சமூக வரலாற்று நாவல்களும் பின்காலனியக் கருத்தியல்களும் (கட்டுரை)



                                                   I

வரலாற்று நாவல்கள் என்றவுடன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை என்கிற பொதுப் புரிதல் நமக்கு உடனே ஏற்பட்டாலும்கூட, உண்மையில் அவை வரலாற்றை அணுகுவதில் தனித்தனி வகைமை வேறுபாடுகளுடனே தான் இலக்கிய வரலாற்றில் தொழிற்பட்டு வந்திருக்கின்றன. அவ்வண்ணமே இலக்கியத் திறனாய்வாளர்களால் அணுகவும் பட்டிருக்கின்றன.

இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தி என்பதுடன் அது காலத்தையும் உற்பவிக்கின்றது என்கிற சிவத்தம்பியின் (2008, ப. 15) கருதுகோள் மற்ற படைப்பிலக்கியங்களை விட வரலாற்று நாவல்களுக்கு சிறப்பாகவே பொருந்தக் கூடியது. ஏனெனில், இவ்வரலாற்று நாவல்கள் காலத்தால் உற்பத்தி செய்யப்படுகிற அதேநேரத்தில் காலத்தையும் உற்பவிக்கின்ற செயல்பாட்டையும் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக இலக்கியங்களில் வரலாற்றுப் புனைவாக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லலாம். இக்காலகட்டங்களுக்குப் பிறகு மிக அதிகமாக மறைக்கப்பட்ட வரலாறு, பேசப்படாத வரலாறு, கள ஆய்வின் வழியே படைப்பாளிகளால் திரட்டப்பட்ட வரலாறு என மக்கள் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்நாவல்கள் குறிப்பிட்ட வட்டாரங்களையும் அவ்வட்டாரங்களில் சிறு பகுதிகளையும் களமாகக் கொண்டவை. இவற்றில் வட்டாரத் தன்மை மிகுதியாக இருப்பதுடன் அதற்கு முன்பு வந்த வரலாற்று நாவல்களுடன் ஒப்பிடும் போது இவற்றின் புனைவாக்கத்தில் மிகவும் வெளிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது தெரிகிறது. எனவே, இவ்வகையான நாவல்களை வரையறைக்குட்படுத்துவதும் அதன் மூலம் அந்நாவல்களில் தாக்கம் செலுத்தியுள்ள கோட்பாட்டுக் கருத்தியல்கள் குறித்தும் அறிந்துகொள்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

                                       II

இந்தியச் சமூகத்தில் தொழிற்படும் அரசியல் இரண்டு வகையான கருத்தாக்கங்களுக்குள் அடங்கிவிடுவதாகக் குறிப்பிடும் அரசியல் கோட்பாட்டளர்கள் அவற்றை அடையாள அரசியல், வர்க்க அரசியல் என இரண்டாகப் பாகுபடுத்துகின்றனர். ஏனெனில், “ஆசிய நாடுகளின் வரலாறு என்பது மேற்கூறிய இரண்டு கருத்தாக்கங்களின் வழியாக அணுகப்பட வேண்டியதாகத் திறந்து கிடக்கிறது. இந்த நாட்டில் சாதிகள் உள்ளன. பல மொழிவழி மக்கள் உள்ளனர், பழங்குடிகள் உள்ளனர், பல வகை மதங்கள் உள்ளன. இவர்களெல்லாம் ஒரே நேரத்தில் இருவகை அரசியலுக்குள் அகப்படுகிறார்கள்: ஒன்று அடையாள அரசியல், மற்றொன்று வர்க்க அரசியல். இது கடந்தகால இந்திய, தமிழ்ச்சமூகங்களைப் புரிந்துகொள்ளுவதற்கு மட்டுமல்ல, 19, 20ஆம் நூற்றாண்டுகளின் அரசியலைப் புரிந்து கொள்வதற்கும், இன்னும் சமகால அரசியலைப் புரிந்து கொள்ளுவதற்கும் நமக்கு அவசியமான அணுகுமுறையாகும்” (ந. முத்துமோகன், 2011, பக். 130-131). அதனாலேயே ஒரு சமூக வரலாறு இந்திய, தமிழ்ச் சூழலில் எழுதப்படும்போது அது அடையாள அரசியலையும் வர்க்க அரசியலையும் இணைத்த ஒன்றாக இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்பிலக்கியங்களுக்கும் பொருந்தும்.

சென்ற நூற்றாண்டின் பிற்பாதி வரையில் தமிழில் வெளிவந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் மேற்சொன்ன அடையாள, வர்க்க அரசியல்களை இணைத்த ஒரு வரன்முறையான சமூக வரலாற்றெழுதியலை புனைவில் சாத்தியப்படுத்தியிருக்கவில்லை. 1970கள் வரைக்குமே கூட தமிழில் சங்கம் மருவிய காலம் (களப்பிரர் காலம்) முதல் நாயக்கர் காலம் வரையுள்ள காலப்பகுதிகளுக்கு ஏற்புடைத்தான பொருளாதார வரலாறோ, சமூக வரலாறோ எழுதப்பட்டிருக்கவில்லை என்கிற ஆதங்கம் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவியிருக்கிறது (கா. சிவத்தம்பி, 2013, ப. 81). சோழர் காலத்தைப் பொறுத்தவரையிலுங் கூட நீலகண்ட சாஸ்திரியாரின் பேராக்கமான ‘சோழர்கள்’ என்னும் நூல் அரசியல், பொருளாதாரம், சமூகம் என்பனவற்றைக் கூறுபடுத்திக் கூறுகின்றதே தவிர யாவற்றையும் இணைத்த வரன்முறையான சமூக வரலாற்றைக் கூறவில்லை என்றும் இந்நிலையில் அத்துறைகளில் ஆழமான சுய ஆராய்ச்சி செய்யாதோர் நாவல்கள் எழுதும் பொழுது அவை எமது பாரம்பரிய இலக்கியப் பொருட்களான அகத்துக்கும் புறத்துக்கும் புதிய பரிமாணங் கொடுக்க எடுக்கும் அதிக வெற்றியற்ற முயற்சிகளாகவே அமைந்துவிடுகின்றன என்றும் கூறுகிற சிவத்தம்பியின் (மேலது, ப. 81) கூற்றை கடந்தகாலத்தில் நவீன படைப்பிலக்கியத்தில் தொழிற்பட்ட விரிவான வரலாற்றுப் பார்வையின்மை குறித்த ஆதங்கமாகக் கருத வேண்டும். இது அப்போதைய சனரஞ்சகமான வரலாற்று நாவல்களின் ‘வரலாற்று அறிவுக்’ குறைபாடுகளின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் என்றாலும், பொதுவாகவே ‘வரலாற்று’ நாவல்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். அப்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சந்தை எழுத்திற்கு இக்கருத்து ஊறு சேர்ப்பதாகவே அமைந்திருக்குமாதலால் அப்போதைய வரலாற்று நாவலாசிரியர்களுக்கு இந்தக் கருத்து அதிக உவப்பானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே இக்கருத்து 1970களில் சமூக வரலாற்றெழுதியலுக்கான தேவையைச் சுட்டக்கூடியதாக மட்டும் எஞ்சி நின்றுவிட்டது. வெறுமனே இது கவனப்படுத்தலாக மட்டுமல்லாமல் வரலாற்று நாவல்களின் உருவாக்கத்தில் சமூக வரலாற்றெழுதியலைச் சாத்தியப்படுத்த முடியும் என்றும் அதற்காக கற்பனையாற்றலுடன் புலமைத் தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி படைப்பாக்க நெறிகள் குறித்த ஆலோசனைகளாகவும் ஆய்வுப்புலத்திலிருந்து முன்மொழியப்பட்டிருக்கிறது.  

1970களுக்குப் பின் தமிழில் எழுதப்பட்ட வரலாற்று நாவல்கள் அடையாள அரசியலையோ அல்லது வர்க்க அரசியலையோ இரண்டில் ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டன என்பதால் 1990கள் வரைக்குமே கூட இந்நிலைமை தொடர்ந்தவண்ணம் தான் இருந்தது. பொருளாதாரத் தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிற வர்க்க அரசியலும் பண்பாட்டு இனக்குழுக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிற அடையாள அரசியலும் இவ்வரலாற்று நாவல்களில் தொழில்படவில்லை என்பதையும் நோக்க வேண்டும்.

கடந்த நூறாண்டுகளுக்கும் மேல் பல்வேறு ஆளுமைகளின் இடையீட்டினாலும் சமூக, அரசியல் தாக்கங்களாலும் தமிழ் நிலத்தைக் கொண்டு உருவான பண்பாட்டு அடையாள அரசியல் பன்மைத்துவ வெளிப்பாடுகளுடனும் சனநாயகத்தன்மையுடனும் நிலைபெற்றிருக்கிறது. இதனால், தமிழ்ப் பண்பாட்டு அடையாள அரசியல் என்பதையும் விரிவான தளத்தில், தமிழ் நிலத்தில் உள்ள பல்வேறு சமூகக் குழுக்களின் பண்பாட்டு அடையாளங்களை உள்ளடக்கியதாகப் பொருள்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

இப்பண்பாட்டு அடையாளங்களை முன்வைத்து தமிழ் நிலத்தின் கடந்தகால சமூக வரலாறுகளை எழுதும் போது மேற்சொன்ன பன்மைத்துவ வெளிப்பாடுகளுடன் தான் அவை வெளிப்படும் என்பதை இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே வெளியாகும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்களைக் காணும் போது உறுதியாகிறது. மேலும், அரசியல் ரீதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பானது ஒருவித முனைமழுங்கிய தன்மையில் தமிழ் அடையாள வெகுசனஅரசியலில் இன்று தொழில்படுகிறது. என்றாலும் கூட இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன என்கிற படைப்புமுரணை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

உண்மையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது 1990களில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பின்பு தான் இந்நாவல்களில் முனைப்புப் பெறத் தொடங்கியது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தக் காலகட்டம் உலக அரங்கில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சூழல்களில் வலுவான தாக்கங்களைச் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக, 1990களுக்குப் பிறகு இந்தியா எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி திறந்த சந்தையைச் செயல்படுத்தியதும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) மூன்றும் இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அக்காலகட்டத்தின் உலக அளவிலான சங்கிலித் தொடர் விளைவுகளாகும். எல்லோருக்குமான வாய்ப்பை இம்மாற்றம் கொடுக்கும் என்ற வாதம் வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்டதும் இதற்குப் பின்புதான். இவை யாவும் பின்காலனித்துவ அறிஞர்கள் சுட்டுவது போல் காலனித்துவத்தின் இன்னொரு வடிவமான நவகாலனித்துவத்தின் விளைவுகளுக்கு இந்தியாவை உந்தித் தள்ளியது. மரபான நிலவுடைமைச் சமூகங்களின் வீழ்ச்சி, கிராமங்கள் கைவிடப்பட்டு நகரங்களை நோக்கி மக்கள் வரத் தொடங்குவது என சமூக அளவிலும் சூழலியல் அளவிலும் சீர்கேடுகள் முன்பைவிட வேகமாகியது. இதன் தொடர்ச்சியாக நகரமயமாக்கம் அதிகரித்து நகரங்கள் மக்கள் தொகையால் இன்று பிதுங்கி வழிவதற்கும் காரணமாகியது.

உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளாதாரம் வேகமெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற 90களுக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் சர்வதேச அளவில் ஓரிரு நாடுகளின் ஏகாதிபத்தியமும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சந்தையாக, குப்பைத் தொட்டியாக மாற்றி வருகின்றன.

இத்தகைய நவகாலனித்துவத்தால் இந்தியாவும் தமிழகமும் பாதிக்கப்பட்டு வரும் இச்சூழலில், தமிழ் நிலத்தின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்கள் முக்கியத்துவமிழக்கத் தொடங்கி ஒற்றை அடையாளத்தை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டதும் தமிழ் நிலத்தின் மரபான சமூகங்களிடமிருந்து முரண்பாட்டு எதிர்வினைகள் தோன்றின. இதில் சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய சமூகங்கள், வளர்ந்த சமூகங்கள், வளர்கின்ற சமூகங்கள் என அனைத்துப் பிரிவினரும் தங்கள் பிரதிநிதித்துவத்தை தங்கள் பண்பாட்டிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் முன்னிறுத்தியது அவ்வாறான எதிர்வினைகளில் முதன்மையானது.

மாறிவரும் சமூகச் சூழலில் சர்வதேசிய மட்டத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை அப்பிரிவினர் தங்களின் வசதிக்குத் தகுந்தாற் போல் உள்வாங்கிக் கொண்டு தங்களின் வரலாறு, பண்பாட்டின் மீது நின்று காலூன்றிப் பேசத் தொடங்குவது ஒரு பக்கம் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும்கூட மற்றொரு பக்கம் மரபிலிருந்து நிகழ்காலத்திற்குச் சற்றும் பொருந்தாத, முந்தைய வெகுசன வரலாற்று நாவல்களைப் போல ‘பழமையை’த் தூக்கிப் பிடிக்கும் போக்காகவும் அமைந்துவிடுகிறது.

தமிழக அரசியல் தளத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முனைப்போடு இல்லாமலிருந்தாலும் இலக்கியத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அது பிரதிபலிக்கவே செய்கின்றது. முக்கியமாக, தமிழில் 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான சமூக வரலாற்று நாவல்களில் அடையாளம் குறித்த வெளிப்பாடுகள் மிக அதிகமாகவே உள்ளன. இவற்றை ஏகாதிபத்தியத்தின் ஆதாரக் கொள்கையான ஒற்றைமயப்படுத்தும் செயல்திட்டத்திற்கான எதிர்ப்புகளாகக் கொள்ள முடியும். ஏகாதிபத்தியம் என்பது முன்பே விளக்கியது போல் நவகாலனியமாக இருப்பதால் தமிழ்ச் சமூகத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது பன்மையான சமூகக் குழுக்களின் இனவரைவியல் கூறுகள் சமூகக் குழு சார்ந்தும் வட்டாரம் சார்ந்தும் வெளிப்படுவது இன்றைய உலகமயச் சூழலில் முக்கியமான நடவடிக்கையாக அமைகிறது.

அப்படியான ஏகாதிபத்தியம் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளின் மரபான பண்பாட்டுக் கூறுகளை, சூழலியல் வளங்களை, மனித வளங்களை எனப் பலவிதங்களில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது மரபான சமூகங்களைப் பாதிக்கிற அதேவேளையில் இங்கிருக்கிற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டக் குழுக்கள் சாதி, வர்க்க நிலையில் தங்களிடையில் போட்டி போட்டுக் கொண்டும், முன்னேறிக் கொண்டும், நவீன முறையில் சுரண்டலை மேற்கொண்டும் வருகின்றன. இந்த நிலையில் அடையாள, வர்க்க அரசியல் என்பதை முற்போக்காகப் பார்ப்பதோடு தங்களின் பழைமையை மீட்டெடுத்து தங்களின் சமூக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் பேணுவதற்கும் அக்குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

அதேநேரம், இவ்வடையாளச் சிக்கல்கள் ஒரே தன்மையில் அமையாமல் ஒவ்வொரு சமூகக் குழுவும் சமூகத்தில் தங்களின் இருப்புக் குறித்த பிரக்ஞையுடன் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு சமூகக் குழுவும் தற்காலத்தில் தன்னுடைய இருப்பை உறுதி செய்ய தன்னுடைய கடந்தகால வரலாற்றிலேயே தேடத் தொடங்கியிருக்கின்றன. இவை ஒருவகையில் ‘அடையாள’ மீட்டுருவாக்கங்கள் எனலாம்.

ஏனெனில், நேரடி அரசியல் மோதலுக்கான வாய்ப்புகளின்றி, அதிகாரத் தளத்தில் சமத்துவமற்ற சூழல்கள் நிலவும் போது அடையாள இயக்கங்கள் என்ற பண்பாட்டு அரசியல் வடிவம் உருப்பெறும் என்பது மார்க்சியக் கோட்பாடு. அந்தவகையில், அடையாளங்களை, கடந்தகால சமூக வரலாற்றை முன்வைத்து இனக்குழுக் கூறுகளை, அதிகார எதிர்ப்பரசியலை வெளிப்படுத்தும் இந்தவகை நாவல்கள் சமகாலத்தில் சமூக ரீதியிலும் வர்க்க ரீதியிலும் ஒடுக்கப்படுவதை எதிர்க்க தங்களுக்கான எதிர்ப்பை வரலாற்றின் பக்கங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றன. அச்சமூகக் குழுக்களின் கூட்டு மனசாட்சியாக எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களை எழுதியிருக்கின்றனர்.

மேற்சொன்ன சமூக, பொருளாதார, கருத்தியல் மாற்றங்கள் மட்டுமல்லாமல் வரலாற்றுத் துறையில் தமிழகத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் சேர்ந்து கொண்டு இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தமிழ்ப் பண்பாட்டின் பன்முக அடையாளங்களாக தற்காலத்தில் உருமாறியிருக்கின்றன. இச்சூழலில் அவ்வடையாளங்கள் வட்டாரங்களாகக் கூறுபடுத்தப்பட்ட தமிழ்நிலத்தின் சமூக வரலாறுகளாக இந்நாவல்களில் கூறப்படுகின்றன.

அவற்றில் சோளகர் தொட்டி (2004), ஆழிசூழ் உலகு (2004), காவல் கோட்டம் (2009), கொற்கை (2009), அஞ்ஞாடி (2012), வந்தாரங்குடி (2013), வெள்ளையானை (2013), துறைவன் (2015), 1801 (2016), முகிலினி (2016), வடகரை (2016), சுளுந்தீ (2018), புனைபாவை (2020) முதலியவை 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளியான சமூக வரலாற்று நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் வருமாறு:

v  2004ஆம் ஆண்டு வெளிவந்த சோளகர் தொட்டி ச. பாலமுருகனால் எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் 1990களில் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் வாழும் சோளகர் பழங்குடிகளைத் துன்புறுத்தும் தேடுதல் படையினரின் கொடுமைகளை இந்நாவல் விவரித்துச் செல்கிறது.

v  ஜோ.டி.குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவல் 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நாவல் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழும் பரதவர்களின் வாழ்க்கையை 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 1930இல் தொடங்கி 1985இல் முடிவதாகக் கதையை அமைத்திருக்கிறார் அதன் ஆசிரியர். இக்காலகட்டத்தில் அவர்களின் சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளை மையமிட்டதாகக் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

v  2009இல் சு. வெங்கடேசனால் எழுதப்பட்ட காவல் கோட்டம் மதுரையில் மாலிக்கபூர் படையெடுப்பு தொடங்கிய 1310இல் தொடங்கி நாயக்கர் ஆட்சி அமைக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டு என கிளைபரப்பி 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரைக்குமான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில் தாதனூர் கள்ளர்களின் வரலாற்றைப் பேசுகிறது.

v  ஜோ.டி. குருஸ் 2009இல் எழுதிய நாவல் தான் கொற்கை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தொடங்கி 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் வாழ்ந்த பரதவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் யாவை என்பதை வரலாற்றுக் காரணங்களோடு புனைவாக தம் நாவலில் முன்வைக்கிறார் ஆசிரியர்.

v  2012ஆம் ஆண்டு வெளிவந்த அஞ்ஞாடி பூமணியால் எழுதப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு தொடங்கி நாடார்களின் கோயில் நுழைவுப் போராட்டத்தின் வரலாற்றையும் அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் அடைந்த வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையோடு பதிவு செய்வதாக இருக்கிறது இந்நாவல்.

v  ஜெயமோகனால் எழுதப்பட்ட வெள்ளை யானை நாவல் 2013இல் வெளிவந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் இருந்த ஐஸ் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றைக் குறிப்பிடுகிறது இந்நாவல்.

v  2015ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் ஆன்றணி அவர்களால் எழுதப்பட்டது துறைவன் நாவல். குமரி மாவட்டத்தில் கேரள எல்லையோரம் உள்ள மீனவ மக்களான முக்குவர் இன மக்களைப் பற்றிய கடந்தகால வரலாற்றை அவர்களின் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களோடு சொல்லும் நாவல் இது.

இந்நாவல்கள் உண்மைத்தன்மையுடன் அதாவது ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலமும், வரலாற்று ஆவணங்களின் மூலமும், மக்களின் வழக்காறுகளையும் சான்றுகளாக எடுத்துக் கொண்டு நாவல்களாக உருப்பெற்றிருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவுக்கு எழுத்தாளர்களால் கள ஆய்வு மேற்கொண்டும் எழுதப்பட்டுள்ளன. இந்நாவல்களில் சமூக, பொருளாதார, அரசியல் மூன்றையும் ஒருங்கிணைத்து நோக்கும் யதார்த்தவாதப் பண்பு கொண்ட சமூக வரலாற்றுப் பார்வை சாத்தியப்படத் தொடங்கியிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதனாலேயே இந்நாவல்கள் “சமூக வரலாற்று நாவல்கள்” என்று அழைக்கத் தகுதி வாய்ந்தன.

இச்சமூக வரலாற்று நாவல்களின் உருவாக்கத்தில் எப்படி 1990களுக்குப் பின்பு உருவான பொருளாதார, சமூக மாற்றங்கள் தொழிற்பட்டிருக்கின்றனவோ அதேபோல் தான் 1990களுக்கு முன்பு கோட்பாட்டுக் கருத்தியல் தளங்கள் ஏற்படுத்திய பாதிப்புகளும் இந்நாவல்களின் உருவாக்கத்திற்கு ஊக்கிகளாகச் செயல்பட்டிருக்கின்றன என்பதையும் அவதானிக்க முடிகிறது. அவை மேலைக் கோட்பாடுகளினால் இந்திய, தமிழ்ச் சிந்தனைகளில் உருவானவைகளாகும். அவற்றின் இச்சிந்தனைகளினால் ஏற்பட்ட சமூக வரலாற்றெழுதியல் குறித்த விவாதங்களை அறிந்துகொள்ளுமிடத்து சமூக வரலாற்று நாவல்களைக் குறித்து மேலதிகமான புரிதல்களை நம்மால் பெற முடியும். 

                                             III

காலனியத்தின் தோற்றம் என்பது இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் கொண்டுள்ள நாட்டுப்புற நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், இயற்கை சார்ந்த வாழ்வு என்று இயற்கை மனிதர்களிலிருந்து செயற்கை மனிதர்களாக, முதலாளிய உற்பத்தி முறைக்கான உடல்களாக மாற்றியமைத்தது. வரலாற்றின் பல பக்கங்களில் காலனித்துவத்தின் தொடக்ககால வடிவங்கள் இருந்திருக்கின்றன என்றாலும் அதனைத் தொடக்ககாலக் காலனித்துவம் என்றும் அது முதலாளித்துவத்திற்கு முந்தையது என்றும் கூறுகிற மார்க்சியம் நவீன காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் முதலாளியத்தோடு தொடர்புடையது என்பதை வரையறுக்கிறது (க. பஞ்சாங்கம், 2014, ப. 5).

நவீனக் காலனித்துவம் என்பது காலனிய விடுதலை பெற்ற பின்பு காலனித்துவ நாட்டைப் பொருளாதார, பண்பாட்டு ரீதியாகச் சார்ந்திருப்பதாகும். இந்தியா போன்ற காலனியத்தாலும் நவீன காலனியத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு நாட்டில் கலை, இலக்கியங்களில், வரலாறுகளில் காலனிய நீக்கத்தைச் செய்ய வேண்டிய அவசியமுள்ளது. இதனையே பின்காலனித்துவம் முன்மொழிகிறது.

காலனியம் நிகழ்த்திய ஆதிக்கக் கருத்தியல்களைக் களைய தம்முடைய மொழி, பண்பாடு முதலியவற்றைக் கொண்டு அத்தகைய ஆதிக்கக் கருத்தியல்களை எதிர்ப்பது, தலைகீழாக்குவது என்பதை உள்ளடக்கியிருக்கிறது பின்காலனித்துவக் கோட்பாடு. ஏனெனில், காலனியம் தன்னுடைய கருத்தியலை குறிப்பாக மொழி வழியாகவே நிகழ்த்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலனியத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான செயல்பாட்டை, விடுதலை அடைந்த நிலையைக் குறிக்கப் பயன்படும் பின்காலனித்துவம் இன்றைய நவீன காலகட்டத்தில் முக்கியமாக 20ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வேறொரு பரிணாமத்தை அடைந்துள்ளது. குறிப்பாக, 1980களுக்குப் பிறகு மேற்குலகின் கோட்பாட்டு அலையால் இந்திய, தமிழ்ச் சூழலில் வரலாற்று அணுகுமுறைகளில் ஏற்பட்ட தாக்கங்கள் பின்காலனித்துவத்தின் வெளிப்பாடுகளாக மாறி நிற்கின்றன. ஜமாலன் (2018, ப. 229) இது குறித்துக் கூறும்போது, “1980களில் தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட கருத்தியல் மாற்றங்கள் இலக்கியங்களின் உருவ, உள்ளடக்கங்களைப் பற்றிய தீவிரமான விவாதத்திற்கு இட்டுச் சென்றன. அவற்றில் மேலைக் கோட்பாடுகளான அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் உருவாக்கிய மொழி, அறிதல், அதிகாரம், அறிவு, கருத்தியல், உண்மை, புனைவு, யதார்த்தம் ஆகிய கருத்தாக்கங்கள் பழைய சிந்தனை முறைகளில் இருந்து கட்டுடைக்கப்பட்டு கலைத்துப் போடப்பட்டபோது வரலாறு என்பது என்ன? இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் உள்ள உறவு என்ன? என்ற கேள்விகள் எழுந்தன” என்கிறார்.

இக்கோட்பாடுகளின் வாயிலாக எழுப்பப்பட்ட இத்தகைய கேள்விகளால் வரலாற்று அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் வரலாற்று முறைமை தொடர்பான விவாதங்களும் வரலாற்றில் தொழிற்படும் அதிகாரம் குறித்த விவாதங்களும் மிக முக்கியமானவை. இவற்றின் தொடர்ச்சியாக உருவானதே புதுவரலாற்று வாதம் என்கிற நவீன வரலாற்று வாதம். இது இலக்கியம், வரலாறு தொடர்பாக நான்கு எடுகோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை,

1.    வரலாறு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: (அ) கடந்தகால நிகழ்வுகள், (ஆ) கடந்தகால நிகழ்வுகளின் வர்ணனை. வரலாறு எப்பொழுதுமே வர்ணிக்கப்படுவதால் (வரலாறு கடந்த கால நிகழ்வுகளின் தொகுதி என்ற) முதலாவது அர்த்தம் அடிபட்டுப்போகிறது என்று பின்னமைப்பியல் சிந்தனை திட்டவட்டமாகக் கூறுகிறது. ஏனெனில், வரலாறு என்பது பிற்காலத்து மக்களுக்கு மாசற்ற நிலையில் கிடைப்பதில்லை. கடந்தகாலம் எப்பொழுதுமே ஏதாவதொரு வர்ணனையாகத்தான் நம்மை வந்தடைகிறது. ஆகவே, பின்னமைப்பியலுக்குப் பிறகு வரலாறு பிரதித்தன்மை கொண்டதாகிவிட்டது என்ற பிரபலமான கூற்று உண்மையாகவே படுகிறது. அதாவது, வரலாறு இப்போது ‘பிரதி’தான், ‘நிகழ்வு’ அல்ல.

2.    வரலாற்றுக் காலகட்டம் ஒருங்கிணைந்த உண்மை அல்ல, எந்த ஒரு காலகட்டத்துக்கும் ‘ஒரே ஒரு வரலாறு’ என்பது இல்லை. நமக்குக் கிடைத்திருப்பதெல்லாம் தொடர்பற்ற, உள்முரண்கள் நிறைந்த, வர்ணிக்கப்பட்ட வரலாறுதான். எலிசபெத் காலத்துக்கு (அல்லது குப்தர்கள் காலத்துக்கு) பொதுவானதொரு உலகப்பார்வை கிடையாது. வரலாற்றில் காணப்படுகிறது என்று கூறப்படும் ஒரே மாதிரியான ஒருங்கிணைவு கொண்ட பண்பாட்டின் கருதுகோள் வெறும் மாயை தான். வல்லமை வாய்ந்த அதிகார வர்க்கம் சுயநலனுக்காக இத்தகைய பொய்த்தோற்றத்தை உருவாக்கி பிரச்சாரம் செய்து வருகிறது.

3.    கடந்தகாலம் பற்றிய தன்னுடைய ஆய்வு கலப்பற்றதும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் புறவயமானதுமாகும் என்று எந்த வரலாற்றுவாதியும் சொல்லிக் கொள்ள முடியாது. எழுத்தாளன் தன்னுடைய வரலாற்று நிலையிலிருந்து விடுபட்டவனாக ஆக முடியாது. கடந்தகாலம் என்பது நம் முன்னே பிரத்யட்சமாக உள்ளதும் கையால் பிடித்துவிடக்கூடியதுமான ஒரு திடப்பொருளல்ல. உண்மையில் நாம்தான் வரலாற்றுத் தொடர்புகளின் பார்வையில், முன்னரே இருந்துவரும் பிரதிகளின் உதவியுடன் கடந்தகாலத்தை உருவாக்குகிறோம்.

4.    இலக்கியம் மற்றும் வரலாற்றின் உறவு பற்றி அடியிலிருந்தே சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வரலாற்றைப் பின்னணியில் வைத்து இலக்கியத்தை ‘முன்னே’ வைக்கத் தகுந்த நிர்ணயமான, நிச்சயமான வரலாறு கிடைப்பதில்லை. எந்த வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் அது பின்னணியில் நிற்காமல் இலக்கியம் போல ‘முன்னே’ நிலைபெறுகிறது. ஏனெனில், அதுவும் வர்ணனையின் ஒருரகம் தான், கடந்த காலத்தின் வர்ணனை. மற்றப் பிரதிகளிலிருந்து இதனுடைய பிரதித்தன்மை நிறுவப்படுகிறது. இலக்கியமல்லாத பிரதிகளும் - அவை அறிவியல் சார்ந்ததாயினும் சரி, சட்டம் சார்ந்ததாயினும் சரி - அனைத்துமே வரலாற்றின் அடக்கம் (கோபிசந்த் நாரங்க், 2019, பக். 542 - 543).

இதில் பின்அமைப்பியத்தின் வரலாற்றை ஒரு ‘பிரதி’யாகப் பார்க்கிற பார்வையும், அதிகாரமிக்க பெருங்கதையாடலை விடுத்து குறுங்கதையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின்நவீனத்துவப் பார்வையும் தொழிற்படுவதைக் கவனிக்க வேண்டும். வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளாகக் கொள்ளப்படும் இலக்கியம், சட்டம், அறிவியல், மானுடவியல், கல்வெட்டு மற்றும் பிற தொல்லியல் சான்றுகள் அனைத்தும் வரலாற்றின் அங்கங்களாகக் கொள்ளும் பன்மைத்துவப் பார்வை ‘பிரதி’க் கொள்கையாலும் குறுங்கதையாடலாலும் புதுவரலாற்றுவாதத்தில் ஏற்படுவதை அவற்றோடு பொருத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் பிரதிகளாகக் கொள்வதாலும் முரண்பாடுகள் கொண்ட ஒவ்வொரு சிறுபிரதிகளின் கதையாடலும் ஒரு முழுமையான சமூக வரலாற்றை எழுதத் துணை புரிய இயலும் என்கிற பார்வை உருவாவதைத் தவிர்க்க முடியாததாகிறது. தொடர்ந்து இது வரலாற்று அணுகுமுறைக்கானதாக மட்டுமல்லாமல் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவாக்கத்திற்கான முறைமைகள் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைப்பதாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது.

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவெனில், பின்அமைப்பியம், பின்நவீனத்துவம், புதுவரலாற்றுவாதம் முதலியவற்றின் கோட்பாட்டு அலை இந்திய, தமிழ்ச் சூழலில் ஏற்கெனவே உருவாகி செயல்பட்டுக் கொண்டிருந்த பின்காலனித்துவ நடவடிக்கைகளை மேலும் ஊக்கியது என்பது தான். ஏனெனில், இக்கோட்பாடுகள் இந்தியாவில் முன்மொழியப்பட்ட போது பின்காலனியத்தின் குரல்களாகவே தான் ஒலித்தன. பின்நவீனத்துவச் சிந்தனைகள் குறித்து இத்தகையதொரு கருத்தைச் சொல்லியிருக்கிற ஜமாலன் (2022, ப. 113), “தொழில் வளர்ச்சியடைந்த நவீனத்துவத் திட்டம் (modernist project) முழுமையடைந்த மேற்குலகில் பின்நவீனத்துவம் (post modernism), பின்நவீனம் (post modernity), பின்நவீன நிலை (post modern) என்பது சாத்தியம். வளர்ச்சியடையாத, காலனியத்தால் வீக்கம் அடைந்த, காலனிய எஜமானர்களால் திணிக்கப்பட்ட நவீனத்தை மேற்பரப்பில் ஏற்று மனதளவில் நிலவுடைமை சார்ந்த பழைய மதிப்பீடுகளில் உள்ள இந்திய ஒன்றிய, குறிப்பாகத் தமிழகத்தில் பின்காலனியச் சிந்தனையே பின்நவீனத்தின் குரலாக இடப்படுத்தக் கூடியது. காரணம், கோட்பாட்டுச் சட்டகங்களில் பின்நவீனம், பின்காலனியம் இரண்டுமே பின்அமைப்பியல் சிந்தனைகள் உருவாக்கிய அடிப்படைகளோடு, திறனாய்வுச் சிந்தனையில், கருத்தாக்கங்களின் மூலம் உருவானவையே. இதன் பொருள் இரண்டும் ஒன்றல்ல, ஆனாலும், இரண்டும் இரண்டு சமூகப்பின்னணிகள் குறித்த திறனாய்வுச் சிந்தனையை அளிப்பதே. நவீனம் முற்றுப்பெறாத, சுயவளர்ச்சியற்ற காலனிய சமூகங்களில் பின்நவீனத்துவம் பின்காலனியமாகவே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.” என்கிறார். இக்கருத்து பின்நவீனத்துவத்தோடு தொடர்புடைய பின்அமைப்பியம், புதுவரலாற்றுவாதம் என மூன்றனுக்கும் பொருந்தக்கூடியதாக நம்மால் விரித்துக் கொள்ள இயலும்.

இக்கருத்தை மெய்ப்பிக்கிற விதமாக இந்திய மற்றும் தமிழ் ஆய்வுப் பரப்புகளில் மேற்சொன்ன கோட்பாடுகளின் தாக்கங்களை ஏற்று உருவான இந்திய, தமிழ்த் தன்மையிலான வரலாற்றெழுதியல் குறித்த ஆய்வுகளைச் சொல்லலாம். 1980களில் இந்தியாவில் தோன்றிய அடித்தள மக்கள் ஆய்வுகள் (Subaltern Studies) அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. புதுவரலாற்றுவாதத்தின் ஆய்வுமுறைமையுடனும் இந்தியத் தன்மையுடனும் இவ்வாய்வுகள் உருவாகின. இந்தியாவில் அதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த வரலாற்று முறைமைகளின் மீது இவ்வாய்வுகள் கேள்வியெழுப்பின. மேலும், அவ்வரலாற்று முறைமைகள் யாவும் அதிகாரத்திலிருப்போரின் வரலாற்றை எழுதவே துணை போயின என்பதை அறிவியல்பூர்வமாக இவை வெளிப்படுத்தின. இது வரலாற்றை மேலிருந்து எழுதப்படுவதற்கு மாறாக கீழிருந்து எழுதப்பட வேண்டும் என்றும் கோரியது. ரணஜித் குகா தலைமையில் உருவான இவ்வாய்வுக் குழு வரலாற்றில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் கம்மிய குரல்களை மீட்டெடுக்க அதிகாரத்தின் வரலாறுகள் பயன்படவில்லை என்றும், அதனால் எழுதப்பட்ட அதிகாரத்தின் வரலாறுகளின் நெரிசலில் சிக்குண்டு கிடந்த அதிகாரமில்லாதோரின் குரல்களை மீட்டெடுப்பதற்கான முறைமையாகவும் அடித்தள மக்கள் ஆய்வுகளை மாற்றியமைத்தனர். எழுதப்பட்ட வரலாறுகளிலிருந்து மாறுபட்டு வரலாறு எழுதுவதற்கான தரவுகளாக வாய்மொழி வழக்காறுகளையும் செய்தித்தாள்களையும் இன்ன பிறவற்றையும் ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர். இவ்வாய்வுக் குழுவினர் இவ்வாறாக இந்தியத் தன்மை கொண்ட சமூக வரலாற்றெழுதியலாக அடித்தள மக்கள் ஆய்வுகளை வளர்த்தெடுத்தனர்.

இவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தமிழ்ச் சிந்தனைப்புலத்தில் வெளிப்படுத்தியதில் பேராசிரியர் நா. வானமாமலை தலைமையில் உருவான ‘ஆராய்ச்சி’க்குழுவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு ஆய்வுகளை இக்குழு மிகப்பெரிய அளவில் முன்னெடுத்தது. நாட்டுப்புறவியல் ஆய்வு, மானிடவியல் மற்றும் இனவியல் ஆய்வுகளைச் செய்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் வேரோடிப் போயுள்ள சாதிய யதார்த்தத்தை முன்னுக்குத் தள்ளி இங்கு சாதி பலபடித்தான சாதி அடுக்குகளாகத் துண்டுபட்டுக் கிடக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியது (ந. முத்துமோகன், 2011, ப. 127).

மேலும் “பேராசிரியர் நா.வா. தொடங்கி வைத்த நாட்டுப்புறவியலின் அடுத்தடுத்த அரசியல் வெளிப்பாடுகள் மிகத் தீவிரமானவை. வாய்மொழி வரலாறு, அடித்தள மக்கள் வரலாறு, இனவரைவியல், வெகுசனக் கலாச்சாரத்தில் நாட்டுப்புற வழக்காறுகள், பகடி செய்தல், கட்டுடைப்பு, பலவீனமானவர்களின் போராட்ட உத்திகள், மாற்றுப் பண்பாடு, மாற்று மருத்துவம், எதிர்ப் பண்பாடு, கலகப் பண்பாடு, பன்மியப் பண்பாடு, தலித் பண்பாடு, பெண் எழுத்து, பெண் அரங்கு எனப் பல திசைகளில் நாட்டுப்புறவியலின் அரசியல் கிளை பரப்பி வளர்ந்துள்ளது” (மேலது, ப.127).

இப்படியாக மேற்சொன்ன புதுவரலாற்று வாதமும் அடித்தள மக்கள் ஆய்வுகளும் பேரா. நா.வா. தலைமையில் உருவான ஆய்வுகளும் தமிழ்ச் சிந்தனைப் புலத்தில் குறிப்பாக இலக்கியத்தில் வரலாற்றைப் புனைதல் தொடர்பான பார்வையை வெகுவாக மாற்றியது. இதனால் ஆய்வுகளில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் பல்பனுவலியத் தன்மை வெளிப்படுவதற்கு ஏதுவாகியது. இந்தப் பல்பனுவலியத் தன்மையால் வரலாற்று ஆதாரங்களை, நாட்டார் வழக்காறுகளை, இன்ன பிற ஆதாரங்களை ஒரே பனுவலுக்குள் அடுக்கி, வரலாற்றில் ஒலிக்கும் பல்குரல்களாக, தனித்தனிக் குரல்களின் முக்கியத்துவத்துடன் மாற்றியமைத்ததன் மூலம் பனுவல்களுக்குள் சமூக வரலாற்றெழுதியலுக்கான சாத்தியப்பாட்டை உருவாக்க முடிந்தது.

இவை பின்காலனியச் செயல்பாட்டில் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், கலை, இலக்கியப் பண்பாடுகளிலிருந்து முற்றிலுமாக காலனிய நீக்கத்தைச் செயல்படுத்த வேண்டிய அளவுக்கு காலனியத்தால் பீடிக்கப்பட்டுக் கிடக்கிற இந்திய, தமிழகச் சூழலில் வரலாறு பற்றிய கருத்தியலுருவாக்கம் என்பது முக்கியமான பின்காலனியச் செயல்பாடாக அமைகிறது. மேலைக் கோட்பாடுகள் வரலாற்று முறைமைகளில் இந்தியச் சூழலில் அடித்தள மக்கள் ஆய்வுகளாகவும் தமிழ் ஆய்வுப் பரப்பில் நாட்டுப்புறவியல் ஆய்வுகளாகவும் வெளிப்பட்டன என்பதே பின்காலனியத்தின் சுதேசிய உணர்வுச் செயல்பாடுகளுக்கு சாலப் பொருந்தக்கூடிய உதாரணங்களாகும்.

இப்படியாக இந்திய, தமிழ்ச் சிந்தனைப் புலத்தில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் சமூக வரலாற்றெழுதியலுக்கான விவாதங்கள் கருத்தியல் தளங்களில் ஏற்பட்டு படைப்பாக்கத் தளத்தில் சமூக வரலாற்று நாவல்கள் பெருமளவில் உற்பத்தியாவதில் காரணிகளாகத் தொழிற்பட்டிருக்கின்றன என்ற புரிதலுக்கு வர முடிகிறது.

முடிவுரை

            1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் புனைவிலக்கியத்தில் மக்கள் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த நாவல்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இவ்வகையான நாவல்களை வரையறைக்குட்படுத்துவதும் அதன்மூலம் அந்நாவல்களில் தாக்கம் செலுத்தியுள்ள கோட்பாட்டுக் கருத்தியல்கள் குறித்தும் அறிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்ட இக்கட்டுரையில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன:

            தமிழகச் சூழலில் அடையாள, வர்க்க அரசியல்களை இணைத்த ஒரு வரன்முறையான சமூக வரலாற்றை நாவல்களில் புனைவது தொடர்பாக அறிஞர்களிடையே விமர்சன எதிர்பார்ப்பு 1970கள் முதலே இருந்திருக்கின்றது. இவ்வெதிர்பார்ப்பே 1990களிலும் 2000ஆம் ஆண்டுகளிலும் உருவான வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்களின் உருவாக்கத்திற்கான தேவையாக அமைந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது.

            1990களுக்குப் பின்பு ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் இந்நாவல்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தொழிற்படுவதைப் பார்க்க முடிகிறது. நகரமயமாக்கம், கிராமங்களின் வீழ்ச்சி, நிலவுடைமைச் சமூகங்களின் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு காலனித்துவத்தின் இன்னொரு வடிவமான நவகாலனித்துவமே காரணமாக இருக்கிறது.            தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகப் பிரிவுகள் இந்த ஏகாதிபத்தியம் என்கிற நவகாலனித்துவ எதிர்ப்பை வெளிப்படுத்த நாவல்களில் தங்களின் அடையாளங்கள் குறித்த வெளிப்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இவை ஏகாதிபத்தியம் உருவாக்கும் ஒற்றைமயப் பண்பாட்டிற்கு எதிரான செயல்பாடுகளாக இருக்கின்றன.

            அதேநேரம், அச்சமூகக் குழுக்கள் இந்நாவல்களில் வெளிப்படுத்தும் அடையாள, வர்க்க அரசியல்களை முற்போக்காக மட்டும் பார்க்காமல் தங்களின் சமூக மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் பேணுவதற்கும் பயன்படுத்தி வருகின்றன என்பதாகவும் கொள்ள முடியும்.

            ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் தங்களின் நிகழ்கால இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் சமூக வரலாற்று நாவல்களில் வெளிப்படும் அடையாள, வர்க்க அரசியல்கள் உதவுகின்றன என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்நாவல்கள் வரலாற்று ஆவணங்களின் மூலமும் மக்களின் வழக்காறுகளையும் சான்றுகளாக எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதுடன் சமூகம், வரலாறு, அரசியல் மூன்றையும் ஒருங்கிணைக்கும் சமூக வரலாற்றுப் பார்வை இந்நாவல்களில் தொழிற்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது. அதனாலேயே இவை சமூக வரலாற்று நாவல்கள் என அழைக்கப்படத் தகுதி வாய்ந்தன என்பது கட்டுரையில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலைக் கோட்பாடுகளால் ஏற்பட்ட வரலாற்று அணுகுமுறைகள் குறித்த விவாதங்களால் 1980களில் உருவான புதுவரலாற்றுவாதம் என்கிற நவீன வரலாற்று வாதம் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவாக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது.

புதுவரலாற்றுவாதத்தில் தொழிற்பட்டிருக்கும் பின்அமைப்பியம், பின்நவீனத்துவம் ஆகியவையும் இந்திய, தமிழகச் சூழலில் பின்காலனியத்தின் குரல்களாக வெளிப்பட்டிருக்கின்றன என்பது கட்டுரையில் விவாதிக்கப்பட்டது. மேலும், இவை சமூக வரலாற்று நாவல்களுக்கான கருத்தியலூக்கிகளாகவும் பின்னின்று செயல்பட்டிருக்கின்றன என்பதும் கட்டுரையில் நிறுவப்பட்டுள்ளது.

துணை நின்றவை

கார்த்திகேசு சிவத்தம்பி. (2008). தமிழில் இலக்கிய வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு). சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

கார்த்திகேசு சிவத்தம்பி. (2013) நாவலும் வாழ்க்கையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

கோபிசந்த் நாரங்க். (2019). வரலாற்றுவாதமும் நவீன வரலாற்றுவாதமும். அமைப்புமையவாதம் பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல் என்கிற நூலில் இடம்பெற்ற கட்டுரை. (தமிழாக்கம்) எச். பாலசுப்பிரமணியம். நியூ டெல்லி: சாகித்திய அகாதெமி.

பஞ்சாங்கம், க. (2014). பின்காலனித்துவச் சூழலில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம். சென்னை: காவ்யா வெளியீடு.

முத்துமோகன், ந. (2011). தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

ஜமாலன். (2018). வரலாறும் இலக்கியமும் – புதுவரலாற்றுவாதம் பற்றிய அறிமுகக் குறிப்புகள் – பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள் இலக்கியக் கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்ற கட்டுரை. சென்னை: காலக்குறி பதிப்பகம்.

ஜமாலன். (2022). பின்காலனிய நிலையில் “தான், பிற, தன்னிலையாதல்”.  மணல்வீடு இதழ் எண்: 44 – 45. ஜூன் – நவம்பர் 2022 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

 

***************

 

(மணற்கேணி ஆய்விதழ் ஜூலை 2023 அன்று வெளிவந்த ஆய்வுக்கட்டுரை)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர் அராத்துவின் “பவர் பேங்க்” நாவல் - வாசிப்புக் குறிப்பு

நெல்லை சு. முத்துவின் பாரதி காவியம் – பாக்களால் வரைந்த ஒரு வரலாறு (மதிப்புரை)

கதை கதையாய் (சிறுகதை)