கா. சிவத்தம்பியின் தமிழிலக்கிய வரலாற்றின் பிரச்சினை மையங்கள் - சில அவதானிப்புகள் (மதிப்புரை)
கா.சிவத்தம்பி (நன்றி vanakkamlondon.com)
கார்த்திகேசு சிவத்தம்பி (1932 - 2011) தமிழின் முன்னோடி ஆய்வாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இவர் தம்முடைய ஆய்வுக்களங்களாகத் தேர்ந்து கொண்ட சமூக வரலாறு, வெகுசனப்பண்பாடு, இலக்கியம், இலக்கணம் முதலியவற்றில் மார்க்சிய அணுகுமுறையைக் கையாண்டு தமிழ் ஆய்வுலகில் தனக்குரிய வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறார். தமிழ்மொழி போன்ற பழமையான ஒரு மொழியின் பெருமிதத்தில் மூழ்காமல் முற்றிலும் அறிவியல் பார்வையோடு செய்யப்படும் ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதையும் அதன் வரலாற்றுத் தேவையை நம்மவர்களுக்கு உணர்த்துவதையுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டு தம் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
இந்நூல்
உருப்பெற்ற முறை என்பது இன்று தமிழ் ஆய்வுலகில் ஒரு முன்னோடி செயல்வடிவமாகும். தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்
பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களால் அங்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள அழைக்கப்பட்ட
முதலிரண்டு சிறப்பாய்வாளர்களுள் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அங்கு ஆய்வுப்பணி
மேற்கொள்கையில் தமிழில் இலக்கிய வரலாறு தொடர்பாக ஒரு வரலாறெழுதியல் ஆய்வு மேற்கொள்ள
வேண்டும் என்று அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
அவருடைய உறுதுணையால் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து அக்கருத்தரங்கிற்கு “தமிழகத்தின்
வரலாறு, தமிழிலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வு நற்பெயருடைய பத்து அறிஞர்கள் முத்து
சண்முகம்பிள்ளை, என். சுப்பிரமணியம், கே.டி. திருநாவுக்கரசு, கு. அருணாசலக் கவுண்டர்,
பொ. திருஞானசம்பந்தம், ப. அருணாசலம், மு. அருணாசலம், எ. சுப்பராயலு, கு. நம்பியாரூரன்,
கோ. கேசவன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இப்பத்து அறிஞர்களுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்
கடமையாற்றிய அறிஞர்கள் க. வெள்ளைவாரணார், சுந்தர சண்முகனார், மு. சண்முகம்பிள்ளை, தி.
முருகரத்தினம், இராமசுந்தரம் ஆகியோரும் கருத்தரங்கிற் கலந்துகொண்டனர்.” (ப.xiv)
இப்படியாக
பல்வேறு தமிழறிஞர்களிடம் கலந்தாலோசித்து 1988இல் எழுதப்பட்ட நூல் தான் தமிழில் இலக்கிய
வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு). இந்நூல் 1986இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் 1988இல்
சிவத்தம்பியாலேயே தமிழ் வடிவத்தில் ஆக்கப்பட்டது.
இந்நூலின் பொருளடக்கங்களாவன:
I.
‘இலக்கிய வரலாறு’ எனும் பயில்துறை அதன் புலமைப்பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம்
II.
தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி
III. தமிழிலக்கிய வரலாற்றில் பிரச்சினை மையங்கள்
IV. தமிழிலக்கிய வளர்ச்சியைப் பார்க்கும் முறை:
கால வகுப்புப் பிரச்சினைகள்
இவை தவிர பின் இணைப்புகள், நூல்கள் சஞ்சிகைகள்
கட்டுரைகள் ஆசிரியர், விடய அகர நிரல் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில்
மூன்றாம் இயலாக இடம்பெற்றுள்ள ’தமிழிலக்கிய
வரலாற்றில் பிரச்சனை மையங்கள்’ என்கிற இயல் இலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள பிரச்சினைகளை
முன்வைக்கின்றது. பிரச்சினைகள் என்பதை இங்கு சிக்கல்கள் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வியல் சிக்கல்களை மையமிட்டக் கருதுகோள்களை அதன்வழியே தமிழ்ச் சிந்தனை மரபை மீட்டுருவாக்கம்
செய்வதற்கான சில வழிமுறைகளை, சில எடுகோள்களை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளதைப்
பார்க்க முடிகிறது.
ஒரு
ஆய்வுக்கு சிக்கல் - சிவத்தம்பியின் வார்த்தைகளில் கூறுவதானால் பிரச்சினை மையம் இன்றியமையாதது.
ஏனெனில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்படும் போது சிக்கல்களைக் கண்டுபிடித்தாலொழிய அவ் ஆய்வில்
நம்மால் மேற்செல்ல முடியாது. சிக்கலும் சிக்கலை மையமிட்ட கருதுகோளும் ஒரு ஆய்வுக்கு
அடிப்படைத் தேவையாகும் என்பது மூத்த ஆய்வாளர்களின் கருத்து. தமிழாய்வின் செல்நெறிகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய
ஆய்வுகள், கவனம் செலுத்த வேண்டிய ஆய்வுப்பரப்புகள் ஆகியனவற்றைச் சுட்டிச் செல்வதுடன்
நிற்காமல் அவற்றின் பிரச்சினை மையங்களை முன்வைத்து விவாதித்திருப்பது சிவத்தம்பியின்
முக்கியமான அணுகுமுறையாகும்.
இலக்கிய வரலாறு தமிழில் உருவாக வேண்டிய அவசியத்தை
வலியுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளை
அறிமுகப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் அவற்றின் ஆய்வியல் முக்கியத்துவத்தையும்
உணர்த்துகிறது. இவ்வாய்வுகள் தனிநபர் முயற்சிகளால் செய்யப்பட்டனவேயன்றி ஒருங்கிணைந்த
வகையில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தமிழ்ச் சூழலில் ஒரு ஒருங்கிணைந்த குழுமச் செயல்பாடு
நடைபெறாததே ஆய்வுத் தளத்தில் மிகப் பெரிய போதாமையாக சிவத்தம்பி குறிப்பிடுகிறார். இருப்பினும் இதற்கு முன்பு செய்யப்பட்ட ‘ஒருங்கிணைந்த’
ஆய்வுச் செயல்பாடுகளை அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலில்லை. 1955ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து
1957ஆம் ஆண்டு காலகட்டம் வரையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட
ஐந்து நூல்களும் மிகவும் முக்கியமான நூல்களாகக் குறிப்பிடும் சிவத்தம்பி “அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி நன்கு திட்டமிடப்படாது குறைபாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டதால்,
அதன் வழியாக வந்த படைப்புகள், பத்தொடு பதினொன்றாக, இருப்பவற்றுடன் மேலதிகமானவையாக அமைந்து
விட்டனவேயன்றி, இருப்பவற்றிலும் பார்க்கச் சிறந்தனவாக, அச்சிறப்புக் காரணமாக ஏற்கனவே
இருப்பனவற்றின் பயன்பாட்டைக் குறைப்பனவாக அமையவில்லை” என்று அப்பல்கலைக்கழகத்தில் செய்யப்ப்பட்ட
ஆய்வின் தரத்தை மதிப்பீடு செய்கிறார்.
இத்தகைய போதாமையுடன் செய்யப்பட்ட ஆய்வுச் செயல்பாடுகளைச்
சரிவர மேற்கொள்ள ஒரு செயல்திட்ட நோக்குடன் செய்யக்கூடிய அளவுக்குத் தகுதி வாய்ந்ததாக
“தமிழ்ச் சூழலில் அப்படிப்பட்ட அளவும் பரிமாணமுங் கொண்ட ஒரு முயற்சி
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் செயல்நோக்குடன் இப்பணி வரக்கூடியது” என்று இப்புத்தகம்
எழுதப்பட்ட காலத்தில் உள்ள ’தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்’ மீது நம்பிக்கை வைக்கிறார்.
இருப்பினும் அப்பணி எவ்விதத்திலும் குறைவுற அமைந்துவிடக் கூடாது
என்கிற ரீதியில் “ஆனால் எடுக்கப்படும் முயற்சி ‘மேலுமொன்று’ எனும் வகையிலும் தன்மையிலும்
அமைந்துவிடக்கூடாது. அத்தகைய நோக்குடன் செய்யப்படவும் கூடாது.” (ப.166) என்கிறார்.
‘இலக்கிய வழி வரலாறு’ என்ற வகையில்
அவரால் முன்வைக்கப்படும் இலக்கிய வரலாறு ‘இலக்கியவழி வரலாறு’, ‘இலக்கியங் கொண்டு
வரலாற்றையறிதல்’ ஆகிய இரு கருதுகோள்களையும் உள்ளடக்கியிருப்பதாக இந்நூலில்
சிவத்தம்பி விளக்கம் தருகிறார். இத்தகைய இலக்கிய வழி வரலாற்று ஆய்வுகளைத் தமிழ்ச்
சூழலில் செய்யப்பட வேண்டிய காலத்தேவையை உணர்ந்து, அவை முறையாகச் செய்யப்படத்
துவங்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தன் பரந்துபட்ட ஆய்வு அனுபவத்தின்
வாயிலாக முன்வைக்கிறார்.
தமிழுக்கான
இலக்கிய வரலாற்றை எழுதும் போது ஏற்படக்கூடிய பிரச்சனை மையங்களை அடையாளப்படுத்தியும்
தனித்தனியாக அவற்றின் ஆய்வுத்தேவையை உணர்த்தியும் எழுதிச் செல்கிறார். பிரச்சனை மையங்கள்
என்பவை சிக்கல்கள், விடுபடல்கள், போதாமைகள் என்பதாகக் கொண்டு சிவத்தம்பி அவற்றின் அடிப்படையில்
வினாக்களை எழுப்பிக் கொண்டு விவாதிக்கிறார். அவர் குறிப்பிடும்
பிரச்சினை மையங்களான சிக்கல்கள் இன்றும் எவ்வளவு பொருத்தப்பாடுடையனவாக இருக்கின்றன
என்பதைத் துலக்கமாக வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
பண்டைய இலக்கியத்
தொகுப்பு முறைகள் – பிரச்சினைகளும் பின்புலங்களும்
நமக்குக் கிடைக்கின்ற இலக்கிய வகைகளில் குறிப்பாக
1300க்கு முன்பான இலக்கியங்கள் பூரணமாக நமக்குக் கிடைத்திருக்கின்றனவா என்பதே அவரின்
முதல் வினாவாக அமைகின்றது. அதாவது சங்க இலக்கியத் தொகை நூல்கள் என்று இன்று நம்மிடமுள்ளவைகளை
வைத்து நாம் ஆராயும் போது அவற்றின் போதாமைகள் ஒரு முழுமையான தமிழிலக்கிய வரலாறு எழுதுவதற்கு
போதிய சான்றாதாரங்களா என்பதே அவரின் முக்கியமான வினாவாக இருக்கின்றது. இவ்வினாவே அடுத்ததொரு
வினாவை நோக்கி அவரைச் செலுத்துகிறது. நமக்குக் கிடைத்த இலக்கியத் தொகுதிகள் முழுமையானவையே
என்றாலும் அவை பிரதிநிதித்துவமுள்ளதாகக் கருதப்படத்தக்கதா என்பதே அவ்வினாவாகும். இருப்பினும் நமக்குக் கிடைக்காத பழமையான
இலக்கியங்கள் ஒருவகையில் இழப்பாகவே இருந்தாலும் இவ்விழப்பு ஒருபோதும் தமிழின்
இலக்கிய வரலாற்றை எழுதுவதற்குத்
தடையாக அமையவில்லை என்றும் கூறுகிறார்.
இதன்மூலம்
நீண்ட நெடிய தமிழ்ச் சிந்தனை மரபை நாம் எந்தளவு இலக்கியவழி பேணி வருகிறோம் என்கிற அடுத்த
கேள்வி நம்முன் எழுகிறது. நமக்குக் கிடைக்கின்ற தொகை நூல்கள் தொகுக்கப்படுவதற்கான அரசியல்
பின்புலம் என்ன? அவை கிடைத்தவற்றின் திரட்டு அல்ல; மாறாக தெரிந்தெடுத்தவற்றின் தொகுப்பு
மட்டுமே என்பதை அறிந்திருக்கும் நாம் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றையும், இலக்கிய வரலாற்றையும்
எழுத முயலும் பொழுது தமிழிற் கிடைக்கக்கூடிய எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஒருங்கு திரட்டிக்கொண்டுவிட்டோமா
என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும் (ப.169) என்கிறார்.
இதை விட இன்னொரு சிக்கல் மையமான வினாவான
1300க்கு முன்னர் தொகுக்கப்பட்ட இலக்கியங்களின் தொகுப்பு முறையின் போது ஏதேனும் தணிக்கை
நடவடிக்கை இருந்ததா என்பதைக் கேட்கிறார். 1300 என்ற காலக் கோட்டை அவர் போட்டுக் கொண்டதற்கான
காரணம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு தமிழ் நிலத்தின் மீது ஏற்பட்ட அந்நியப் படையெடுப்பு
தமிழ்ச் சமூக, பண்பாட்டுத் தளங்களில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழக் காரணமாக
இருந்தன. இதனால் தான் 1300க்கு முற்பட்ட இலக்கியங்களுடன் ஒப்பிட 1300க்குப் பிற்பட்ட
இலக்கியங்கள் மிகவும் பன்முகப்பட்டவையாக உள்ளன. தமிழ் இலக்கியங்கள் இயற்றப்படுவதற்கு
மட்டுமின்றி அவற்றைத் தொகுப்பதற்கும் அரச நிறுவனத்தின் ஆதரவுகள் இருந்தன என்பதைப் புரிந்து
கொண்டால் சங்க இலக்கியத் தொகுப்பு முறைமைக்கும் ஏதேனும் அரச நிறுவன ஆதரவு செயல்பட்டிருக்கக்
கூடிய வாய்ப்பு இருந்திருக்கிறது என்று ஒரு கருதுகோளாக முன்வைக்கிறார். அரச நிறுவனத்தின்
ஆதரவோடு இலக்கியங்கள் தொகுக்கப்பட்டமைக்கான பிற்கால வரலாற்று உதாரணமாக சோழ அரசின் ஆதரவோடு
தேவாரங்களை சிதம்பரம் கோவிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.
அடுத்தவொரு பிரச்சனை மையமாக இருப்பது பண்டைய,
இடைக்காலத் தமிழிலக்கியங்களின் கால நிர்ணயமாகும். இது தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில்
இயல்பாகப் புகுந்துகொண்டு விட்ட பெருமிதப் பார்வைகள் நம்முடைய பண்டைய, இடைக்கால இலக்கியங்களின்
காலங்களை மிகவும் முன்னோக்கிப் பார்க்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது அறிவியல் நெறிப்பட்ட பார்வைக்குறைபாடு மட்டுமின்றி அரசியற் பிரச்சினையாகவும்
இன்று வளர்ந்து நிற்கிறது. இதை மனதில் கொண்டே “இது இலக்கியம் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையன்று. இது ஓர் அரசியற்
பிரச்சினையுமாகும். சமூகக் கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படாது, இப்பிரச்சினை இலக்கிய
மட்டத்திலே தீர்க்கப்படக் கூடியதன்று.” (ப.190) என்கிறார் சிவத்தம்பி.
இலக்கிய விமர்சனமும் பல்துறை இணைவும்
இலக்கிய
வரலாறு எழுதப்படும் போது இலக்கியங்களாக பொதுவெளியில் அங்கீகரிக்கப்பட்டவைகளை மட்டும்
பயன்படுத்தாமல் பலதுறை இலக்கியங்களையும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு மொழியின்
சிந்தனையோட்டத்தை அது வரலாறுதோறும் மாறிவந்திருக்கக் கூடிய பாங்கை அம்மொழியில்
வைத்தியம், வானவியல், சோதிடம், சிற்பம்,
நடனம், வெள்ளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் வெளிவந்திருக்கக்
கூடிய சிந்தனைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்தவகையில் இலக்கிய வரலாற்று
எழுதுகையை ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் விரிவான தளத்தில் வைத்து எழுதுவதற்கு
அப்படி எழுதப்பட்டனவற்றை ஒரு
ஒழுங்குமுறையாகத் தொகுக்க வேண்டும் என்கிறார் சிவத்தம்பி. ஏனெனில் ஒரு குழுமத்தின்
சிந்தனை மரபை அம்மொழியில் வெளிவந்துள்ள பல்துறை நூல்களின் மூலமே வெளிப்படுத்த இயலும்
என்ற பிரக்ஞைத் தெளிவு அவரிடமுள்ளது. மேலும், பல்துறை நூல்களின் வாயிலாக இலக்கியத்தை
அணுகும் போது இலக்கியத்தை இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்ள முடியும் என்பதை இதன்மூலம்
நாம் விளங்கிக் கொள்ள முடியும். இதனை “இலக்கியத்திற்கும் கற்பனை சாரா எழுத்துக்களுடன்
நெருங்கிய தொடர்புண்டு; அந்த உறவுகளை விளங்கிக் கொள்வதன் மூலம், சிறப்பாக அவை உண்மையான
இலக்கியத்தினுட் புகுந்து நோக்குவதன் மூலம் நாம் இலக்கியத்தை உள்ளதிலும் பார்க்க முழுமையாக
விளங்கிக் கொள்ளலாம்.” என்ற டேவிட் கிறேய்க்கின் கூற்றை சிவத்தம்பி மேற்கோள் காட்டிப்
பேசுவதிலிருந்து பன்முக வாசிப்பு குறித்துப் புரிந்து கொள்ள முடியும்.
மதச்சார்பின்மை என்னும் அறிவுநிலைப்பட்ட
நோக்கு
அடுத்து அவருடைய
கவனம் தமிழ்ச் சிந்தனை மரபில் இந்திய, இந்தியச்
சார்பற்ற மதங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்துப் பேசும் போது ஆய்வாளருடைய
அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் குவிகிறது. தமிழ்
மண்ணில் பண்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்திய சமணம், பௌத்தம்,
இசுலாம், கிறித்தவம் ஆகிய அந்நிய மதங்கள் தங்களின்
மதக் கருத்துகளை தமிழ் மொழியில் எழுதினவேயின்றி அவை தமிழுக்காற்றிய தொண்டு என்பதாக
நாம் கருதக்கூடாது என்கிறார். மாறாக இக்கண்ணோட்டம் தமிழ் மரபிலிருந்து
அம்மதத்தினரை விலக்கி வைப்பதாக அமையும் நுண்ணிய அரசியலை சிவத்தம்பி தெளிவாக விளக்குகிறார்.
இம்மாதிரியான பார்வையே தமிழ்ச் சூழலில் பொது வெளியில் மட்டுமல்லாது நம்முடைய
தமிழ் ஆய்வாளர்களிடையேயும் நிலவுகிறது. இதைக் குறித்து சிவத்தம்பி
பின்வருமாறு கூறுகிறார்: "இலக்கிய உருவாக்கம் என்பது சமூக
உருவாக்கத்தின் ஒரு பகுதியென்பதையும், இலக்கியம் சமூகப் பயிற்சிகளில் ஒன்று
என்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோமேயானால், தமிழ்க் கிறித்தவர்களுக்கு தமிழே அவசியமானது;
அதைவிட வேறெந்த மொழிவழியாகவும் அவர்கள் தம் மத ஈடுபாட்டை(ஆத்ம அனுபவத்தை)ப் புலப்படுத்த
முடியாது. அவர்களுடைய மதத்தின் பயில்வுக்கும் அவர்களிடையே மதவிசுவாசத்தை நிலைபெற நிறுத்துதற்கும்
பயன்படும் எழுத்துத் தொகுதியினை, தமிழுக்கு அவர்கள் ஆற்றும் தொண்டு எனக் கொள்வது
அறிவுநிலைப்பட்ட நோக்கு ஆகாது. ’ஆற்றிய தொண்டு’ என்று கூறும்பொழுது, அதனோடு ஒன்றிணைந்து
நிற்காத, சற்று தூரத்தில் உள்ள ஒரு நிலை ஒளிவு மறைவாக உணர்த்தப்படுகிறது.."(ப.175) அவருடைய இப்பார்வை முஸ்லீம்களுக்கும் பொருந்தும் என்கிறார். அவ்வவ்
மதத்தினரே அவ்வாறு செய்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறவர் தமிழ் மரபில் அவ்வாறு விலக்கிவைத்துப்
பேசும் மரபு இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். தமிழ் மரபில் சைவ, வைணவ சமயங்களின் பணியைக் குறிப்பிடும் போது
அப்பணியையும் தமிழையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கும் நோக்கு இருப்பதையும்
மாறாக தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு என்பதாகப் பார்க்கும் மரபு தமிழ்மொழியில்
இல்லை என்பதையும் கூறுகிறார். இதனை அந்தந்த சமயத்தவர்கள் தங்களுக்குத்
தேவையான இலக்கியங்களைத் தங்களது தாய்மொழியான தமிழில் ஆக்கிக்கொண்டனர் என்று தான் பார்க்க
வேண்டும். இதுவே அறிவியல் நோக்கு என்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார். மேலும்,
தமிழ்ப் பண்பாட்டினுடைய 'உறுப்பலகுகளாக'
இம்மதங்களைக் கொண்டு "தமிழ்ப் பண்பாட்டின்
உறுப்பமைவுக்கும் ஒருமைக்கும் செய்யப்படும் 'பங்களிப்பில்',
இவை ஒவ்வொன்றும் எத்தகைய இடத்தினைப் பெறுகின்றன என நோக்குவதே மேலான,
அறிவியல் பூர்வமான, அணுகுமுறையாகவிருக்கும்.
அத்தகைய ஒரு நோக்கு, தமிழின் இலக்கிய வரலாற்றுக்கு
மாத்திரமல்லாது, தமிழின் பண்பாட்டு வரலாற்றுக்கும் பயனுள்ளதாக
அமையும்"(ப.176) என்கிறார்.
தமிழ் நிலத்தில்
மேற்கொள்ளப்பட்ட மதங்களின் மொழிச் செயல்பாடுகளை அந்நியப்படுத்தும் வகையிலான பார்வையைக்
கண்டித்து அதற்கான அணுகுமுறையைக் கைக்கொள்ள அறிவுறுத்துகிறவர் அம்மதங்களின் செயல்பாடுகளை
அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்த வேண்டியதையும் வலியுறுத்துகிறார். "தமிழ் ஒரு மொழியெனும் வகையில், இந்திய, இந்தியச் சார்பற்ற மதங்களின் பண்பாடுகளுடன் (அவற்றின்
கோட்பாடுகள், நியமங்கள், நம்பிக்கைகள் ஆகியனவற்றுடன்)
எவ்வாறு இயைபினை ஏற்படுத்திக்கொண்டது என்பதை அறிந்துகொள்ளுதல்
இன்னொரு அணுகுமுறையாகும். இந்திய மரபைச் சாராத இரு மதங்களான இஸ்லாமும்
கிறித்தவமும், தமிழ்ச் சூழலில் எவ்வாறு தமது பண்பாட்டமிசங்களைத்
தமிழ்மொழியின் குறியீடுகள் கொண்டு சுட்டத் தொடங்கின, இந்த மொழியின்
பாரம்பரியத்துடன் எவ்வாறு இணைந்து கொண்டன என்பவை பற்றியும், தமது
மதப் பாரம்பரியத்துக்கு முற்றிலும் வேறுபட்ட மதப் பாரம்பரியங்களுக்குப் பழக்கப்பட்டிருந்த
இந்த மொழியில் தமது மதக் கோட்பாடுகள், நம்பிக்கைகளுக்கியையச்
சொற்களை, 'கிளவிகளை' எவ்வாறு ஆக்கிக்கொண்டன
என்பது பற்றியும் ஆராய்வது உற்சாகத்தினைத் தரும் ஒரு முயற்சியாகும்."(ப.176) என்கிறார்.
ஒரு பக்கம் தமிழ் மக்களில் ஒரு பிரிவினரான முஸ்லீம்களும் கிறித்துவர்களும் தமிழ்ச்
சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவதான அணுகுமுறையை கண்டிக்கிறவர் மறுபக்கம் அதற்குத்
தக்கதான அணுகுமுறையை நாம் எவ்விதம் அறிவியல் பூர்வமாகக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும்
தெளிவுறுத்துகிறார். அதே சமயம் இப்படியான அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கைக்கொள்ள
வேண்டிய தேவை என்பது ஓர் ஆய்வின் பயன்பாட்டுத் தன்மையில் இருக்கிறது. ஏனெனில் ஓர் ஆய்வு
செய்யப்படுகிறது என்றால் அது ஏதோ ஒரு விதத்தில் காலம் தாழ்த்தியாவது சமூகத்தை நிச்சயம்
பாதிக்கும் என்பதை நாம் மறக்கலாகாது.
சமூகத்தை இயக்கும்
காரணிகளில் கருத்தியலுக்கு முக்கியமான பங்குண்டு. அக்கருத்தியலைத் தீர்மானிக்கும்
சக்தி ஆய்வுகளுக்கு உண்டு. முக்கியமாக சமூகவியல் ஆய்வுகள் நேரடியாக சமூகத்தின் இயக்கத்தைப்
பாதிக்கும் என்பது மூத்த ஆய்வாளர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. சிவத்தம்பி இதை
உணர்ந்ததனால் தான் போன நூற்றாண்டில் தமிழ் வெகுசன அரசியலில் கால்கொண்டு கடந்த அரை
நூற்றாண்டுகளாகக் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற ‘திராவிடக் கருத்தியலை’ ‘வெகுசனப்படுத்த
முயன்ற’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க கால பிரச்சார அணுகுமுறையை இதற்கான தெரிவான
உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார். காரணம் போன நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த, வெகுசன மக்களை உள்ளடக்கிய
அரசியலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரச்சாரம் என்பது மதச்சார்பற்றத்
தன்மையில் அமைந்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். திராவிட
முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான சி.என்.அண்ணாத்துரையின் தலைமையில் செய்யப்பட்ட இப்பிரச்சாரச் செயல்பாடுகள் தமிழ் மொழியின் மரபான மதச்சார்பற்ற பண்பினை
கொண்டனவாக இருந்திருக்கினறன. முக்கியமாகத் தமிழிலக்கியங்களைக் குறித்து அக்கட்சி முன்வைத்த பிரச்சாரங்கள்
குறிப்பாக திருக்குறளின் சமயச் சார்பின்மையை முன்னிறுத்திய விதம்
தமிழ் வெகுசன அரசியலின் முக்கியமான மாற்றமாக சிவத்தம்பி அவதானித்திருப்பது ஒரு
முக்கியமான பார்வையாகப் படுகிறது. தமிழ் ஆய்வுத் தடத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளைக் கவனப்படுத்தியதோடு நின்றிருந்தால்
ஆய்வுகளின் பயன்பாட்டுத் தன்மையை, சமூகவயமாக்கலை மறுப்பதாகி விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் மேற்கண்ட
பார்வை சமகால அரசியலுக்கு பொருத்திப் பார்க்கும் அவருடைய நடைமுறைசார் அறிவையும் நமக்குப்
புலப்படுத்துகிறது. அதேநேரம் நவீனத் தமிழ் மொழியின் உருவாக்கத்தில் மதச்சார்பற்ற தன்மை, அனைத்து சமயங்களின்
ஒருங்கிணைவு நோக்கு உள்ளிட்ட சமத்துவத் தொழிற்படுகையை எதிர்நோக்குகிறார் என்பதும் வெள்ளிடைமலை.
பிறமொழிகளில் தமிழ்ச் சிந்தனை
தமிழர் சிந்தனை வரலாற்றை எழுதுவதற்கு தமிழர்களால்
தமிழிலேயே எழுதப்பட்டவைகள் போதுமானவையா என்கிற ஆராய்ச்சி முக்கியத்துவமுள்ள ஒரு வினாவை
எழுப்புகிறார் சிவத்தம்பி. ஒரு காலத்தில் பெரும் செல்வாக்குடைய புலமை நிரூபண மொழியாக
இருந்த வடமொழியில் இடைக்காலத்தில் தமிழர்கள் நிறைய பேர் நூல்களை இயற்றியுள்ளனர். அதனால்
தமிழ்ச் சிந்தனை மரபின் தொடர்ச்சியை தமிழர்களால் பிற மொழிகளில் எழுதப்பட்டனவும் ஆய்வுக்குரியவையாக
எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும் வடமொழியில் எழுதியவர்கள்
கூட தமிழ் நிலத்தின் சிந்தனைத் தாக்கத்தை உட்கொண்டுதான் எழுதியிருக்கக் கூடும்; தமிழில்
மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், மராட்டியம், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நூல்களிலும்
தமிழ்ச் சிந்தனையினை ஆய்வு செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இவை மட்டுமல்லாமல்
இடைக்காலத்தில் தமிழில் எழுதப்போந்த இசுலாமியர்களும் கிறித்துவர்களும் தங்கள் தாய்மொழியான
தமிழ் மொழியில் மட்டுமல்லாது உருது, ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் எழுதினர்.
குறிப்பாக தம் மத சம்பந்தப்பட்ட நூல்களை எழுதினர். இது தமிழ் மொழியில் பிற சமயங்களின்
தாக்கம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்வதற்கு இடம் தருவதோடு தமிழ்ச் சிந்தனை மரபின்
தொடர்ச்சியை அம்மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் தாங்கி நிற்குமாற்றை அறிந்து கொள்ள முடியும்
என்று உணர்த்துகிறார்.
தமிழ்மொழியின்
பன்மைத்துவம் அதன் சிந்தனை முறைகளில் மட்டுமல்ல அதன் வெளிப்பாட்டு வடிவங்களிலுமே கூட
இருக்கிறது என்பதை உணர்த்தும் இது ஒரு செயலூக்கமுள்ள அணுகுமுறையாகும். இதனால் பிறமொழிகளில்
உள்ள சிந்தனை வெளிப்பாடுகளையும் தமிழ்ச் சிந்தனை மரபின் தொடர்ச்சியாகப் பார்க்கும்
அகண்ட பார்வையை சிவத்தம்பி கோருகிறார் என்பதையும்
புரிந்துகொள்ள முடிகிறது.
சமஸ்கிருத நெறிப்படுகை
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் குறித்துப்
பேசும்போது அவை சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் விழிப்புணர்வுடன் நடத்தப்பட்டதாக
மதிப்பிடுகிறார் சிவத்தம்பி. ஆனால் மேலை நாடுகளில் நாட்டார் எனும் சொல்லுக்கு கொடுக்கப்படும்
விளக்கமும் தமிழ்ச் சமூகம் போன்ற சமனற்ற வளர்ச்சி வரலாற்றைக் கொண்ட ஒரு குழுமத்தில்
நாட்டார் எனும் சொல்லுக்குக் கொடுக்கப்படும் விளக்கமும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில்
இங்கு சமஸ்கிருத நெறிப்பட்ட வாழ்க்கை மட்டமும், சமஸ்கிருத நெறிப்படாத வாழ்க்கை மட்டமும்
உண்டு என்பதை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அதே நேரம் “சமஸ்கிருத நெறிப்படுகை”
என்கிற எண்ணக் கருவினைத் துஷ்பிரயோகஞ் செய்தல் கூடாது” என்றும் எச்சரிக்கிறார்.
மேலும்,
சமஸ்கிருத நெறிப்படுகை என்பதற்கு “அது சமூக மாற்ற நடைமுறையின் பொழுது காணப்படும் சில
சமூக – பண்பாட்டு நடத்தைகள் பற்றிக் குறிப்பிடுவதாகும். உண்மையில் சம்ஸ்கிருத நெறிப்படுகை
என்னும் தொடரே யதார்த்தத்தினை ஏற்றுக் கொள்வதாகவுள்ளது. அதாவது சம்ஸ்கிருத நெறிப்பட்ட
ஒரு வாழ்க்கை மட்டமும் சமஸ்கிருத நெறிப்படாத இன்னொரு வாழ்க்கை மட்டமும் உள்ளன என்பதை
அது ஏற்றுக் கொள்கின்றது” என்கிறார். இந்தப் பார்வை மிக முக்கியமான பார்வையாகும். தமிழ்ச்
சமூகத்தில் சம்ஸ்கிருத நெறிப்பட்ட தாக்கங்கள் உண்டு என்பதையும் அவற்றின் சாதக, பாதகங்களை
அறிவியல் நெறிப்பட்டு நின்று ஆராயவேண்டியதையும் இப்பார்வை உணர்த்துகிறது.
இதை
விடவும் சமஸ்கிருத நெறிப்படுகை என்னும் போது அதற்கு உட்பட்ட மரபை ‘பெரும் பாரம்பரியம்’
என்பதும் உட்படாத மரபை ‘சிறுபாரம்பரியம்’ என்பதுமான மேலைச் சமூகவியலாளர்களின் பார்வையை
மறுக்கிறார். இரண்டு விதமான நெறிகளுக்கும் சமமான இடத்தினை அளிக்கும் சிவத்தம்பி ஒரு
கீழைத்தேயச் சிந்தனையாளராக நம் மரபினைச் சனநாயகப் பூர்வமாக வெளிப்படுத்துகிறார். அவரின்
இக்கீழைத்தேயச் சிந்தனையே ’நாட்டார்’ என்னும் சொல்லுக்கும் ‘பெரும் பாரம்பரியம், சிறு
பாரம்பரியம்’ என்பவற்றுக்கும் மேலைத்தேய பார்வையையும் விளக்கத்தையும் மறுதலித்து கவனமான
மறுபரிசீலனையைக் தமிழ் ஆய்வுலகிடம் கோரியிருக்கிறது என்றே சொல்லலாம். அதேநேரம் இப்படியான
விழிப்புணர்வுள்ள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தினை
நாம் இனித்தான் உணரவுள்ளோம் என்கிற அவரின் கூர்த்த அவதானிப்பு சமகாலச் சமூகத்தினை ஆய்வுகள்
பாதிக்கும் என்பதான பிரக்ஞைப்பூர்வமான கூற்றாக அமைந்திருக்கிறது.
கலையிணைப்பு நோக்கிலான
விமர்சன நெறி
அடுத்ததாக கலையிணைப்பு நோக்குடன் தமிழின் இலக்கியங்களை
பிற கலைகளுடன் இணைத்து நோக்கும் ஆய்வு முறையியல்களைக் குறித்துப் பேசுகிறார். ஒவ்வொரு
காலத்திலும் அழகியல் மற்றும் சிந்தனை மாற்றங்கள் என்பது கலைகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக
ஏற்படக்கூடியதாகவே அமைவதைப் பின்வருமாறு சொல்லிச் செல்கிறார்: “உண்மையில் ஒரு குழுமத்தின்
அல்லது காலத்தின் அடிப்படையான அழகியல், கலைக்குக் கலை தொடர்பற்றதாக, வேறுபட்டதாக இருக்க
முடியாது. ஒவ்வொரு கலை வடிவத்தினதும் தனித்துவத்துக்கு ஏற்ற வகையில் வெளிப்படுவதாய்,
ஆனால் அடிப்படையில் ஒரே நீர்மையதாகவே அழகியலுணர்வு அமையும்.” (ப.183) என்கிறார். இதனை
தமிழ்நாட்டு வரலாற்றில் படிமக்கலை வளர்ச்சியையும் இலக்கியத்தையும் அவர் ஒப்பிட்டுப் பேசும்போது கண்டுகொள்ள முடிகிறது. கி.பி.
600க்குப் பின் தோன்றிய இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் உவமைகள் தமிழ்நாட்டின் படிமக்கலை
வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டவை. பல்லவர் காலத்தில் தோன்றிய எளிமையான படிமங்களுக்கும்
நாயக்கர் காலப் படிமங்களின் எளிமையற்ற அலங்காரமான படிமங்களுக்கும் அவ்வக்காலத்தில்
தோன்றிய இலக்கியங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டுகிறார். இதன்மூலம்
தமிழில் எழுதப்படும் இலக்கிய வரலாறு இலக்கியத்துடன் முக்கியமாக கவிதையுடன் மற்ற
கலைகளை இணைத்து நோக்கும் ஒரு விமர்சன நெறியை உருவாக்கிக் கொள்வதற்கான முறையியல்கள்
குறித்த தன் ஆலோசனைகளை முன்வைக்கிறார்.
இவ்வாறு
செய்யப்படும் கலையிணைப்பு விமர்சன நெறிமுறைக்குத் தக்கதான கலைச்சொல் உருவாக்கத்தினையும்
நாம் செய்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. ஏனெனில் மற்ற கலைகளான கட்டடக் கலை, ஓவியக்கலை,
சிற்பக் கலை போன்ற நுண்கலைகளின் பாணிகளை இலக்கிய விமர்சனத்தினுட் வெளிப்படுத்தும் போது
அதற்கான கலைச்சொற்களைப் பயன்படுத்துவது என்பது இலக்கிய விமர்சனத்தில் வேறொரு
பரிமாணத்தை அடைய முடியும் என்பது மரபிலக்கியங்களுக்கு மட்டுமல்லாமல்
நவீன இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய விமர்சனநெறியாக இருக்கிறது என்பதை
இங்கு புரிந்துகொள்ள முடியும்.
யாப்பு வடிவங்களின்
சமகால ஒத்திசைவு மீதான புரிதல்
யாப்பு என்பது குறித்த
தற்காலப் புரிதலில் உள்ள குறைபாட்டைச் சுட்டிப்பேசும்
சிவத்தம்பி யாப்பை வெறுமனே எழுத்திலக்கியப்படுத்தி புரிந்து கொள்கின்றோமே
தவிர இசைக்கும் யாப்புக்குமான தொடர்பை உணர்ந்து அவற்றை இணைத்து ஆராயும் பண்பு நம்மிடம் இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார். வரலாறுதோறும் ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்யுள் வடிவங்களில்
ஏற்பட்ட மாற்றங்களுக்கான அடிப்படைகளை அக்காலத்திய சமூக மாற்றத்தில் நாம் கண்டறிய முடியும்
என்று சமூக உற்பத்திப் பொருளான இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இயங்கியலை அப்பட்டமாகப்
புரிய வைக்கிறார். ஆனாலும் நிகழ்காலத்தில் ஏற்படும் சமூக இயக்கத்தின் இசைவை நாம் சரியாக
உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை, “மரபு நிலைப்பட்ட சமூகச்சிதைவுகளுக்கும் சமூக வாழ்க்கைமுறைகளில் ஏற்படும் உடைவுகளுக்கும்
தொடர்புண்டு. மாறிவிட்ட சமூகச் சுருதியுடன் இன்னும் சரியாகச் சேரவில்லை. அதனாலேதான்
யாப்பில் இன்று இத்தனை எகிறல்களைக் காண்கின்றோம். அத்துடன், மாறியுள்ள சமூகக் ‘கதி’யும்
தனது உள்ளார்ந்த ஒத்திசைவை இன்னும் கண்டுகொள்ளவில்லை. சமூக நிலையில், பொருளாதார நிலையில்,
அரசியல் நிலையில் எவ்வாறு இன்றைய காலகட்டம் ஒரு ‘மாறும் காலமாகவுள்ளதோ’, அதே போன்று
யாப்பு நிலையிலும் மாறுங்காலமாகவேயுள்ளது.” (ப.185) என்று கூறுவதிலிருந்து புரிந்துகொள்ள
இயலும். மேலும் இதை சமகால இலக்கிய வடிவங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களை நாம்
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற அவரின் மனத்தாங்கலாகவும் கொள்ள முடியும். அதைவிடவும்
முக்கியமாக சமூக இயக்கவியலின் போக்கு சமகால கலையியல் நடைமுறைகளைப் பாதிக்கும் பாங்கையும்
கலை வடிவங்கள் அவ்வக்கால சமூக சிந்தனையோட்டத்தைப் பிரதிபலிப்பு வடிவங்களாக கொண்டு வெளிவரும் என்பதையும் சிவத்தம்பியின் மேற்கண்ட கருத்துகள் புலப்படுத்துகின்றன.
அச்சுப்பண்பாடும் தொடர்பியல் ஆய்வுகளும்
இலக்கிய வரலாற்று ஆய்வு என்பதை இன்னும்
விரிவான தளத்திற்குக் கொண்டு செல்கிறார். இலக்கியப் பிரதிகளில் மட்டும் ஆய்வுகள் மேற்கொள்ளாமல்
அப்பிரதிகள் சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் விதம் பற்றியும் அவை சமூகத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டு
வாசிக்கப்படும் விதம் பற்றிய சுவாரசியமான ஆய்வை மேற்கொள்ளல் வேண்டும் என்கிறார். சிவத்தம்பியின்
இந்தக் கோரிக்கையே இன்று அச்சுப்பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு வித்திட்டிருக்கிறது என்பதை
அவதானிக்கலாம். ஆனாலும் புத்தகங்களின் உற்பத்தி, அவற்றின் வாசிப்பு இரண்டிற்குமான தொடர்பு,
ஒரு புத்தகம் எவ்வாறு ஒரு சமூகத்தின் சிந்தனையூக்கத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது
என்பதை நாம் இன்னும் ஆய்வு என்னும் செயல்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை. இவ்வாய்வை நாம்
இன்றும் முழுமையாகக் கைக் கொண்டிருக்கிறோமா என்பதை தமிழ் ஆய்வுலகம் தனக்குத் தானே கேட்டுக் கொள்ள
வேண்டிய கேள்வியாக இருக்கிறது.
மேலும் இலக்கிய வளர்ச்சிகளை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முறையியலாக
தொடர்பியல் ஆய்வினை (Communication Studies) வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறும்
சிவத்தம்பி அவை எக்காலத்தைப் பற்றியனவாக இருந்தாலும் கால வரையறைப்படுத்தப்பட வேண்டியதில்லை
என்கிறார். தற்போது இலக்கிய வகைமைகளைக் தனித்தனியாகக் கால வரிசைப்படுத்தாமல் இலக்கிய
வரலாறுகளில் ஆய்வு முயற்சிகள் இத்தொடர்பியல் நெறியைக் கொண்டு நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன என்பது
சற்று ஆறுதலளிக்கும் ஒன்று.
சர்வதேசிய தமிழ்க் கற்கை அமைப்பு
அடுத்ததாக
சர்வதேசிய அளவில் ஒரு கற்கை அமைப்பை உருவாக்குவது தொடர்பானது. பல்வேறு நாடுகளில் உள்ள
தமிழர்கள் படைத்தளிக்கும் படைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றின் தனித்தன்மைகளைப் பேணும்
விதமாக அவற்றை அவ்வந்நாடுகளின் படைப்பிலக்கியங்களாகவும் அதே நேரத்தில் தமிழிலக்கியங்களாகவும்
கொள்ள வேண்டும்; இதற்கான ‘கற்கை அமைப்பினை ஒழுங்கமைத்துக் கொள்வதே’ நமக்கான தலையாய பிரச்சனை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
அரசு நிறுவனங்களாகிய உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் போன்றவை ‘கற்கை அமைப்புகளாக’ நம்மால்
முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அவை தம்முடைய எல்லைக்குள் நின்று கொண்டு
இயன்றவற்றைச் செய்கின்றன. இருப்பினும் ஒரு சர்வதேசிய அளவில் தமிழ் மொழி பேசும் பிறநாட்டவர்களையும்
ஒருங்கிணைத்து ஒரு குழுமமாகச் செயல்பட வேண்டிய கால நிர்ப்பந்தம் இன்றைய உலகமயமாக்கல்
காலகட்டத்தில் நம்முன் நிற்கிறது. இவற்றைச் சாத்தியப்படுத்துவதற்கான நடைமுறைச் சிக்கல்களைத்
தீர்ப்பதில் சிவத்தம்பியின் ஆலோசனைகளை மனதில் கொண்டு தான் அதற்கான தீர்வினை எட்ட முயல
வேண்டும்.
முடிவாக சில அவதானிப்புகள்
இப்பிரச்சனை
மையங்கள் ஒரே மாதியானவையன்று; ஒன்றிலிருந்து ஒன்று கிளைத்து முகிழ்க்கும் தன்மை கொண்டவை.
“தமிழிலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள பிரச்சனை மையங்கள் இவைகளே. தொடக்கத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது
போன்று, இவையே பிரச்சனைகளன்று. இப்பிரச்சனை மையங்களிலிருந்தே பல்வேறு பிரச்சனைகள் கிளம்புகின்றன.
சமூக
வாழ்க்கை முழுமையில் இலக்கியத்துக்குரிய இன்றியமையாத இடத்தினை அறிந்துணர்ந்து கொள்வதும்,
வரலாற்று நடைமுறைகளுள் இலக்கியத்தின் பணியையும் பயன்பாட்டையும் கண்டறிந்து கொள்வதும்
இலக்கிய வரலாற்றாசிரியனுக்குள்ள பொறுப்பு ஆகும். இப்பொறுப்பினை அவன் நிறைவேற்றும் முறைமையில்,
சமூக மாற்றத்திலும், சமூக மாற்றத் தேவையை உணர்த்தி விளக்கும் சிந்தனைகளை உருவாக்குவதிலும்
இலக்கியத்துக்குரிய இடத்தை அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறுவதாகவிருத்தல் வேண்டும்.”
(ப.190) என்று சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள இயலும்.
தமிழ்மொழியின் சிந்தனை மரபை மீட்டெடுக்க நினைத்து அவர் சொல்லும்
கருதுகோள்கள் சிவத்தம்பியை ஒரு ’கடுந்’தூய்மைவாத ஆய்வுப்போக்காளராக அடையாளப்படுத்திவிடக்
கூடிய வாய்ப்பிருக்கிறது. சிவத்தம்பியிடம் காணப்படுவது தூய்மைவாத நோக்கல்ல என்பது முக்கியமாகக்
குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. எல்லோரையும் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து
அவர்கள் கால்கொண்ட இத்தமிழ் நிலத்திலிருந்து உதித்த சிந்தனைகள் அனைத்தும் தமிழ்ச் சிந்தனையே
என்பது அவர் துணிபு. அதற்கான அவர்களின் அங்கீகாரத்தினை வழங்கவேண்டும் என்பதை முன்மொழிபவராகவும்
அந்தத் தமிழுணர்வு என்பது அவர்களிடம் காணப்படும் வேறுபாடுகளான சாதி, மத, மொழி, நாடு,
எல்லைகள் கடந்த ஒரு உணர்வு என்பதையும் புரிந்து கொண்டவராகவே தெரிகிறார்.
மேலும், வரலாற்றுப் பொருள்முதல்வாதியான அவரிடமிருந்து மாறிவரும்
உலகத்தோடு தமிழ்ச் சமூகம் போட்டியிட்டு தன்னை வளர்த்துக் கொள்வதற்கு, தன்னுடைய குறுகிய
பிரதேச உணர்வைக் கடந்து ஒரு விரிவான பரப்பகற்சி கொண்ட இனமாக தமிழினம் சர்வதேச அளவில்
ஒருங்கிணைந்து அறிவுத்தளத்தில் ஒரு குழுமமாகச் செயல்படுவதற்கான ஒரு ஊக்கமளிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், தமிழ்ச் சமூகத்தின் மனதில் வரலாற்றுப் போக்கில் குடிகொண்டுவிட்ட
பரஸ்பர புரிந்துணர்வின்மை, வெறுப்பு (மொழியாலும், பிறப்பாலும்) முதலியவற்றை களைந்தெரிய
வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தை தன் ஆய்வுநெறி முறையினின்று வழுவாது முன்வைக்கிறார்.
இவற்றையெல்லாம் ஒருங்கே நோக்கும் போது தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபை வரலாறுதோறும்
மாறி வந்திருக்கக் கூடிய பாங்கை அறிந்து தெளிந்து தமிழ் மொழியின் பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும்
அறிவியல் நிலைப்பட்ட ஒரு சமூக வரலாற்று ஆய்வாளராகத் சிவத்தம்பி திகழ்கிறார் என்பதைப்
புரிந்துகொள்ள இயலும்.
இவற்றையெல்லாம் தமிழ் மொழி
என்கிற ஒரு தளத்தில் வைத்து அவர் பேசப் புகுந்திருப்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும்
நமக்கு ஒரு உணர்வு ரீதியான தாக்கத்தைக் கொடுப்பது இயல்பானது. ஆனால் நாம் ஒன்றை மனத்திலிறுத்த
வேண்டும். சிவத்தம்பி எந்த இடத்திலும் அறிவியல் நிலையினின்று வழுவாது அதேநேரம் தான்
கால்கொண்ட மொழித்தேயத்திற்கு ஆய்வுரீதியில் செயலாற்ற முனைந்த ஒரு ஆய்வாளராகவே இருந்திருக்கிறார். அத்தகைய ஆய்வுப்பார்வையின் தொடர்ச்சியாகத் தான் நமக்கான அறிவு
மரபை மீட்டெடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்தும் அதற்கான சிக்கல்கள் குறித்தும் தன்
நூலில் விவாதிக்கிறார்.
சிவத்தம்பியிடம் ஒரு பார்வை இருக்கிறது. அது
என்னவெனில் தமிழ்ப் பண்பாடும் இந்தியப் பண்பாடும் ‘கொடுக்கல் வாங்கல்களை’ தமக்குள்
நிகழ்த்தியிருக்கின்றன என்பதை மனங்கொண்டவராக இருப்பது. இது அவருடைய ஆய்வுகளில் தெளிவாகவே தெரியக்கூடிய விடயம். தமிழின் இந்தியத்
தன்மையை மறுக்காது அதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இந்தியத் தன்மையின் பின்புலத்தில்
தமிழின் தனித் தன்மையையும் விட்டுக் கொடுக்காதிருக்கிறார். இந்திய வரலாற்றில் ஏற்பட்ட
பொதுவான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தையும் பாதித்தது என்பதை மறுக்காமல், ஆனால் தமிழ்ச் சமூகத்தின் நீண்ட
நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஒரு தனித்துவமான போக்கு அசல் வைரத்தில் உள்ளூர ஓடும்
நீரோட்டம் போல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து உணர்ந்தவராகத் திகழ்கிறார். இதனை மீட்டுருவாக்கம் செய்ய அதற்கான முறையியல்களை,
ஆய்வு அணுகுமுறைகளை நமக்கானதாக வகுத்துக் கொள்வதற்கான ஆக்க ஊக்கத்தினைத் தருகிறார்.
ஆனால் இப்போது
நமக்கிருக்கும் மிக முக்கியமான பணி சிவத்தம்பியின் இக்கருதுகோள்கள் தமிழ் ஆய்வுச் செல்நெறிகளில்
ஏற்படுத்திய தாக்கங்கள் யாவை என்பதை தனியாக ஆராய்வதாகும்.
தமிழில் இலக்கிய
வரலாறு (வரலாறெழுதியல் ஆய்வு) என்கின்ற இந்நூல் இன்றும் சமகாலப் பொருத்தப்பாட்டுடன்
இருப்பதை இக்கட்டுரை காட்டி நிற்கிறது. இந்நூலின் ஒவ்வொரு இயலும் தனித்தனி குறுநூல்களாக
வரக்கூடிய அளவு அத்துணை முக்கியத்துவமுள்ளனவாகும். ஆனாலும் கடந்த 10 வருடங்களுக்கு
மேலாக இத்தகையதொரு புத்தகம் மீள்பதிப்பு வராமல் இருப்பது தமிழ் ஆய்வுலகில் ஒருவித
செயலற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் மறுக்கவியலாது.
(நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழில் அக்டோபர் 2023 அன்று வெளிவந்த ஆய்வுக்கட்டுரையின் விரிவு)
கருத்துகள்
கருத்துரையிடுக