நெல்லை சு. முத்துவின் பாரதி காவியம் – பாக்களால் வரைந்த ஒரு வரலாறு (மதிப்புரை)
நெல்லை சு. முத்து (நன்றி dinamani.com) தமிழ் மரபில் பாரதிக்கென்று தனித்த இடம் என்றுமுண்டு. அதற்குக் காரணம் அவர் படைத்த படைப்புகள் மட்டுமல்ல அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்த விதத்தினாலும் தான். தமிழ் வெகுசனப் பரப்பில் பாரதிக்கென்று இன்றைக்கு உருவாகியிருக்கும் அடையாளம் கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல்வேறு வழிகளில் , பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் வாயிலாக , பல்வேறு கருத்தியல் வாதிகளின் கருத்து மோதல்களால் உருவாகி வந்திருக்கிறது. இன்னும் எழுதித் தீராத உன்னத வாழ்வாக பாரதியின் வாழ்வு இன்றும் படைப்பாளிகளுக்கு உள்ளது என்பதற்குச் 2016 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கின்ற ‘பாரதி காவியம்’ என்ற நூல் சான்றாகும். இக்கவிதை நூலின் ஆசிரியர் அறிவியல் விஞ்ஞானியும் கவிஞருமான நெல்லை சு. முத்து ஆவார். இந்திய விண்வெளித்துறையில் முதனிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுள்ள இவர் 140க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். பாரதி எனும் ஆவணம் எங்கள் தலைமுறை வெறுமனே பாரதியாரின் ஒன்றிரண்டு கவிதை வரிகளைப் படித்து விட்டுப் போகிற போக்கில் தம் வசதிக்க...