்கோடற்ற கதைசொல்லலை நிகழ்த்தி வரலாற்றின் மூன்று காலங்களுக்குள்ளும் பயணம் செய்திருக்கிறது. ஆனால் தொடக்கநிலை வாசகர்களுக்கு இதுவே அடிப்படையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே சொன்னது போல் நேர்க்கோட்டு முறையில் வாசிப்பைச் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு நாவலின் சுவாரசியத் தன்மையை முழுமையாக அனுபவிக்க இயலாமல் சடக்கென்று இடைவெட்டுவது போல் இன்னொரு கதை நிகழ்வுகள் தொடர்ச்சியற்ற தன்மையில் கூறப்படுகிறது. இது வாசகர்களுக்குத் தொடக்க நிலையில் அயர்ச்சியைத் தருவதாக இருந்தாலும் தொடர் வாசிப்புப் பழக்கத்தில் இந்தச் சிக்கலை எளிதில் கடந்துவிடலாம்.
இந்த நாவல் வெளிவந்த 2000ஆம் ஆண்டிற்குப் பிறகான கடந்த 25 வருடத்தில் பின்நவீன பாணியிலான எழுத்துகள் தமிழில் நிறைய வந்துள்ளன. என்றாலும் பின் வந்த நாவல்கள் இந்தப் பிரச்சனையை எளிதில் கடந்து ஒருவித இலகுத்தன்மையுடன் கையாண்டுள்ளன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதை (2008), சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் (2008), ஜோ.டி. குரூஸின் கொற்கை (2009), பூமணியின் அஞ்ஞாடி (2012), இரா. முத்துநாகுவின் சுளுந்தீ (2018), இரா. முருகவேளின் புனைபாவை (2020) முதலான நாவல்கள் பின்நவீன எழுத்தை மிகவும் இலகுவாகக் கையாண்டு புனைவின் சாத்தியங்களைத் தொட்டவை.
இன்னொரு விடயத்தையும் இங்குக் குறிப்பிடுவது அவசியமாகப்படுகிறது. அதாவது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நமது வாழ்க்கைச் சூழல் பெருமளவில் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் வெறுமனே புறவயமான மாற்றங்களாக மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கை முறைகளிலும் பண்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை எளிமையான, மெதுவான, அவசரமில்லாத வாழ்க்கையாகவும் இன்று மிகவும் அதிநவீன வசதிகளுடனான ‘அதிவேகமான’ வாழ்க்கையாகவும் மாறியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த வாழ்க்கைச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் மகிழ்ச்சிகளும் பிரச்சினைகளும் புதிதானவை என்பதோடு இதற்கு முன்பு மனித குலம் எதிர்கொள்ளாதது என்பதும் நாம் கவனிக்க வேண்டும். நாம் இந்தக் காலத்தில் எதிர்கொள்ளும் இந்த மகிழ்ச்சிகளும் பிரச்சினைகளும் ஒன்றின்பாற் பட்டதாக இல்லாமல், ஒற்றைப் பண்புநலன்களைக் கொண்டதாக இல்லாமல் கலவையான தன்மையில் அமைந்திருப்பதும் நோக்கத்தக்கது.
இந்தச் சூழலில் இலக்கியத்தை எழுதப் புகும் எழுத்தாளர்கள் இந்தக் கலவையான அனுபவங்களை எதிர்கொண்டு அதை வெளிப்படுத்த முன்பு சொன்ன பின்நவீன எழுத்தின் பல்பிரதிகள், பல்குரல்கள் போன்ற உத்தி முறைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலக்கியங்களின் உருவாக்க முறைகளுக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது குறித்து இதற்கு முன்பு தமிழ் ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. என்றாலும் அவை பழந்தமிழ் செய்யுள் இலக்கிய ஆய்வுகளாகும். நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க விரிவான ஆய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. கூடவே பின்நவீனத்துவம், பின் அமைப்பியம் முதலான கோட்பாட்டுக் கருத்தாக்கங்கள் எவ்விதமான பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின என்று தனியான ஒரு ஆய்வை மேற்கொள்வது நமக்கு மிக முக்கியமான விடயங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
நவீன இலக்கிய வாசிப்பையே தமிழ் ஆய்வுலகம் இன்று ஒதுக்கி வைத்திருக்கிறது. நாவல், சிறுகதை, கவிதைகளில் ஆய்வு மேற்கொண்டால் அந்த ஆய்வாளர் சோம்பேறித்தனமானவராகவே பார்க்கப்படுகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நவீன இலக்கிய வாசிப்பை மறுக்கும் தமிழ் ஆய்வுலகம் நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் சமூக, பண்பாட்டு, அரசியல் மாற்றங்களைக் காண, விவாதிக்கப் பயப்படுகிறது என்றே அர்த்தம். பழந்தமிழ் செய்யுள்களில் புதைந்து தங்களின் பழமைவாதத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பிற்போக்கு மனநிலையில் உள்ள இந்த ஆய்வாளர்கள் நவீன இலக்கியம் பேசினால் கோட்பாடுகளைப் பேச வேண்டி வரும்; நவீனக் கருத்தியல்களை விவாதிக்க வேண்டி வரும் என்று பயம் கொள்கின்றனர். இவர்களின் பயந்தாங்கொள்ளித் தனத்திற்கு இந்தத் தமிழ் ஆய்வுலகம் வேறு என்ன பெயர் வைத்து அழைத்துக் கொண்டாலும் இதுதான் மறுக்கமுடியாத உண்மை. (பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகி விடுமா!)
கருத்துகள்
கருத்துரையிடுக