இந்துத்துவப் பாசிசத்தின் அதிகார முகங்களும் ரவிக்குமாரின் எதிர்ப்பரசியலும் (கட்டுரை)
இந்திய அரசியல் வரலாற்றில் 21 ஆம் நூற்றாண்டு என்பது தனித்த பண்புகளும் அதற்கே உரிய தனித்த விளைவுகளும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இந்திய அரசியல் கடந்த காலங்களில் தனக்குள் பொதிந்து வைத்துள்ள நோய்க்கூறுகளை மிகவும் மூர்க்கமாக வெளிப்படுத்தத் தொடங்கிய காலம் எனச் சொல்லலாம். மத அடிப்படைவாதம், வெறுப்புப் பேச்சு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்திய அரசியல் நடவடிக்கைகளில் மையமான பேசுபொருளாக மாறிய காலகட்டமாகும். இவை இந்தியாவில் பாசிசம் அரசியல் வடிவம் பெறத் தொடங்கி விட்டதைக் காட்டுவதாக சமூக அரசியல் ஆய்வாளர்கள் கவலை கொள்கின்றனர்.
இவையாவும் 2014 ஆம் ஆண்டு தான் தொடங்கியது
என்றோ பாஜக ஆட்சி முடிவுற்றவுடனேயே மேற்கண்டவை யாவும் முடிவடைந்துவிடும் என்றோ இந்திய
அரசியல் வரலாற்றின் செல்திசைகளை ஆழ்ந்து நோக்கியவர்கள் எவரும் நம்ப மறுத்துவிடுவர்.
ஏனெனில் இந்திய சமூக அரசியல் வரலாற்றின் இயங்கு பாதையைக் கூர்ந்து அவதானித்தோமானால்
அதிகார அரசியலின் காட்சி மாற்றங்களுக்கு இடையில் என்றென்றும் மாறாதிருக்கும் சில பண்புகள்
- இந்தியச் சமூகத்திற்கென்றே தனித்துவமான சில கூறுகள் என்றும் சொல்லலாம் - பன்மைத்துவமான
வெளிப்பாடுகளோடு இருந்து வந்திருப்பதை ஒத்துக்கொள்வோம். அப்பண்புகள் உண்மையில் இந்தியர்கள்
பெருமைப்பட்டுக் கொள்ளும் ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதின் மறுபக்கமான பாதகமான அம்சங்கள்
என்றும் சொல்லலாம். வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நம் இந்திய நாட்டில் நடைமுறை அரசியல்
‘ஒற்றுமை’ என்பதை மேற்பூச்சாகவும் மறுபக்கத்தில் வேற்றுமையின் பாதகமானப் பண்புகளை முன்னிறுத்தி
செயல்படுவதையும் முன்னெப்போதைவிடவும் இப்போது அதிகமாக உணர முடிகிறது.
மத்தியில்
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று தன் முதல் ஐந்தாண்டு காலத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு
அடுத்த ஐந்தாண்டு காலத்தின் முதல் பாதியை முடித்திருக்கிறது. 2014 தொடங்கி இந்த எட்டு
வருடத்தில் பல்வேறு சர்ச்சைகள், வெறுப்புப் பேச்சுகள், எல்லாவற்றையும் விட அதிகாரப்பூர்வமாக,
பாராளுமன்றங்களில் இயற்றப்படுகின்ற சட்டங்கள், கொண்டு வரப்படுகின்ற ‘மக்களுக்கான’ திட்டங்கள்
யாவும் நவீன தாராளவாதக் கொள்கைகள் சார்ந்தது என்று எளிமையாக முடிவுக்கு வந்து விடலாம்.
ஆனால் இந்த எளிமையான முடிவு தாராளவாதக் கொள்கைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இந்துத்துவப்
பாசிசத்தை வெளிக்கொண்டு வர உதவாது. பாஜகவின் நீண்ட கால செயல்திட்டமான இந்தியாவை ‘இந்துராஷ்டிரமாக’
மாற்றும் கனவுடன் நவீனத் தாராளவாதக் கொள்கையும் இணைந்ததன் விளைவுதான் இன்றைய பாஜக ஆட்சி.
இந்துத்துவ மதவாத தேசியக் கொள்கை இந்திய அரசியலில் இவ்வாறாக தன்னுடைய நீண்ட நாள் செயல்திட்டத்தைச்
செயல்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்கி இந்திய அரசியல் களத்தைச் சோதனைக்
களமாக மாற்றியிருக்கிறது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.
இன்றைய வெகுசன அரசியலின் நிலை
இன்றைய
இந்திய வெகுசன அரசியலின் கருத்தியல் தளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பவை மத அடிப்படைவாதம்,
வெறுப்புப் பிரச்சாரம், இந்து ராஷ்டிரம் முதலியவையே ஆகும். இவற்றை எதிர்ப்பதும் ஆதரிப்பதுமாக
இந்தியாவில் வெகுசன அரசியல் செயல்பாடு இரு துருவ அரசியலாக மாறி இருக்கின்றது. இன்றுள்ள
நிலைமைக்கு யார் காரணம் என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு ஒரு தரப்பை மட்டும்
காரணமாக்கி விடுவது மிகவும் எளிது. ஆனால் இந்த நிலைமைக்குக் காரணம் அதை ஆதரித்தவர்கள்
மட்டுமல்ல; அதனை எதிர்த்தவர்களும் கூடத் தான். முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்களின்
வரலாற்றுப் பிழைகளும் தான் இவற்றிற்கான காரணிகளில் முக்கியமானதாக இருக்கிறது.
இவ்வரலாற்றுப்
பிழைகள் தற்போதைய விளைவுகளுக்குக் காரணமாக இருக்கிறது என்பதை நேர்மையாக ஒத்துக்கொண்டு
அப்பிழைகளை சரி செய்யத் தொடங்கியுள்ளனர் முற்போக்காளர்கள். முற்போக்காளர்களின் இந்த
விழிப்புணர்வே எதிர்ப்புக் குரல்களாக இன்று பல அவர்களின் பல தரப்புகளிலிருந்தும் வெளிப்படுகின்றன.
இந்தியாவின் பாசிசம் வெகுசன அரசியலில் காலெடுத்து வைக்கும் போதும் தேர்தல் அரசியலில்
வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் போதும் வரலாற்றில் ஒவ்வொரு முறையும்
இந்த எதிர்ப்புக் குரல்கள் எழாமலில்லை. அவ்வெதிர்ப்பு ஒன்றிணைந்த அளவில் நடைபெறாதது
மட்டுமல்ல கடந்த காலத்தில் இந்துத்துவக் கொள்கை கொண்ட பாஜக இவ்வளவு பெரும்பான்மையோடு
ஆட்சியமைத்ததுமில்லை என்பதும் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. ஏனெனில் சர்வ அதிகாரம்
கொண்ட ஒரு மதவாத பாசிச அரசு தேசிய அளவில் தோன்றிய பிறகு தான் முற்போக்காளர்களின் ஒருங்கிணைந்த
எதிர்ப்பு உருவாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.
பொதுவாக வரலாற்றில் வெளிப்படும் பல குரல்கள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரப்பாகக் கொள்ளலாம். ஒன்றுபட்ட மக்கள் சமூகத்தில் பல தரப்புகள்
உருவாவது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அம்சம். அந்த வகையில் சமகால வரலாற்றில் வெளிப்படும்
பல குரல்களில் ஒன்றாக ரவிக்குமாரினுடைய எதிர்ப்புக் குரலை எடுத்துக் கொள்ளலாம். 2000
தொடங்கி 2020 வரைக்கும் பாசிசம் தொடர்பாக ரவிக்குமார் எழுதியும் பேசியும் வந்தவற்றின்
மூலம் சமகால வரலாற்றினை துலக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது. அந்த
வகையில் எதிர்ப்பு அரசியல் தொடர்பான ரவிக்குமாரினுடைய அணுகுமுறை குறித்து ஆராய்வதை இக்கட்டுரை
நோக்கமாகக் கொண்டு அமைகிறது.
அதற்கு முன்பு வெகுசன அரசியல் பற்றியும்
அந்த வெகுசன அரசியலில் ரவிக்குமாரின் எழுத்துகள் பெறும் இடத்தினையும் நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
வெகுசன அரசியலின் முக்கியத்துவம்
வெகுசன அரசியல் என்பது பரந்துபட்ட மக்களைச் சென்றடையக்
கூடிய அரசியல் செயல்பாடு. வெகுசன அரசியலில் தேர்தலும் தேர்தல் நடவடிக்கைகளும் முக்கியமான
இடத்தைப் பெறக்கூடியன. ஏனெனில் தேர்தலின் மூலமே இந்தியா போன்ற ’ஜனநாயக’ நாட்டில் அதிகாரத்தைக்
கைப்பற்றக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இவ்வெகுசன அரசியல் களத்தை அரசியல் கட்சிகள்,
கட்சி சாரா அமைப்புகள், தனிநபர்கள் போன்ற பலரும் செயல்படக்கூடிய களம் என்று கூடச் சொல்லலாம்.
இவர்கள் எல்லோரும் தங்களின் கொள்கைகளை, சித்தாந்தத்தை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு
சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவர். எந்த நடைமுறை அரசியலாக இருந்தாலும் அது இடதுசாரிக்
கொள்கையாக இருந்தாலும் வலதுசாரிக் கொள்கையாக இருந்தாலும் இந்த வெகுசனத் தளத்தைக் கைப்பற்றுவதையே
நோக்கமாகக் கொண்டிருப்பர். அப்போது தான் அவர்களின் சித்தாந்தம் நடைமுறைப்படுத்தப்படும்
என்பதை அவர்கள் நன்கு அறிவர். அரசியல் செயல்பாட்டாளரான ரவிக்குமாரின் பேச்சுகளும் எழுத்துகளும்
இவ்வாறு வெகுசன அரசியலின் பின்புலத்தில் வைத்துப் பார்க்கப்படுவதே சரியாக இருக்கும்.
இன்றைய இந்தியாவின் நிலையை எழுத்தாளர்
அருந்ததி ராய் ஒரு பேட்டியில் பின்வருமாறு விளக்குகிறார்: ”ஜனநாயகம் மிக மோசமாக அரிக்கப்பட்டு,
அதன் அமைப்புகள் எல்லாமே அதனதன் இடங்களில் வெற்றுக்கூடுகளாக நின்றுகொண்டிருக்கின்றன.
’ஜனநாயகத்தின் கண்காட்சிப் பலகணி’யாக நாம் மாறிவிடும் அபாயத்தில் இருக்கிறோம்”. இன்றைய
இந்தியாவின் அரசியல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பல அறிஞர்களும் அரசியல் விமர்சகர்களும்
கவலை கொண்டு இருக்கின்றனர். இந்துப் பெரும்பான்மைவாதம் தலைதூக்கியிருக்கும் இந்த காலகட்டத்தில்
பாசிசத்திற்கான அடிப்படைகளை இந்திய அரசியல் அரங்கில் அரங்கேற்றப்பட்டு வரும் இச்சூழலில்
ரவிக்குமாரின் எழுத்துகளும் பேச்சுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. வெகுசன அரசியலில்
பலதரப்பட்ட எதிர்வினைகளில் ரவிக்குமாரினுடையது எந்த வகையில் தனித்துத் தெரிபவை என்பதும்
வெகுசன அரசியலில் அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் பெறுமிடம் குறித்தும் ஆராய வேண்டிய
தேவையிருக்கிறது.
இந்துத்துவத்தின் அமைப்பு ரீதியிலான செயல்பாடுகள்
இந்துத்துவ
அமைப்புகள் 2014க்குப் பிறகு இந்தியாவையே இந்துத்துவ அரசியலின் சோதனைக் கூடமாக மாற்றியமைத்துக்
கொண்டிருக்கிறது. இதற்கு அதிகாரத் துணையாக இருப்பது பாஜக அரசு. பாஜகவையும் இந்துத்துவ
அமைப்புகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முதலில் இவற்றின் செயல்பாடுகள் கடந்த
காலத்தில் எவ்விதம் இருந்தன என்பதையும் அவற்றின் அமைப்பு ரீதியிலான செயல்பாடுகளைக்
குறித்தும் ரவிக்குமாரின் எழுத்துகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
தனது கட்டுரையொன்றில் இந்து அடிப்படைவாத
அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளின் கொள்கைகளும் அதன் செயல்திட்டங்களும்
ஹிட்லரின் நாஜிக் கொள்கையையும் முசோலினியின் பாசிசக் கொள்கையையும் அடியொற்றியே இருக்கிறது
என்பதை ஆதாரத்துடன் முன்வைக்கிறார் ரவிக்குமார். மேலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன்
துணை அமைப்புகள் வெளிப்படையாகத் தங்களுக்குள் தொடர்பில்லாதது போல் தெரிவனவே அன்றி உள்ளுக்குள்
அவை மறைமுகமான உறவைப் பேணி வருவனவாகவே இருக்கின்றன என்பதை அவற்றின் செயல்பாட்டின் வழியே
விளக்கிச் செல்கிறார். மேலும் அவர் விளக்கும் போது இத்தாலியிலும் ஜெர்மனியிலும் முசோலினியாலும்
ஹிட்லராலும் போன நூற்றாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாசிசத்தின் இந்திய வடிவத்தையே
ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதவாத அமைப்புகள் இன்று நடைமுறைப்படுத்த முயற்சிப்பதையும்
வெளிப்படுத்துகிறார்.
ஹிட்லர் மற்றும் முசோலினியின் பாசிச வடிவத்தை
இந்துப் பெரும்பான்மைப் பாசிசத்தோடு ஒப்பிடும் போது நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது.
இவ்விரண்டு வகையான பாசிச வடிவங்களை இந்தியாவில் அமல்படுத்த நினைக்கும் இந்துமதவாத அமைப்புகளில்
ஒன்றான இந்துமகா சபையின் தலைவராக இருந்தவரான சாவர்க்கர் ஜெர்மனியில் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டதைப்
போலவே இந்தியாவிலிருந்தும் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.
ஹிட்லருடைய பின்வரும் மேற்கோள் தான் பாசிசத்தை வெகுசனப்படுத்தும் முக்கியமான செயல்திட்டத்தைக்
கொண்ட அவருடைய எண்ணப்போக்கை வெளிப்படுத்துவதாக அமைகிறது: “வெகுஜன ஆதரவு என்பது ஆதிக்கத்தை
நிலைநாட்டுவதற்குத் தேவையான முதல் அம்சமாகும். ஆனால் அந்த அடித்தளத்தை மட்டுமே நம்பிக்
கட்டப்படும் ஆதிக்கம் பலவீனமாக, நிலையற்றதாகவே இருக்கும். எனவே வெகுஜன ஆதரவின் மூலம்
ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர்கள் அந்த அடித்தளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு படையை
உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் படையைப் பயன்படுத்தும் ஆற்றலையே நாம் அதிகாரம் என்கிறோம்.
இந்த இரண்டாவது வகைப்பட்ட ஆதிக்கம் முன்னதை விட உறுதியாக ஆதரவும், அதிகாரமும் இணைந்தால்
அதிலிருந்து ஒரு ஆதிக்கம் பிறக்கும். அதுவே மரபின் ஆதிக்கம். பழைய மரபு, வெகுஜன ஆதரவு,
அதிகாரம் மூன்றும் இணைந்தால் அதனை அடிப்படையாகக் கொண்ட ஆதிக்கம் வெல்லவே முடியாததாக
நிலைத்திருக்கும்” (ப.175)
ஜெர்மனியின் ஹிட்லர் முன்னிறுத்திய பாசிசம்
மேற்சொன்ன பழைய மரபு, வெகுசன ஆதரவு, அதிகாரம் மூன்றும் கைகோர்த்த ஒரு வடிவம். இந்த
வகையான பாசிசத்தின் இந்திய வடிவத்தையே ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பிற இந்துமதவாத அமைப்புகள்
இந்தியாவில் அமல்படுத்த முயற்சிக்கின்றன. இவற்றில் பழைய மரபு என்பது பாசிச ஆதரவாளர்கள்
கைக்கொள்ளும் முக்கியமான செயல்திட்டமாகும். ராம் புனியானி(2019: ப.21) தன்னுடைய ‘மதவாத
தேசியம்’ என்கிற நூலில் ஆர்.எஸ்.எஸ். குறித்துக் கூறுவது இதனை நமக்கு சற்றுத் தெளிவுப்படுத்தும்:
“ஆர்.எஸ்.எஸ். என நான் சொன்னதும் மக்களின் மனதுக்கு வரும் முதல் விஷயம் அது இஸ்லாமிய
எதிர்ப்பு அமைப்பு என்பது தான். ஆனால் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இது அவர்களின்
கொள்கையின் மேற்பகுதி மட்டும்தான். உள்ளார்ந்த உண்மையான கொள்கை என்னவென்றால், பிறப்பு
சார்ந்த சமத்துவமின்மையை உருவாக்க வேண்டுமென்பதே!” என்கிறார். பிறப்பு சார்ந்த சமத்துவமின்மையை
வலியுறுத்தும் மனுதர்மத்தின் வருணாசிரமக் கொள்கைகளையே நம் பண்டைய இந்தியாவின் ’பெருமைமிகு’
பழைய மரபாக இங்கிருக்கிற இந்துத்துவ அமைப்புகள் முன்னிறுத்துகின்றன. தன்னுடைய அடிப்படைவாதக்
கொள்கைகளுக்கு முக்கியமான செயலூக்கியாக ‘இப்பெருமைமிகு’ பழைய மரபைப் பேசுவதன் மூலம்
இந்தியாவை இந்துக்கள் மட்டும் வாழும் ஒரு நாடாக -‘இந்துராஷ்டிரமாக’ - மாற்றுவதை அவை
நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்றைய சூழலில் இந்தியாவில் பிற மதத்தினர் தங்களின் தாய் மதத்திற்குத்
திரும்ப வற்புறுத்துவதற்கும் அப்படித் திரும்பாதவர்கள் ‘இந்துராஷ்டிரத்தை’ விட்டு வெளியேற
வற்புறுத்துவதற்கும் அப்பழைய மரபுக் கொள்கை இந்துத்துவவாதிகளுக்கு பெருமளவில் கைகொடுக்கிறது.
ஹிட்லர் சொன்ன பாசிசத்தின் முதல் தகுதியான பழைய மரபு இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகளால்
பின்பற்றப்படுவதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்ததாகப் பாசிசத்தின் முக்கியமான தேவை
வெகுசன ஆதரவு. இந்துத்துவக் கொள்கையை வெகுசனப்படுத்த அதாவது பரந்துபட்ட மக்களை ஏற்கச்
செய்ய அவர்கள் வெறுப்புப் பேச்சு உட்பட பல உத்திகளைப் பயன்படுத்துவர். அதாவது மதச்சிறுபான்மையினர்
மீது அவர்களின் மத நடவடிக்கைகளை இழிவுப்படுத்தியும் அவர்கள் சமூகத்தில் முன்னேறியுள்ளதாகவும்
அவர்களின் முன்னேற்றமே இந்துக்களுக்கு முன்னேறுவதற்குத் தடையாக இருப்பதாகவும் ஒரு மாய
பிம்பத்தைக் கட்டமைப்பர். இதனால் ‘இந்து’ இளைஞர்களை ஒரு விதத் தாழ்வு மனப்பான்மையிலாழ்த்தி
அவர்களை மாற்று மதத்தினர் மீதான வெறுப்பைத் தூண்டுவர். இவ்வெறுப்புப் பேச்சு இந்துத்துவ
அமைப்புகளுக்கு வெகுசன ஆதரவைப் பெற்றுத் தந்தது என்றாலும் இவ்வெகுசன ஆதரவு மட்டுமே
அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அவ்வெகுசன ஆதரவைப்
பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தில் அமர வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதற்கான காலச் சூழல் 2014 ஆம் ஆண்டு இந்திய அரசியல் களத்தில் அமைந்தது மட்டுமல்லாமல்
அவ்வாய்ப்பை மிகச் சரியாகவும் பாஜகவும் பயன்படுத்திக் கொண்டது என்பதை மறுக்க இயலாது. அதிகாரத்திலிருப்பவர்கள்
வெறுப்புப் பேச்சைப் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதற்கு கடந்த காலத்தில் இந்தியாவில்
முதல்முறையாக குஜராத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசே வரலாற்றில் சரியான உதாரணமாக
இருக்கிறது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக
இருந்த சமயத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அதற்கு முன்பு நடந்த மதக்கலவரங்களிலிருந்து பண்பு ரீதியாக அது மாற்றமடைந்திருந்தது.
ஏனெனில் அதற்கு முன்பு நடந்த மதக்கலவரங்களில் அதிகாரத்திலிருப்பவர்களின் துணை அவ்வளவு
எளிமையாக, வெளிப்படையாக கலவரக்காரர்களுக்குக் கிடைத்துவிடவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில்
ஆட்சியைப் பிடித்த பாஜக இந்த முறை முன்பு நடந்த மதக்கலவரங்களைப் போலில்லாமல் அவற்றிற்கு
மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கலவரங்களை நடத்துவதற்கு உதவியாக அரசு நிறுவனங்களைப்
பயன்படுத்தியிருக்கிறது. மதக்கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணம்
குஜராத் பாஜக அரசு தன்னுடைய உளவுத்துறையின் மூலம் மதச் சிறுபான்மையினரின் குறிப்பாக
இசுலாமியர்களின் சமூக, பொருளாதார நிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்க வைத்து, அந்தத் தகவல்களைக்
கொண்டே 2002 இல் திட்டமிட்ட முறையில் மதச் சிறுபான்மையினர் மீது வன்முறையினை ஏவிவிட்டிருக்கிறது.
இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ அமைப்புகளின்
சோதனைக் கூடமாக குஜராத் மாற்றப்பட்டதற்கான ஒத்திகையாக 2002 இல் நடைபெற்ற இம்மதக்கலவரத்தைக்
குறிப்பிடுகிறார் ரவிக்குமார். இது குறித்து ‘குஜராத்: இந்துப் பெரும்பான்மை ஆட்சிக்கான
ஒத்திகை’ என்ற கட்டுரையில் பின்வருமாறு சொல்கிறார்: ”இந்தியாவில் மதக்கலவரங்கள் நடப்பது
புதிதல்ல. ஆனால் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் அரசியல் பரிசோதனைக் கூடமெனக் கூறப்படும்
குஜராத்தில் நடந்து வருபவை வழக்கமாக நடைபெறும் வகுப்புக் கலவரங்கள் அல்ல. இப்போது குணரீதியான
ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்தக் கலவரத்தின்போது
முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. எங்கெல்லாம் முஸ்லிம்களின் வீடுகள்
உள்ளன, வியாபார ஸ்தலங்கள் உள்ளன, எந்தெந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் பங்குகள் வைத்துள்ளனர்
என்பவை குறித்து அரசாங்கம் கணக்கெடுத்து அதை மதவெறியர்களின் கையில் கொடுத்துள்ளது.
அப்படி வழங்கப்பட்ட கணினித் தாள்களைக் (Computer sheets) கொண்டே குறிப்பான தாக்குதல்களை
அவர்கள் நடத்தியுள்ளனர்.” (ரவிக்குமார்.2002: ப.169-170). இங்கு நாம் பார்க்க வேண்டியது
தாக்குதல் நடத்திய கலவரக்காரர்கள் வழிநடத்தப்பட்ட விதம். முஸ்லிம்கள் இந்துக்களை விட
முன்னேறியுள்ளதாகவும் அவர்களை நிர்மூலமாக்க அவர்களின் சொத்துக்களையே முதலில் அழிக்க
வேண்டும் என்ற வெறுப்புப் பேச்சே அக்கலவரக்காரர்களுக்கு வழிகாட்டுதலாக இருந்திருக்கிறது.
வெறுப்புப் பேச்சோடு அதிகாரமும் இணைந்தால் ஏற்படும் விளைவுகளை ரவிக்குமாரின் மேற்குறிப்பிட்ட
மேற்கோள் உணர்த்துகிறது.
இந்துத்துவத்தை செயல்படுத்துவதற்கான இன்னொரு
தேவை தமக்கென படைகளை உருவாக்குவதாகும். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் கிளை
அமைப்புகளும் தமக்கென்று இத்தகைய படைப்பிரிவுகளை வைத்திருக்கின்றன. அவை வெளிப்படையானவையாக
எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இராணுவ அமைப்புப் போன்றே இருப்பதையும் ஹிட்லர் உருவாக்கிய
அதிரடிப்படை போன்றே இருப்பதையும் ரவிக்குமார் ஒப்பீட்டு உறுதி செய்கிறார். ஹிட்லர்
தன்னுடைய அமைத்துக் கொண்ட அதிரடிப் படையின் வடிவமைப்பும் ஒழுங்குமுறைகள் குறித்தும்
சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.
1.
அதிரடிப்படையின்
பயிற்சி கட்சியின் நலனுக்கு ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும். எனவே விளையாட்டுப் பயிற்சிக்கே
முக்கியத்துவம்.
2.
பார்த்ததும்
அதன் கொள்கையையும், இலக்கையும் புரிந்து கொள்ளக்கூடியதாய் அதன் சீருடை இருக்க வேண்டும்.
வெளிப்படையான சீருடை ஒன்றை அணிவது ரகசிய அமைப்பு என்ற அவப்பெயரையும் போக்கும். (மேலது.
ப.176)
இந்தப் படையைப் போன்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்
தனக்கென தனியான படைப்பிரிவையும் அதற்கான கடுமையான விதிமுறைகளையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.
இவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போது நம்மால் இந்துத்துவ அமைப்புகளின்
கட்டுதிட்டமான செயல்திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் இவ்வாறு இத்தாலியையும் ஜெர்மனியையும்
இங்கிருக்கிற இந்து மதவாத அமைப்புகள் நகல் செய்த போதிலும் அங்கு கவர்ச்சியான தலைவர்களான
முசோலினியைப் போன்றோ ஹிடலரைப் போன்றோ கவர்ச்சியான தலைவர்கள் இந்தியாவில் உருவாகவில்லை
என்பதை ரவிக்குமார் 2002 இல் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் கூறுகிறார். ஆக ஹிட்லர்
கூறும் பாசிசக் கொள்கைகளைக் கொண்டு குஜராத் மாநிலத்தில் மட்டுமே ஆட்சியைப் பிடித்திருந்தது
என்பதே 2014 வரைக்குமான நிலையாக இருந்தது. ரவிக்குமாரின் மேற்கண்ட கூற்றைப் பொய்யாக்கும் விதமாக 2014 ஆம்
ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அமைந்துவிட்டது. ஏனெனில் பாஜக நரேந்திர மோடி என்கிற ஒரு
கவர்ச்சியான தலைவரைத் தேர்தலில் நிறுத்தி 2014 இல் ஆட்சியைப் பிடித்துவிட்டது. 2014
இல் இம்மாற்றம் நிகழ்ந்ததற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளாக இன்று நடைபெற்றுக்
கொண்டிருக்கும் இந்துத்துவ அரசியலின் அதிகார வடிவத்தையும் ரவிக்குமாரின் ‘கும்பலாட்சியிலிருந்து
கொடுங்கோன்மைக்கு’ என்ற நூலில் பார்க்க முடிகிறது.
2014 தேர்தலும் ’முற்போக்கு’ அரசியல் கட்சிகளும்
2014
தேர்தலுக்கு முன்பு இருந்த எதிர்க்கட்சிகளின் நிலையையும் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கும்
பாஜகவுக்கும் இருந்த நேரடிப் போட்டியையும் ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’
என்ற நூலில் தொடக்கத்தில் உள்ள சில கட்டுரைகள்
நினைவுப்படுத்துகின்றன. பாஜக போன்ற மதவாத அமைப்பை எதிர்ப்பதற்கு காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும்
தங்களை மதச் சார்பற்றவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டிருப்பது
போலவே அன்றும் 2014 தேர்தலில் ஏற்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக் காட்டும் ரவிக்குமார்
எதிர்க்கட்சிகள் தங்களை மதச்சார்பற்றவர்களாகக் காட்டிக் கொண்டு சிறுபான்மையினருக்காகக்
குரல் கொடுப்பார்களேயன்றி அவர்கள் ஒருபோதும் தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க
மாட்டார்கள் என்கிறார். ரவிக்குமாரைப் பொறுத்தவரை இரண்டு தேசியக் கட்சிகளையும் ‘தேசியத்
தீமைகள்’ என்கிறார். மேலும் தலித்துகள் இரண்டு தேசியத் தீமைகளையும் நிராகரிக்க வேண்டும்
என்றும் சொல்கிறார். தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகளையும் கருத முடியாது
என்றும் ஏனெனில் ஒவ்வொரு பிராந்திய கட்சியும் தொடக்கத்தில் தன்னுடைய மாநில நலனுக்காகப்
பேசினாலும் தன் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அப்பட்டமான சாதிக் கட்சிகளாகி விட்டன
என்றும் அவற்றைச் சாடுகிறார். மேலும் சாதியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆதிக்க
மனோபாவத்துடன் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை குறிப்பாக தலித்துகளை அடக்கி ஒடுக்குகின்றன
என்கிறார். இதனை “வருண அமைப்பு உருவாக்கித் தந்திருக்கும் சமூக ஆதிக்கத்தோடு அரசியல்
மற்றும் நிர்வாக ஆதிக்கமும் அவர்கள் கையில் சேரும்போது அந்த அசுரபலத்தை அவர்கள் சமூக
அடுக்கில் தம்மைவிடக் கீழே வைக்கப்பட்டிருக்கும் தலித்துகளிடம்தான் சோதித்துப் பார்க்கிறார்கள்”
(2017: ப.17) என்று குறிப்பிடுகிறார்.
அப்போது காங்கிரசிற்கு உறுதியான
தலைமை இல்லாமையும் இந்தியா முழுக்க
காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சி ஏற்படுத்தியிருந்த அவநம்பிக்கையையும் அப்போது கண்கூடாகப்
பார்க்க முடிந்தது. ரவிக்குமார் போன்ற அறிவுஜீவிகள் அப்போது இருந்த நிலையில் காங்கிரசை
ஏற்றுக்கொள்ளாமையும் அதே நேரத்தில் காங்கிரசிற்கு மாற்றாக பாஜகவையும் மாநிலக் கட்சிகளையும்
பார்க்காமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்
என்கிற தெளிவு ஆட்சியில் யாரை அமர்த்தக் கூடாது என்பதில் அறிவுஜீவிகளுக்கு இருந்த இந்தத்
தெளிவு அப்போதைய தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெரிய அளவில் தாக்கத்தைச் செலுத்திவிடவில்லை.
ஏனெனில் காங்கிரசுக்கு மாற்றாக எந்த நம்பிக்கையும் அப்போதைய அரசியல் களத்தில் தென்படாமையினால்
விளைந்தது. அப்போதைய காங்கிரசின் மீது இருந்த அதிருப்தி, எதிர்க்கட்சிகள் ஓரணியில்
திரளாமை, பல அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் போன்றவை மட்டுமல்லாமல் கார்ப்பரேட்
ஊடகங்கள் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்த அப்போதைய குஜராத்தின்
முதல்வர் நரேந்திர மோடியை காங்கிரசுக்கு மாற்றான மிகப் பெரும் ‘பிம்பமாக’ மக்களிடம்
காட்டி வந்ததுமேயாகும். அப்போதிருந்த இருதுருவ அரசியல் என்பது காங்கிரசுக்கு ஆதரவாகவும்
எதிராகவும் என்பதாகத் தான் ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டின. அப்போதிருந்த சூழலில்
பாஜகவுக்குப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்ததில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மேற்சொன்ன காரணங்களில் முக்கியக் காரணமாக
அமைந்துவிட்டது என்பதும் அப்போதிருந்த அரசியல் சூழலில் மறுக்க முடியாத உண்மையாகும்.
பாஜக 2014 தேர்தலில் வென்றதற்குப் பின்பு மதவாத நடவடிக்கைகள் முன்பிருந்ததை விட
வேகம் பிடித்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரசின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுமிடம்
பாஜகவின் வெளிப்படையான மதவாதக் கொள்கையேயாகும். பாஜகவின் 2014 பாராளுமன்றத் தேர்தல்
வெற்றி ஒரு விதத்தில் இந்துத்துவ மதவாதம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவே கருதப்பட்டது.
ஆனால் இதை பாஜக வின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலிருந்தே
ரவிக்குமார் வெளிப்படுத்தியிருப்பதைப் பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்:
- பாஜக
அதிகாரத்தை மையப்படுத்த விரும்புகிறது. ஆனால் அதைப் பரவலாக்குவதே முக்கியம்.
- இந்த
நாட்டை வழிநடத்த ஒரே ஒரு தலைவரால் தான் முடியுமென அவரை முன்னிறுத்துவது அதிகாரக்
குவிப்புக்கே வழிவகுக்கும்.
- பெண்களுக்கு
அதிகாரம் வழங்கப்படாதவரை நாடு முன்னேற முடியாது.
- நமது
அரசியல் அமைப்பு மூடுண்டதாக இருக்கிறது. அதில் திறப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இப்பார்வை சர்வாதிகாரத்தை எதிர்கொள்வதற்கான சில ஆலோசனைகளை வழங்குவது போல் மேற்போக்கில்
பார்த்தாலும் ஒரு ஆழமான செயல்திட்டத்தை முன்வைக்கிறது. இந்தியாவின் பாசிச எதிர்ப்புக்கான
செயல்திட்டங்கள் என்ற அளவில் இன்று மேற்சொன்னவை காலப் பொருத்தப்பாடுடையதாகும். பாஜக
ஆட்சியமைத்த 2014 இல் தீவிரமான வலதுசாரியான பாஜக காங்கிரசை விட பல மடங்கு மத அடிப்படைவாதத்தைத்
தூண்டிவிடும் என்று சொல்கிற ரவிக்குமார் இந்துத்துவ மதஅடிப்படைவாதக் கருத்தியலை எதிர்கொள்ள
அத்தனை முற்போக்குச் சக்திகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலத் தேவையை உணர்த்துகிறார்.
இந்துத்துவத்தின் மொழிக் கொள்கையும் கல்விக்கொள்கையும்
ஒரு செய்தி பொதுத் தளத்தில் அதிகமாகப்
பேசப்படும் போது அவற்றின் பொது முக்கியத்துவம் கருதி அதனைக் குறித்துப் பலரும் கருத்துத்
தெரிவிப்பது என்பது வெகுசனத் தளத்தில் தவிர்க்க முடியாதது. குறிப்பாக அரசியல் அமைப்புகளில்
இருப்பவர்கள் இச்செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவார்கள். ரவிக்குமாரும் அதே போல் தான்
என்றாலும் அவற்றிலிருந்து மாற்றுச் சிந்தனைகளைக் குறிப்பிட்டு பிரச்சனைகளுக்குத் தற்காலிகமாகத்
தீர்வுகளை முன்வைக்காமல் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்கிறார்.
முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான
காலச் சூழல் இன்று ஏற்பட்டிருக்கும் நேரத்தில் ரவிக்குமாரின் இந்துத்துவ எதிர்ப்பரசியல்
குறித்தும் அதில் அவரின் அணுகுமுறை குறித்தும் ஆராய வேண்டிய தேவையுள்ளது. பாஜக
ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடனேயே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமாக தேசிய
அளவில் பண்பாடு தொடர்பான அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி எழுந்த வண்ணம் இருந்தன(அவை இன்றும்
தொடர்கின்றன). பாஜகவின் ஒவ்வொரு பண்பாட்டுத் தாக்குதலிலும் ரவிக்குமார் தன்னுடைய எதிர்வினைகளை
முன்வைத்திருக்கிறார் என்பதை இக்கட்டுரைகள் சான்று பகர்கின்றன. மேலும் அக்கட்டுரைகளில்
பாஜக முன்னெடுக்கிற அரசியல் செயல்திட்டங்கள் யாவும் மத அடிப்படைவாதப் பாசிசத்தை முன்னெடுப்பதற்கான
செயல்திட்டங்களாக உள்ளதை தோலுரித்துக் காட்டத் தவறவில்லை.
இந்தியப் பாசிசம் என்பது மற்ற நாடுகளில் உள்ள
பாசிச வடிவங்களோடு ஒப்பிடுகையில் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் அவற்றிற்குத் தனித்துவமான
பண்புகளும் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு
முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் பின்பு அரசு நிறுவனங்களின் சுயேச்சைத் தன்மையை
அழிப்பதும் இவை எல்லாவற்றையும் விட கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை அதாவது இந்துப்
பெரும்பான்மை வாதத்தை வெகுசனப்படுத்துவது என்பதே இந்துத்துவவாதிகளின் செயல்திட்டமாக
இருக்கின்றது. ஆனால் இதற்குப் பெரும் தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமும்
அது வழங்கியிருக்கின்ற ’ஜனநாயகமுமே’ ஆகும். ’ஜனநாயகத்தை’ அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில்
வெளிப்படையாக எதையும் செய்ய முடியாது என்பதால் பல்வேறு சர்ச்சைகளை, வெறுப்புப் பேச்சுகளை
’நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக’ ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன பாஜக அரசும் பிற இந்துத்துவ
அமைப்புகளும்.
இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற குரல் பாஜக ஆட்சியமைத்தவுடனேயே
கேட்கத் தொடங்கியது அவற்றில் முக்கியமான சர்ச்சைகளில் ஒன்று. தமிழ்ச் சமூகம் நீண்ட
நெடும்காலமாகவே இந்தித் திணிப்பை எதிர்த்தே வருகிறது. இது குறித்து ஒரு கட்டுரையில்
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை சுருக்கமாகச்
சொல்லி அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிற பிரச்சனையையும் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார்.
இன்னும் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியே அலுவல் மொழியாக இடம்பெற்றிருப்பதும் மற்ற
பிராந்திய மொழிகள் இடம் பெறாமையும் இதற்கு முக்கியமான காரணமாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்க்கிற அதே நேரத்தில் தமிழைத் தேசிய மொழியாக அறிவிக்கச்
செய்வது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியமான முன்னெடுப்பாக அமையும்
என்று கூறுகிறார். இது குறித்து எந்த அளவுக்கு இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் பேசுகிறார்கள்
என்பது கேள்விக்குறியேயாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளையும் அதன் தன்மைகளையும்
வெளிப்படுத்தும் இக்கட்டுரை ரவிக்குமாரின் நுட்பமான பார்வையைப் புலப்படுத்துகிறது.
இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற சர்ச்சையைத் தொடர்ந்து கல்வியைக்
காவிமயமாக்கும் செயல்திட்டத்தில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க நினைத்தது
பாஜக அரசு. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் ரவிக்குமார் கல்வியை ஜனநாயகப்படுத்துவதை
இதற்குத் தீர்வாக முன்வைக்கிறார். அதற்குக் கல்வியை மத்தியப் பட்டியலிலிருந்து மாநிலப்
பட்டியலுக்கு மாற்றுவதே கல்வியை ஜனநாயகப்படுத்தப்படுவதற்கான முதல் படியாகக் குறிப்பிடுகிறார்.
தன் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக சட்டங்களை ஆதாரமாகக் காட்டிடும் அவர் தற்போதைய
சூழலில் எந்தளவுக்கு அச்சட்டங்கள் பொருத்தப்பாடுடையன என்பதைச் சொல்லி அதற்கான புள்ளிவிவரங்களையும்
தருகிறார்.
சட்டங்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டு ரவிக்குமார்
முன்வைக்கும் கருத்துகள் பல மாற்றுச் சிந்தனைகளாக இருக்கின்றன. இதற்கு மேலுமொரு உதாரணமாக
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதற்கு நாடேங்கும் பலத்த எதிர்வினைகள் உண்டாகின. இந்த
சர்ச்சையில் பலரும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் இங்கு ஒரு சார்பினரின் புனித
நூலை மட்டும் தேசிய நூலாக அறிவித்தால் மற்ற மதத்தினரும் தங்களுடையதை தேசிய நூலாக அறிவிக்க
வேண்டும் என்று வற்புறுத்துவர்; இதனால் மத ரீதியிலான பகைமை வளரும் என்றனர். மற்றொரு
தரப்பினர் பகவத்கீதை வருணாசிரமக் கொள்கையை ஆதரிக்கிறது. எனவே அதை ஏற்க முடியாது என்றனர்.
இது தொடர்பாக கருத்துக் கூறியவர்கள் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத நூல் ஒன்றை
தேசிய நூலாக அறிவிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறதா என்று பார்க்கத் தவறியதைச் சுட்டிக்காட்டுகிறார்.
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின்
தேசியக் கொடி, தேசியச் சின்னம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு 1950 ஆம் ஆண்டு குடியரசில்
அறிவிக்கப்பட்டவை. இந்தியாவிற்கென்று தனிச் சின்னம், கொடி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளனவே
தவிர தேசியப் புனித நூல் ஒன்றை அறிவிப்பதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்
காட்டுகிறார். ஒரு சர்ச்சையில் பலரின் கருத்திற்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் யாரும்
பார்க்காத கோணத்தில் பார்க்கிற அவருடைய பார்வையும் இங்கு நோக்கத்தக்கது.
இந்தியாவைச்
சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கு ’ஒரே நேரத்தில் தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டு வர
எண்ணி அது குறித்து சர்ச்சைகளைக் கிளப்பியது. இதைவிட நாடுமுழுவதும்
ஒரே கல்வி முறையைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதும் அதன் தொடர்ச்சியாகத் தான் பார்க்கப்பட
வேண்டியது. இவையெல்லாமே இந்தியாவை ஒற்றைமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளேயாகும். மேலும்
ஒரு தலைமுறையையே பாசிசத்தின் பிடிக்குள் கொண்டு வரும் முக்கியமான நடவடிக்கை என்றும்
கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.
இந்தியச் சமூகம் பாகுபாடுகளால் நிறைந்த
சமூகம். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆண்டு கொண்டிருந்தாலும் அவற்றினிடையே
வேறுபாடுகள் நிறைந்திருக்கின்றன. இந்த வேறுபாடுகளில்
தலையாயது சாதிய ஏற்றத்தாழ்வுகள். அடுத்ததாக மதவாத அணுகுமுறைகள். வேறுபாடுகளை வெறுப்புக்களாக
மாற்றித் தூண்டி விடுவதன் மூலமும் இந்துத்துவவாதிகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
கல்வி நிலையங்களில் முக்கியமாக மத்தியப் பல்கலைக்கழகங்களில் சாதியப் பாகுபாடுகள் மிகவும்
வெளிப்படையாக காட்டப்பட்டு தலித் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடராமல் போகின்றனர்.
மேலும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். 2016 இல் ஹைதராபாத்
மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்கிற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து
கொண்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியப் பல்கலைக்கழகங்களில்
சாதியப்பாகுபாடுகள் நிறைந்துள்ளன என்பதையும் அதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும்
தொடர்கதையாக இருப்பதையும் கண்டிக்கிறார் ரவிக்குமார். “2014-15 ஆண்டில் எடுக்கப்பட்ட
புள்ளிவிவரத்தின் படி இந்தியா முழுவதும் 3,32,72,722 மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.
இதில் பிஎச்டி ஆய்வில் ஈடுபடுவோர் வெறும் அரை சதவீதம்தான். அந்த அரை சதவீதத்தில் எஸ்சி/எஸ்டி
பிரிவினர் இடம் பெறுவதென்றால் அது எவ்வளவு கடினம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அப்படி இடம் பிடிப்போரையும் நமது பல்கலைக்கழகங்கள் தற்கொலையை நோக்கி விரட்டிக்கொண்டிருக்கின்றன.”
(ப.125) என்கிறார். மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஏழை எளிய மாணவர்களின் கொடுங்கனவாக, சாதியம்
தலைவிரித்தாடும் கூடாரமாக இருப்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிரூபணம் செய்கின்றன.
புதிய கல்விக் கொள்கையில் பாகுபாடு தொடர்பாக பேசப்பட்டிருப்பன வெறுமனே மேம்போக்காக
இருப்பதாக ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார். ரோஹித் வெமுலாவைப் போன்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு
பலியானவர்களுக்கு தரப்படும் நீதி என்பது எல்லோருக்கும் சமமான கல்வியைத் தருவதற்கான
உத்தரவாதத்தைத் தருவதும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுமாகும் என்று
இதற்கான தீர்வாக முன்வைக்கிறார்.
ரவிக்குமாரின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்
குறித்த பார்வை மிக முக்கியமானது. ஒரு சமூகத்தை பொருளாதாரத்தை மட்டுமே கொண்டு அளக்கக்
கூடாது; மாறாக பண்பாட்டுக் கொந்தளிப்புகளையும் சரியாகப் புரிந்து கொண்டாலொழிய அந்த
சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்று பண்பாட்டு ஆய்வாளர்கள் கூறுவர்.
2017இல் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தமிழ்ச் சமூகம் நடத்திக் காட்டிய திருவிழாக்
கொண்டாட்டம்(CARNIVAL) என்று மிகைல் பக்தினுடைய கோட்பாட்டை வைத்து விளக்கியது ரவிக்குமாருடைய
பண்பாடு குறித்த ஆய்வுப் பார்வையை தெள்ளெனப் புலப்படுத்துகிறது. தமிழ்நாடு கடந்த காலங்களில்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பண்பாட்டுப் போராட்த்தை முன்னெடுத்ததும் தமிழ்ச்
சமூகம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நடத்தியதையும் ஒற்றுமைப்படுத்தி “தமிழ்நாட்டு இளைஞர்கள்
எதிர்காலங்களில் இன்னும் பல கொண்டாட்டங்களை உருவாக்குவார்கள். அதற்கான கனவை இந்தப்
போராட்டங்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றன.” என்று மதிப்பிடுகிறார்.
இந்துத்துவப் பெரும்பான்மைவாதமும்
பாசிசமும்
இந்துப் பெரும்பான்மை தொடர்பாகவும் கிறித்துவ,
இசுலாம் முதலிய சிறுபான்மை மதங்களைச் சமூகப் பண்பாட்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாக்குவதும்
முன்பை விட அதிகரித்திருப்பது நாட்டின் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
அவற்றிலொன்று தான் மதமாற்றத் தடைச் சட்டம். மதமாற்றம் என்பது சமூகத்தில் மேல்தட்டு மக்களிடம் காணப்படுவதை விட இன்னும் குறிப்பாகச்
சொல்லப்போனால் ஆதிக்க சாதிகளிடம் காணப்படுவதை விட சமூகத்தின் கீழ்த்தட்டுப் பிரிவினரிடம்
தான் அதிகமாகக் காணப்படுகிறது. ஏனெனில் சாதியின் கொடுங்கைகள் தலித்துகளை சமூகப் பொருளாதார
நிலையில் ஒடுக்கி உழைப்பைச் சுரண்டும் ஒரு மூடுண்ட அமைப்பாக இருக்கிறது. இதனால் தலித்துகள்
சாதியின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மதமாற்றத்தை ஒரு உபாயமாகப் பயன்படுத்துவது இன்றும்
தொடர்ந்து கொண்டு வருகிற ஒன்று. மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் இந்து
மதத்தைக் காப்பாற்ற நினைப்பது போல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் உண்மையில் இச்சட்டம்
இந்து மதத்தின் வருணாசிரம முறையைத் தொடரச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை
எளிதில் புரிந்து கொள்ளலாம். அதேநேரம் இந்துமதத்தின் கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்று
சொல்லிக் கொள்கிற ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பிற இந்துமதவாத அமைப்புகள் மதமாற்றத்தின்
மூலம் மற்ற மதங்களைப் பின்பற்றுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்து மதத்திற்கு ஆபத்தை
விளைவிக்கும் என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். அதன் உண்மையான அரசியலை ரவிக்குமார்
“நிலவியல் ரீதியாக தலித்துகள் சேரி என்னும் சிறைகளிலும் ஆதிவாசிகள் வனப்பிரதேசங்களிலும்
அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சமூகவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அடைத்துவைக்கும்
முயற்சியே மதமாற்றத்துக்கு விதிக்கப்படும் தடை” என்று மதமாற்றத்துக்குப் பின்னால் உள்ள
துல்லியமான அரசியலை வெளிப்படுத்தி அதனால் பாதிக்கப்படுவது தலித்துகள் தான் என்பதை வெளிப்படுத்துகிறார்.
மேலும், மறுமதமாற்றம் என்று மற்ற மதங்களிலிருந்து இந்துமதத்திற்கு மாறவேண்டும் என்று
சொல்வதற்குப் பின்னாலும் அதே போன்ற போலித்தனம் இருப்பதையும் அவர் காட்டத் தவறவில்லை.
அதில்
சாதி குறித்து நடைமுறை உண்மையை வெளிப்படுத்தும் வண்ணமாக “சாதி என்பது அருவமான கருத்தியல்
எல்லைகளை மட்டுமின்றி ஸ்தூலமான நிலவியல் எல்லைகளையும் கொண்டிருக்கிறது. அருவமான எல்லைகளைக்
கடந்தாலும் கூட ஸ்தூலமான எல்லைகளைக் கடப்பதற்கு சாதியவாதிகள் அனுமதிப்பதில்லை. சாதியின்
செயல்பாடு நுட்பமானது; நிலவியல் எல்லைகள் நெகிழ்வாயிருக்கும் நகர்ப்புறச் சூழலில் கருத்தியல்
எல்லைகளை வலுவாக்குவது; கருத்தியல் எல்லைகள் கடக்கப்படும் இடங்களில் நிலவியல் எல்லைகளைத்
தாண்ட முடியாமல் செய்வது – என இரட்டைத் தன்மையோடு செயல்படுகிறது. மதமாற்றமோ மறுமதமாற்றமோ
இந்த எல்லைகளை முற்றாக அழிப்பதில்லை.” என்று மதமாற்றம் என்பதும் மறுமதமாற்றம் என்பதும்
தலித்துகளுக்கு உரிய பாதுகாப்பைத் தருவதில்லை என்பதோடு தலித்துகளுக்கு ஏற்படும் கொடுமைகளை
இந்துத்துவ அமைப்பினர் கண்டிப்பதில்லை என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.
இந்துத்துவவாதிகள் கைக்கொண்டிருக்கும்
முக்கியமான அணுகுமுறை வெறுப்புப் பிரச்சாரம். இந்துக்களிடம் கிறித்தவர்கள், முஸ்லிம்கள்
குறித்தும் ஆதிக்க சாதிகளிடம் தலித்துகளைக் குறித்தும் வெறுப்புப் பிரச்சாரத்தை அவர்கள்
செய்வர். இது குறித்து ஒரு கட்டுரையில் விவாதிக்கிறார். ஒவ்வொரு முறையும் ஐநா மனித
உரிமைக் கவுன்சில் கூட்டம் நடக்கும் போதும் பொதுவெளியில் ஏற்படுகிற விவாதங்களில் ஒன்று
இலங்கை ஈழப்பிரச்சனை தொடர்பானதாகும். ஆனாலும் இதைத் தவிர வேறு சில விடயங்களும் அங்கு
விவாதிக்கப்படுகின்றன என்று குறிப்பிடும் ரவிக்குமார் அது குறித்து நாம் பெரிதாக அக்கறை
கொள்வதில்லை என்கிறார். மேலும் அவர் கூறும் போது வெறுப்புப் பேச்சை ஊடகங்களில் பரப்பப்படுவதைக்
கண்காணிக்கும் விதமான ஒரு அமைப்பை ஐநா உருவாக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறார். 2014
ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய ஊடகங்களில் அதிகமான வெறுப்புப் பேச்சுகள் குறிப்பாக சிறுபான்மையினரை
முன்வைத்துப் பரப்பப்படுகின்ற நிலையில் அதனைத் தடுக்கும் விதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்துகிறார். பாசிசம் தன்னுடைய வெகுசன ஆதரவுத் தளத்தைத்
தக்க வைக்கும் விதமாக வெகுசன ஊடகங்களைக் கைப்பற்றி பாசிசக் கருத்துகளை மக்களிடம் பரப்பும்
நடவடிக்கைகளைச் செய்யும். இதனால் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள குழுவிற்கு சிறுபான்மையினர்
மீது வெறுப்பையும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துமாறு செய்யும்.
இதனைக் கருத்தில் கொண்டே உலக அமைப்பான ஐநா ஊடகங்களைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கிட
வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். இப்படியான தொலைநோக்குப் பார்வை இந்தியாவிலுள்ள
நிலைமையை மனதில் கொண்டு மொழியப்பட்டது என்பதும் இம்முயற்சியே எதிர்காலத்தில் பாசிசம்
எந்த வடிவத்திலும் இங்கு வெளிப்படாமல் தடுக்கும் என்பதையும் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.
அடுத்ததாக
இந்தியாவிலுள்ள முற்போக்குச் சக்திகள் பாசிசத்தை எதிர்ப்பதற்கு முன் தாங்கள் தங்களின்
அரசியல் அணுகுமுறை குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறார்.
பாசிசத்தை எதிர்க்கும் முற்போக்குச் சக்திகள் முதலில் இந்தியச் சமூகத்தில் நிலவி வருகின்ற
சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நடைமுறைத் தேர்தல் அரசியலில் இடையீடு செய்வதைத் தடுக்க
வேண்டும். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்கிற நிலைமை
தான் இன்று உள்ளது. முக்கியமாக தலித்துகளின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எந்த அரசியல்
கட்சிகளும் ஏன் சமூகநீதி பேசும் கட்சிகளும் கூடச் செய்வதில்லை. இதனை அரசியல் தீண்டாமை
என்று குறிப்பிடும் ரவிக்குமார் தலித்துகளின் மீது சுமத்தப்படும் சமூகத் தீண்டாமையை
விட இந்த அரசியல் தீண்டாமையையே மிக ஆபத்தானது என்கிறார். மேலும் “அரசியல் தீண்டாமையை
அகற்றுவது ஜனநாயக சக்திகளின் கடமையென்றாலும் அதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய
பொறுப்பு தலித் இயக்கங்களையே சாரும்” என்கிறார். அதாவது தலித்துகளை வெறும் வாக்குகளாக
மட்டும் பார்க்கிற அரசியல் கட்சிகள் தலித்துகளை வேட்பாளர்களாக பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
இந்த அரசியல் தீண்டாமையைக் களைந்தெடுக்கக் கட்சிகள் கொள்கைகளை மட்டும் வகுக்காமல் அவற்றைச்
செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.
இது ஒரு புறமிருக்க வகுப்புவாதப் பெரும்பான்மை
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்காமலிருக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தை ஜனநாயகப்
பூர்வமாக உருவாக்கிய அம்பேத்கர் இந்தியாவிலிருக்கும் வகுப்புவாதப் பெரும்பான்மை குறித்தும்
இந்தியாவில் இருக்கும் பாராளுமன்ற ஜனநாயக முறை குறித்தும் பின்வருமாறு சொல்கிறார்:
“மேலை நாடுகளிலே இருப்பதைப் போன்ற பாராளுமன்ற ஜனநாயக முறையை நாம் இங்கே ஏற்படுத்தக்கூடாது.
பெரும்பான்மையின் கையில் அதிகாரத்தைக் கொடுக்கும் அந்த முறை நமக்கு அப்படியே பொருந்தாது.
மேலை நாடுகளில் இருக்கும் பெரும்பான்மை ஒரு அரசியல் பெரும்பான்மை – பொலிடிகல் மெஜாரிட்டி-
அது தனிநபர்களின் விருப்பத்தினால் உருவாகிறது, அது மாறக்கூடியது. அங்கிருக்கும் பெரும்பான்மை
திறந்த தன்மை கொண்டது. ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை அரசியல் பெரும்பான்மை
அல்ல. இது ‘வகுப்புவாதப் பெரும்பான்மை – கம்யூனல் மெஜாரிட்டி. இது ஒருவரின் பிறப்பால்
தீர்மானிக்கப்படுகிறது. இது மாறக்கூடியதல்ல, இது மூடுண்ட தன்மை கொண்டது” (ப.88) என்கிறார்.
மேலும் பெரும்பான்மையின் கையில் அதிகாரம் என்ற மேலை நாட்டு முறையைப் பின்பற்றி இங்கிருக்கும்
வகுப்புவாதப் பெரும்பான்மையின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அது யதேச்சதிகாரமாக,
சர்வாதிகாரமாகத்தான் முடியக்கூடுமென்றும் எனவே நம் முன்னால் இருக்கும் பிரச்சனை பெரும்பான்மையை
எப்படிக் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது தான் என்றும் அம்பேத்கரின் எச்சரிக்கையை இன்று
பொருட்படுத்தித் தான் ஆக வேண்டிய சூழல் உள்ளது. இத்துடன் அதிகாரப்பரவலாக்கத்தைச் சாத்தியப்படுத்த
வேண்டும் என்பதையும் ரவிக்குமார் உணர்த்தத் தவறவில்லை.
வாயுரிசமும் பாசிச இணைவும்
பண்பாட்டு
நிலையில் இந்தியா முழுவதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்துத்துவப் பாசிசக் கருத்துகளை
மக்களிடம் கொண்டு சேர்த்து ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் அது எளிமையானதாக அல்லாமல் ‘மக்கள் மொழியில்’ ஒரு ஆழமான உரையாடலாகவும்
அமைய வேண்டும். இது வெகுசனப்படுத்தலுக்கான முக்கியமான செயல்திட்ட அம்சமாகும். அந்தவகையில்
அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள், வெளியிடப்படும் செய்திகளில் ஓரளவுக்கு மக்களிடம் பரபரப்பாகப்
பேசியவற்றைக் கொண்டே இவ்வுரையாடலைச் சாத்தியப்படுத்த இயலும் என்பதை ரவிக்குமாரின் வாயுரிசம்
தொடர்பான கட்டுரையின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வாயுரிசம் எனப்படும் வக்கிரச்
செயல்பாட்டுக்கும் பாசிசத்திற்கும் இடையேயான பிணைப்பை, கலாச்சாரத் தளத்திலும் அரசியல்
தளத்திலும் அவையிரண்டும் உருவாக்கும் தாக்கத்தைக் கொண்டு புரிய வைக்க முயல்கிறார்.
ஒரு முறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
கோவாவில் துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்த இரகசியக்
கேமிராவைக் கண்டுபிடித்து அந்தக் கடை உரிமையாளரைக் கைது செய்ய வைத்தார். இது தொடர்பாக
தன்னுடைய கருத்தைக் கூறும் ரவிக்குமார் ஒரு உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்ட ரகசியக்
கேமிராவினால் எப்படி ஒரு தனிப்பட்ட நபரின் அந்தரங்கம் பாதுகாப்பில்லாமல் போகிறதோ அதே
போல் தான் பொது மக்களின் அந்தரங்கம் என்பதே இல்லாமல் அழித்து எல்லோரையும் வேவு பார்க்கும்
ஒரு அரசு பொது மக்களையும் பாதுகாப்பில்லாமல் செய்கிறது என்கிறார். முன்னது வாயுரிசம்
எனும் வக்கிரச் செயல்பாடு என்றால் பின்னது பாசிசம் எனும் கொடுங்கோன்மை. இரண்டுக்கும்
இப்படியான ஒற்றுமையைக் குறித்து விளக்கியவர் பாசிச மனோபாவத்துக்கு வாயுரிசம் இயைபான
ஒன்றாக இருக்கிறது என்கிறார். “அரசியல் தளத்தில் பாசிஸத்தை எதிர்ப்பது போலவே கலாச்சாரத்
தளத்தில் வாயுரிசத்தை நாம் எதிர்க்க வேண்டும்” (ப.75) என்றும் கூறுகிறார். தற்கால டிஜிட்டல்
யுகத்தில் வக்கிரச் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருப்பதைச் சுட்டிக் காட்டியவர்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கான தண்டனைச் சட்டங்கள் சரியாக வரையறுக்கப்படவில்லை
என்றும் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக பெண்களின் அந்தரங்கம் மட்டும் பாதிக்கப்படும்போது
அதனைக் குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்களைப் போலவே ஆண்களையும் திருநங்கைகளையும்
இச்சட்டம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அந்தரங்கத்தைக் காக்கும் சட்டப்பிரிவுகள்
பாலின வேறுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
கருத்துச் சுதந்திரமும்
ஒடுக்குதல்களும்
2014
ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிகளவில் கருத்து சுதந்திரத்தைக் குறித்து நாடெங்கும் பெரிய
அளவில் விவாதம் நடக்கிறது. ஏனெனில்
பல எழுத்தாளர்கள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் இந்துத்துவவாதிகளால்
தாக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் பெரிய அளவில் அரங்கேறியது தான் இதற்கு மிக முக்கியமான
காரணம். குறிப்பாக தமிழ்நாட்டில் பெருமாள் முருகன் தான் எழுதிய மாதொருபாகன் நாவலுக்காக
ஒடுக்கப்பட்டது பெரிய சர்ச்சையாக மாறியது. இவை தொடர்பாக அறிவிஜீவிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும்
வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் போராட
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரவிக்குமாரின் பெருமாள் முருகன் தொடர்பில் எழுதப்பட்ட
கட்டுரையிலும் இதைத் தான் பார்க்க முடிகிறது. மேலும் ஒருவரை எளிதில் சிறுமைப்படுத்தும்
விதமான செய்திகள் பொது வெளியில் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறு
சிறுமைப்படுத்துவது தனிப்பட்ட நபரோ அல்லது குழுவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவர்களைக் குறித்து பொதுவெளியில் பரப்பப்படும் அவதூறுகளினால், வெறுப்புப் பேச்சுகளினால்
அச்சுறுத்தலையும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ளலாம். இதைத் தடுப்பதற்கு ஊடகங்கள்
மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார் ரவிக்குமார்.
இது பாசிசத்தைத் துவக்கத்திலேயே தலைதூக்குவதை எதிர்த்து அழித்துவிடுவதற்கான வழியென்று
கூறுகிறார்.
இந்த நிலையில் அரசியல் அதிகாரம் பெற்றிருக்கக்
கூடிய பாஜகவையும் இந்துத்துவக் கொள்கையையும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய காலச் சூழலைக்
குறிப்பிடுகிறார். இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவில் நடைபெறுகின்ற ‘ஜனநாயக’
வழியிலான தேர்தலிலும் பிரதிபலிக்கின்றன. இந்த வகையான ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திக்
கொண்டு அரசியலமைப்புச் சட்டம் வழங்குகின்ற ‘ஜனநாயக’ வழியில் நடைபெறக்கூடிய தேர்தலிலும்
வகுப்புவாதக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்து விடும் என்பதற்கு பாஜக சரியான உதாரணமாக
நிகழ்கால வரலாற்றில் அமைந்து விட்டது. அரசியல் பெரும்பான்மையை வகுப்புவாதப் பெரும்பான்மையுள்ள
ஒரு அமைப்புப் பிடித்துவிட்டால் அது சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுத்து விடும் என்ற அம்பேத்கர்
சொன்னதை மேற்கோள் காட்டும் ரவிக்குமார் இக்கூற்று எந்தளவுக்கு உண்மையாகி விட்டது என்பதை
இன்றைய அரசியல் சூழலோடு பொருத்திக் கூறி அரசியல் பெரும்பான்மையுள்ள பாஜகவைத் தோற்கடிக்க
அனைத்து முற்போக்குச் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்கிறார்.
பாஜகவின் நவீன தாராளவாதப் பொருளாதாரக்
கொள்கை
தாராளவாதக் கொள்கைக்கும் இந்துத்துவப்
பாசிசத்திற்குமான தொடர்பை ரவிக்குமார் பின்வருமாறு விளக்குகிறார்: “வகுப்புவாத அரசியலின்
பொருளாதார முகமாக நவீன தாராளமயம் அமைந்துள்ளது. எனவே வகுப்புவாதத்தை எதிர்ப்பதும் அதன்
பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதும் ஒருங்கிணைந்த போராட்டத்தின் அங்கங்களாக இருக்க
வேண்டுமே தவிர ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்கக் கூடாது.” (ப.138). வகுப்புவாதமும்
பொருளாதாரமும் கைகோர்த்தால் ஏற்படும் விளைவுகளை இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
மோடி அரசு பதவியேற்றதற்குப் பிறகு கருத்துரிமைப்
பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாடு முழுவதையும் பரபரப்புக்குள்ளாக்கிய
அதே நேரத்தில் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி முந்தைய
ஆண்டுகளில் இருந்ததை விடக் குறைத்ததும் மதச்சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியதும்
ஆகியவை தாம் மோடி அரசு ஒரு ஆண்டில் செய்து முடித்தது என்று ரவிக்குமார் மதிப்பிடுகிறார்.
ஒரு பக்கம் வெறுப்புப் பேச்சைத் தூண்டிவிட்டு
இந்துக்களில் ஒரு சிலரைப் பகடைக்காயாக்குவதும் அவர்களைக் கொண்டு சிறுபான்மையினருக்குப்
பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிற அதே நேரம் பொருளாதாரத் தளத்தில்
பாஜகவின் கொள்கை கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. மறுபக்கம்
இப்பொருளாதாரக் கொள்கைகளினால் இந்தியாவின் சாதாரண மக்களின் நலன்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை இதற்கான சரியான உதாரணமாகும். மேலும் ஆட்சிப்
பொறுப்பேற்ற பிறகு திட்டக்குழுவைக் கலைத்ததும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை அதிகரிக்காமல்
குறைத்து மாநிலங்களுக்கான உரிமைகளைப் பறித்த நடவடிக்கைகள் போன்றவை பொருளாதார நிபுணர்களே
கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளன.
இவை பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கை கார்ப்பரேட்டுகளுக்கு
ஆதரவாகவும் குடிமக்களைச் சுரண்டுவதாகவும் உள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மீத்தேன்,
ஹைட்ரோ கார்பன் போன்ற இயற்கை வளங்களைத் தனியாருக்கு விற்பதும் பொதுத் துறை நிறுவனங்களை
கண்டுகொள்ளாமல் இருப்பதும் இந்திய ஒன்றிய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கயையேக் காட்டுகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் சூழலில்
அங்கு மக்கள் போராட்டம் 2017 இல் ஏற்பட்டது. தனியார் மயத்தை எதிர்ப்பதுடன் மக்களின்
வாழ்வாதரமான விவசாயம் பாதிக்கப்படுவது, இயற்கை சீரழிக்கப்படுவது என்பவற்றில் அக்கறை
காட்டப்பட வேண்டும் என்று ரவிக்குமாரின் கட்டுரையிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
மேலும் மரபணு மாற்றப் பயிர்களால் செலவு மிகுதியாகி கடன் தொல்லையால் மனஉளைச்சலுக்காளாகி
பாதிக்கப்படும் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் அதைத் தடுக்கும்
நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாமல் இருப்பதை கண்டிக்கிறார்.
இந்தியாவில்
நிலவும் பாகுபாடுகளை வாக்கு வங்கி அரசியலுக்காகத் தூண்டி விட்டு அரசியல் செய்வது என்பது
முன்பு இருந்ததை விட இன்று சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கலவரத்தைத் தூண்டி
விடுவது வழக்கமாகி விட்டது. முக்கியமாக வட மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்கிற பெயரில்
மாட்டுக் கறி தின்பதைக் கண்டிப்பதும் அதற்காகக் கொலை கூடச் செய்யத் தயங்காமல் இருப்பதும்
மிகுந்த அபாயமான சூழலைக் காட்டுகிறது. அதே சமயம் இந்த மாதிரியான கும்பல் கொலைகளும்
மதக் கலவரங்களும் அதிகமாக நிகழ்வது இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாவதையே காட்டுகிறது. அந்த வகையில் மதவாத
அரசியலை எதிர்த்து நின்று சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.
அதற்கான முதல்படியாக சமூக, அரசியல் நிலையிலான பாகுபாட்டை ஒழித்துக் கட்டச் செயல்பட வேண்டும் என்றும் சில ஆலோசனைகளை நல்குகிறார். இது
அவரின் தேர்ந்த
அரசியல் மதிநுட்பத்தைப் பிரதிபலிக்கிறது.
இன்னொரு இடத்தில் இந்தியாவும் சீனாவும் ஒரே தொழில் கொள்கையைப் பின்பற்றினாலும்
சீனாவின் வளர்ச்சியை இந்தியாவில் எட்ட முடியாததற்குக் காரணம் இங்கிருக்கிற பாகுபாடான
தொழில்கொள்கை தான் என்பதைக் கூறுபவர் இங்கிருக்கிற கல்விமுறை வெறுமனே பட்டங்களைக் கொடுக்கின்றனவே
தவிர திறன்களை உருவாக்குபவையாக இருப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். இடஒதுக்கீடு
சமூக நீதியின் அம்சமாக இருந்தாலும் இன்றைய உலகமய தாராளமயக் காலகட்டத்தில் இடஒதுக்கீடு
என்பது ஒரு அளவுக்கு மேல் பயன்படாது என்கிறார். ஏனெனில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாத
தனியார் துறையில் கூட இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் கூட திறன் பெற்றவர்கள் இல்லாமலிருந்தால்
அதனால் பயனில்லை. அதனால் தலித்துகள் அரசாங்கத்தையே நம்பியிருக்காமல் தங்களுடைய திறன்களை
வளர்த்துக் கொள்ளுதலில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். “நாட்டிலுள்ள பொதுவளங்களில்
தமக்கான உரிமையைப் பெறுவதும், இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில் இடம்பிடிக்கும் அளவுக்குத்
திறன்களை வளர்த்துக்கொள்வதும் தான் இதற்குத் தீர்வு.” (ப.38) என்று தலித்துகளுக்கு
அறிவுரை சொல்கிறார். மேலும் தலித்துகள் தாங்கள் முன்னேறியதும் தங்களுடைய சமூகமும் வளர்வதற்கான
முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பத்து சதவீத கருப்பின மக்கள் தாங்கள்
முன்னேறியதும் மீதி இருக்கிற தொண்ணூறு சதவீத மக்களை உயர்த்தியதை எடுத்துக் காட்டி அதுவே
தலித்துகளுக்கு மிகச் சரியான உதாரணமாகக் காட்டுகிறார். மேலும் தலித்துகள் தங்களின்
முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு தங்களின் சமூக முன்னேற்றத்தில் அக்கறை இல்லாமல்
இருப்பின் இடஒதுக்கீட்டால் பலனடைந்த மூன்றாம் தலைமுறை கிராமப்புறத் தலித்துகளே தலித்துகளுக்கு
இடஒதுக்கீடு தரக்கூடாது என்று முன்வைக்கும்
நிலை ஏற்படும் என்றும் கவலைப்படுகிறார்.
ஆக பொருளாதாரத் தளத்தில் சமூக நிலையில் மட்டுமல்லாமல் அரசியல் நிலையிலும் கூட
சரியான பொருளாதாரக் கொள்கையே ஒடுக்கப்பட்ட மக்களை, விளிம்பு நிலையினரை முன்னேற்றமடைய
வைக்கும். இதனைக் கருத்தில் கொண்டே இன்று ஆட்சியதிகாரத்திலிருக்கும் பாஜக அரசும் அதன்
இந்துத்துவக் கொள்கையும் சமரசமின்றி எதிர்க்கப்பட வேண்டியதைத் தன்னுடையக் கட்டுரைகளில்
வெளிப்படுத்துகிறார். மேலும் இந்துத்துவப் பாசிசம் சமூகத் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும்
ஏற்படுத்தியிருக்கும் மோசமான விளைவுகளை அது நிகழ்த்தப்படும் போதே விழிப்பாக அவற்றிற்கு
எதிர்வினை புரிந்திருக்கும் ரவிக்குமாரின் கட்டுரைகள் சமகால வரலாற்றை ஆழப் புரிந்து
கொள்வதற்கான கருத்தியல் கருவியாகக் கொள்ள முடியும்.
(மணற்கேணி ஆய்விதழ் டிசம்பர் 2022 ஜனவரி 2023 அன்று வெளிவந்த ஆய்வுக்கட்டுரை)
கருத்துகள்
கருத்துரையிடுக